search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kannagi Temple"

    கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற உள்ளதால் தேனி தொகுதி வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ParliamentElection #Theniconstituency
    தேனி:

    17-வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்டம் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    அதேபோல் தேனி தொகுதியிலும் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மாவட்ட கலெக்டர், பல்லவி பல்தேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கையில், மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் ஏப்ரல் 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது.

    இதற்காக முதல் நாளே தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும். 2 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இரு மாநில எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளதால் பிரச்சினையை தவிர்க்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே தேனி பாராளுமன்ற தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சித்ரா பவுர்ணமி விழா 19-ந் தேதிதான் நடக்கிறது. அதற்கு முதல் நாளான 18-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்து விடும். எனவே அதற்கும் தேர்தலை தள்ளி வைப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தபோதும் அனைத்து கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Theniconstituency

    ×