search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari District"

    • ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
    • மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.

    மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    கன்னியாகுமரி தொகுதியில் 50 இடங்களில் மின்னணு எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். #LokSabhaElections2019
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஆனால் பல வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மணிக்கணக்கில் காத்து நின்று வாக்களித்தனர். சில இடங்களில் பொறுமை இழந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பின்னர் எந்திரம் சரி செய்யப்பட்டதும் மீண்டும் வந்து வாக்களித்தனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமே எந்திரம் செயல்படவில்லை. அப்போது 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க காத்து நின்றனர். 8 மணி வரை அவர்கள் காத்து நின்றும் எந்திரத்தின் பழுது சரி செய்யப்படாததால் வாக்காளர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பழுது சரி செய்யப்பட்டதும் வந்து வாக்களிப்போம் என அவர்கள் கூறினர்.

    பொன்மனை 43-வது வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை. பெருஞ்சாணி 32-வது வாக்குச்சாவடியில் திடீரென எந்திரம் பழுதாகி நின்றது. இதேபோல அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வாக்குச்சாவடி, செறுகோல் ஊராட்சி 150-வது வாக்குச்சாவடி, அயக்கோடு ஊராட்சி கல்லடிமாமூடு 89-வது வாக்குச்சாவடி, கல்லங்குழி 118-வது வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது.

    நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாக்களித்த எஸ்.எல்.பி. உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    நாகர்கோவில் பகுதியில் மட்டும் 14 இடங்களில் எந்திரம் பழுதானது. இதில் இருளப்பபுரம், மாதவலாயம், கிருஷ்ணன் கோவில், இறச்சகுளம் பகுதியில் எந்திரங்களை பழுது பார்க்க முடியாததால் வேறு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    கிள்ளியூர் தொகுதியில் 16 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது. மொத்தம் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் எந்திரம் பழுது ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.  #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அரசுக்கு தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியது.

    இதையடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    முதற்கட்டமாக போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த 64 சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்டை மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரத் ஸ்ரீனிவாஸ், சேம் வேதமாணிக்கம் ஆகிய 5 பேர் மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    இதுபோல குலசேகரம் இன்ஸ்பெக்டர் தங்கம், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம், குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன், இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி,

    நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் ஆகியோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் பிறப்பித்து உள்ளார்.
    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 63) என்பதும், அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும், அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் சம்பக்குளம் அருகே வரும்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்றதாக சுரேந்திரன் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புதுக்கடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் காப்பிக்காடு சந்திப்பில் வரும்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (40) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். #tamilnews
    குமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 346 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், குடித்து விட்டு வாகன ஓட்டியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீதும், முறையான ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 52 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள், வாகனம் ஓட்டி வந்ததாக 57 பேர் மீதும், குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக 20 பேர் மீதும் முறையான ஆவணங்கள் இன்றி வாகன ஓட்டி வந்ததாக 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெல்மெட் அணியாமலும் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாக 100 பேர் மீதும் ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. #tamilnews
    டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். #DoctorsProtest
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

    குமரி மாவட்டத்திலும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படவில்லை.

    இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள்.

    குமரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    9 அரசு ஆஸ்பத்திரிகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளும் இன்று முழுமையாக செயல்படவில்லை. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று புற நோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்கள் செல்லவில்லை.

    காலை 6 மணிக்கே வந்த நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 100 பயிற்சி டாக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #DoctorsProtest
    கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு மணல் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்பபடுவதாக புகார் வந்தது. இதையடுத்து ரோந்துப் பணியை தீவிரப்படுத்த போலீசார் அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் நேற்று கொற்றிக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அவர்கள் சித்திரங்கோடு பகுதியில் வரும்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியில் மணல் கொண்டு வருவதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர். மணல் கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் இல்லை. மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் ராஜேந்திரன் (வயது 54), ரெஜிகுமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் மணல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டனர். அதில் கொக்கோட்டான் பாறை பகுதியில் இருந்து கொண்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கன்னியாகுமரி ரெயில்நிலையம் பகுதியில் இருக்கும் மணலை எடுத்து இரட்டை ரெயில்வே பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கிருந்து அனுமதியின்றி சில லாரிகள் தனியாருக்கு மணல் திருட்டு தனமாக விற்கப்படுவதாக மணல்கடத்தல்பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து மணல் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு லாரிகளில் மணலை ஏற்றி அருகில் உள்ள தனியார் இடத்தில் கொட்டுவது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பிடித்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். #tamilnews
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மிமீ மழை பெய்துள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகரமெனவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுருளோடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. மழை பதிவானது.

    கொட்டாரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது.

    சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 26.40 அடியாக இருந்தது. அணைக்கு 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 120 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-8, பெருஞ்சாணி-7.4, சிற்றாறு-1-9.8, சிற்றாறு-2-22.2, மாம்பழத்துறையாறு-3, புத்தன் அணை-8, திற்பரப்பு-24, முள்ளங்கினாவிளை-18, நிலப்பாறை-12, அடையாமடை-14, கோழிப்போர் விளை-6, மயிலாடி-15.2, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-28, பாலமோர்-8.4. #tamilnews
    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தனர். நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பு மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டது.

    என்றாலும் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை தெரசா மற்றும் கர்ப்பிணி பெண் என 6 பேர் பலியானார்கள். இது மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பன்றி காய்ச்சல் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அங்கு நோய் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேர் ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில், ராணித்தோட்டம், தடி டெப்போ பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலம் (வயது70) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கமலம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நோய் அறிகுறி உள்ளவர் களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இது தவிர துப்புரவு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.  #SwineFlu



    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும் 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். #swineflu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பன்றி காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திங்கள் சந்தை கண்டன்விளையைச் சேர்ந்த எஸ்தர் கிங் (வயது 46), அஞ்சுகிராமம் சுப்பிரமணிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகவேல் (68) ஆகிய இருவரும் பலியானார்கள். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் வார்டில் நேற்று 12 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து பன்றி காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி களில் 12 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #swineflu
    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Diwali
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள்.

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) என்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை கேரளபுரத்தில் தங்கராஜ் (62), பிரசாத் (28), சிவசதா (37), அஞ்சுகிராமத்தில் செல்வம் (45), பிரபு (35), ஆனந்த் (24), மணிகண்டன் (25), ஈத்தாமொழியில் விஜய் (22), மார்த்தாண்டம் திக்குறிச்சியில் அனிஷ் (23), சந்திரசேகர் (36), ராஜாக்கமங் கலத்தில் நாகலிங்ம் (23) உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். #tamilnews
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலியான நிலையில் 24 பேர் இதன் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #swineflu
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் பரவி வரும் பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு குமரி மாவட்டத்திலும் அதிகமாக உள்ளது.

    பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை தெரசா, கர்ப்பிணி பெண் சுகன்யா உள்பட 3 பேர் பலியாகி விட்டனர். இவர்களை தவிர இன்னும் ஏராளமானோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

    இதற்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் நேற்று 13 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிலருக்கு நோய் குணமானதை தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 2 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 5 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டம் முழுவதும் 24 பேர் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இவர்களில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் மட்டும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    10 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 24 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, குழித்துறை, குளச்சல் அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இது போல 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு, பன்றி காய்ச்சல் மட்டுமின்றி சாதாரண காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களால் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, குழித்துறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட சுகாதார துறை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்களும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்ட சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு மாத்திரைகள் வினியோகத்திலும் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வீடுவீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். #SwineFlu
    ×