search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kelavarapalli Dam"

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 1,718 கனஅடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 1,670 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இன்று அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4160 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகளும் கலந்து தென்பெண்ணை ஆற்றில் வருகிறது.

    இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ரசாயன நுரை குவியல், குவியலாக வெளியேறி காற்றில் பறந்து விவசாய நிலங்களில் படர்வதால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது.

    ரசாயன நுரையுடன் பாய்ந்து செல்லும் வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு நுரை காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன கழிவுகளுடன் நுரை பொங்கி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

    • அணையிலிருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
    • பாரூர் பெரிய ஏரி, பாம்பாறு அணை மற்றும் சூளகிரி அருகே சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து நேற்று அதிகரித்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 265 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 443 கனஅடியாக அதிகரித்தது.

    அணையிலிருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 41.33 அடியாக இருந்தது.

    கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 168 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 220 கனஅடியாக அதிகரித்தது.

    அணையிலிருந்து ஊற்றுக் கால்வாயில் விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.35 இருந்தது. பாரூர் பெரிய ஏரி, பாம்பாறு அணை மற்றும் சூளகிரி அருகே சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.

    • அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கனஅடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடகா மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள் தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது.

    இன்று வினாடிக்கு 4,480 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றியுள்ள முத்தாலி, சித்தனபள்ளி, பெத்த குள்ளு, தட்டகானபள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனிடையே, பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் அணை நீரில் கலந்து நுரை பொங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    • கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள்தோறும் மழை பெய்து வருகின்றது.

    கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, வினாடிக்கு 2,270 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,240 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு 4,480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

    இதனிடையே, அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக தென்பெண்ணை ஆற்றில் செல்வது தொடர்ந்தவாறு உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர்.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.
    கெலவரப்பள்ளி அணை பாலத்துக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ள யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்ட பள்ளி அருகே உள்ள தைலக்காட்டில் நேற்று 4 யானைகள் புகுந்தன.

    ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் தைலக்காட்டில் சுற்றிவிட்டு ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் புகுந்தது.

    அங்கிருந்து அந்த யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். முடியவில்லை. யானைகள் புகுந்ததால் முத்தாலி கிராமமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    இந்த நிலையில் அந்த யானைகள் இன்று காலை முத்தாலி கிராமத்தில் இருந்து புறப்பட்டு கெலவரப்பள்ளி அணைக்கு வந்து குளியல் போட்டன. தற்போது அந்த யானைகள் கெலவரப்பள்ளி அணை பாலத்துக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

    யானைகள் நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதிக்கு கிராமமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். #tamilnews
    ×