search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalapet obbery"

    காலாப்பட்டு அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே கனக செட்டிகுளம் மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். (வயது 70). இவர் தமிழக காவல்துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பக்க கிரில் கேட் கதவை மட்டும் பூட்டி விட்டு மனைவி மீனாட்சியுடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். சாவியை அருகில் வசிக்கும் தனது மகள் சுதாவிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    மறுநாள் சுதா பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ரங்கநாதன் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.8500 ரொக்க பணத்தை காணாமல் திடுக்கிட்டார்.

    யாரோ மர்ம நபர்கள் ஊருக்கு செல்வதை நோட்டமிட்டு துணிக்கு அடியில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சமாகும்.

    இதுகுறித்து ரங்கநாதன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ரங்கநாதனின் உறவினர்களோ அல்லது ரங்கநாதன் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களோ ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×