என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Katumopoti"
- எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக்.
- தி.மு.க., பா.ம.க., தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே அங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்கியுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளராக வன்னியர் சங்க துணைத் தலைவரான சி.அன்புமணி நிறுத்தப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்ட போதிலும் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே தான் அங்கு நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் இந்த முடிவு தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க.வுக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72 ஆயிரத்து 188 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 39.57 சதவீதமாகும்.
அதேநேரத்தில் அ.தி.மு.க.வுக்கு 65 ஆயிரத்து 365 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது 35.83 சதவீதமாகும். இந்த தொகுதியில் பா.ம.க.வுக்கு 32,198 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது 17.54 சதவீதமாகும்.
தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 6823 வாக்குகளே வித்தியாசமாகும். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் தி.மு.க.வுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்கிற கருத்தும் உள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகமாக இருப்பதால் பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை சந்தித்தால் தி.மு.க.வை தோற்கடித்திருக்க முடியும் என்றே கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 670 வாக்குகள் கிடைத்தன.பா.ம.க. உடன் இணைந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 84 ஆயிரத்து 157 ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.க., பா.ம.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் அது தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதும் கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலி லும் அதிக வாக்குகளை பா.ம.க. பெற்றுவிட்டால் அ.தி.மு.க. வுக்கு 3-ம் இடம் தான் கிடைக்கும் என்று கருதியும் அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இது எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வாக்குகள் யாருக்கும் செல்லாமல் தடுக்கப்படும் சூழலில் பா.ம.க. குறைவான வாக்குகளையே பெற முடியும் என்பதும் அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது.
பா.ம.க.வால் வன்னியர்கள் நிறைந்த தொகுதியில் தடம் பதிக்க முடியவில்லை என்கிற பிரசாரத்தை அ.தி.மு.க.வால் முன்வைக்க வசதியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இது வரும் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதாயத்தை தேடித்தரும் என்றும் அவர் நம்புகிறார்.
இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலையும் அந்த கட்சிக்கு ஏற்பட்டு இருக்கிறது.
அதேநேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எப்போதும் இல்லாத வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேர்தல் பணியாற்றி வருகிறது.
இதனால் தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியிலும் அது நீடிக்குமா? இல்லை பா.ம.க. அதிரடி மாற்றத்தை ஏற்ப டுத்துமா? என்பதே இப்போது பலத்த கேள்வியாக எழுந்துள்ளது.
பா.ம.க.வுக்கு நிகராக தி.மு.க. வினரும் வன்னியர் வாக்குகளை பிரிப்பதால் சாதி ரீதியிலான வாக்குகள் சிதறி அங்கு கடும் பலப்பரீட்சை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்