search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kapil kumar c saratkar"

    • 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக ‘வாட்ஸ் அப்’பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
    • புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சென்னை :

    சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் நேற்று நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'வாட்ஸ் அப்', 'பேஸ்புக்' , 'டுவிட்டர்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக போக்குவரத்து போலீசுக்கு தற்போது பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக 'வாட்ஸ் அப்'பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். போக்குவரத்து இடையூறுகள், விதிமீறல்கள், போக்குவரத்து போலீசார் செய்யும் தவறுகள் குறித்து புகார்கள் வருகிறது.

    இதுபோல் வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசின் 'டுவிட்டர்' பக்கத்தை 69 ஆயிரத்து 162 பேர் பின்தொடர்கிறார்கள். அதன் வாயிலாக கடந்த 2 மாதங்களில் 10,400 தகவல்கள் பெறப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வந்த 1267 புகார்களில் 90.5 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    இதுபோல 'வாட்ஸ் அப்' வாயிலாக இந்த ஆண்டு 669 புகார்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. 'பேஸ்புக்'கை 1 லட்சத்து, ஆயிரத்து 734 பேர் பின் தொடர்கிறார்கள். 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தை 5,256 பேர்கள் பின்தொடர்கின்றனர்.

    சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் தவறான புகார்கள் கூட அனுப்பி விடுகிறார்கள். அதிக அபராத தொகை விதிப்பதால் கோபங்கொண்டு சமீபத்தில் 3 பேர் போக்குவரத்து போலீஸ் மீது புகார் அனுப்பி விட்டனர். பின்னர் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு வீடியோ தகவல் அனுப்பி இருந்தனர். இதுபோல் புகார் அனுப்புகிறவர்கள், சம்பவம் நடந்த இடம், தேதி, நேரம் ஆகியவை பற்றியும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விசாரணை நடத்த எளிதாக இருக்கும்.

    போலீசுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் பற்றியும் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதே நேரத்தில் போலீசுக்கு எதிராக தவறான, அவதூறு பரப்பும் புகார்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது போன்ற தகவல்கள் அனுப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் மூலம் கைது செய்யப்பட்டனர். சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் நியாயமான, உண்மையான புகார்களை தெரிவிப்பதை வரவேற்கிறோம். ஆலோசனை கூட தெரிவிக்கலாம்.

    அரசு பஸ்கள் மற்றும் இதர அரசு வாகனங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் தவறு செய்தால், அந்த தவறை பொதுமக்களும் செய்கிறார்கள். அரசு வாகன டிரைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

    அண்ணாநகர் மாநகர பஸ் பணிமனையில் பணியாற்றுபவர்கள் மீது அதிக அளவில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது. அது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியில் புகார் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இதை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் தினவிழா கொண்டாடுவதை கண்காணித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போதையில் வாகனம் ஓட்டி போலீசில் மாட்டுபவர்கள் உரிய அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குறிப்பிட்ட வாகனங்கள் அல்லது அவர்களின் இதர வாகனங்கள் போன்ற அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு உடன் இருந்தார்.

    ×