search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khelo India Youth Games"

    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை திறமையாக நடத்தி முடித்தார்.
    • தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 19-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன.

    இதில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர். இந்த விளையாட்டு போட்டியை திறமையாக நடத்தி முடித்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மூலம் சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், உலகளவில் விளையாட்டு மையமாகவும் தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் ரன்னர் ஆனது.

    எங்களது சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் கேலோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை குறைவின்றி நடத்தியதற்காக அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
    • தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத் துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 30-ந்தேதியுடன் போட்டிகள் முடிகிறது. 31-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.

    8-வது நாள் முடிவில் தமிழ்நாடு 26 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலத் துடன் 62 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 9-வது நாளில் தமிழக அணிக்கு மேலும் 6 பதக்கம் கிடைத்தது.

    பளுதூக்குதலில் 2 வெள்ளி, 1 வெண்கலமும், களரிபட்டு பந்தயத்தில் 1 வெள்ளியும், நீச்சல், சைக்கிள் போட்டிகளில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், னுராவ் அணிகள் பெற்றன.

    ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் மொத்தம் 242 கிலோ தூக்கினார். 73 கிலோ பிரி வில் வசந்தகுமார் 246 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். பெண்களுக்கான 55 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீராங்கனை கனிகாஸ்ரீ (168 கிலோ) வெண்கலம் பெற்றார்.

    களரிப்பட்டு பந்தயத்தில் தமிழக வீரர் சுர்ஜித்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. நீச்சலில் ஜாய்ஸ்ரீயும் (100 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவு) சைக்கிளிங்கில் ஸ்ரீமதியும் (60 கிலோ மீட்டர் தூரம்) வெண்கல பதக்கம் பெற்றனர்.

    தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத்துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

    மராட்டியம் 27 தங்கம் பெற்று 94 பதக்கத்துடன் முதல் இடத்திலும், அரி யானா 26 தங்கம், 15 வெள்ளி, 34 வெண்கலம், ஆகமொத்தம் 75 பதக்கத்து டன் 3-வது இடத்திலும் உள்ளன. 

    • நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.
    • எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன்.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 'டிராப்' கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த எஸ்.எம்.யுகன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.

    வெள்ளி பதக்கம் வென்ற யுகனுக்கு 12 வயது தான் ஆகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இளம் வயதில் பதக்கம் பெற்று அவர் சாதித்துள்ளார். இதுகுறித்து யுகன் கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கம் வென்றதால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த எனது பெற்றோருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்.

    எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன். 'டிராப்' பிரிவில் எனது கவனத்தை செலுத்தினேன். ஒரே நேரத்தில் படிப்பு மற்றும் பயிற் சியை நிர்வகிப்பது எனக்கு சற்று கடுனமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கி றது.

    இவ்வாறு யுகன் கூறி உள்ளார்.

    கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டிகளில் அவர் 125 இலக்குகளில் 108 புள்ளிகளை பெற்றதால் கேலோ இந்தியா விளையாட்டுக்கு முன்னேறினார்.

    • இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
    • முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.

    • லிஃப்ட் முதல் தளம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிக்கிய வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர்.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வீராங்கனைகள் தங்கி இருந்தனர். கால்பந்து போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சுற்று இன்று நடைபெற உள்ளது. விளையாட்டில் கலந்துகொள்ள 5வது தளத்தில் இருந்து லிஃப்ட் மூலம் 10 -க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் சென்றனர். லிஃப்ட் முதல் தளம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது.

    விடுதி ஊழியர்கள் கடப்பாறை உள்ளிட்ட கருவிகளை வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடுதி ஊழியர்களின் முயற்சி பலன் அளிக்காத நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இயந்திரங்கள் மூலம் லிஃப்டை உடைத்து, சிக்கிய வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி.
    • கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது.

    எனவே கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
    • இன்று முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் போட்டி நடக்கிறது.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.

    முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஐஎன்எஸ் அடையார் தளத்திற்கு சென்றார்.

    பிறகு, அடையாறில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    வழி நெடுகிலும் கலை நிகழ்ச்சிகளை ரசித்தபடியே பிரதமர் மோடி காரில் பயணித்தார். அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று சென்னையை அடுத்து நாளை திருச்சி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

    • ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
    • வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் இன்று சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றது.

    அப்பட்டியலில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த வாரம் திருச்சிக்கு பிரதமர் வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரை வரவேற்று வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.
    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2018-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. முதலாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது.

    கடைசியாக 2022-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்தப் போட்டி நடைபெற்றது.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

    18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் இந்தப்போட்டி நடைபெற உள்ளது.

    ஸ்குவாஷ் போட்டி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக இடம் பெற்றுள்ளது.

    சென்னையில் நேரு ஸ்டேடியம், நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலைக்கழக மைதானம், நேரு பார்க், மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ரேஞ்ச், எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ், நீச்சல் ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் 20 விளையாட்டுகள் நடக்கிறது. கோகோ, கூடைப்பந்து உள்ளிட்ட 6 விளையாட்டுகள் திருச்சி, மதுரை, கோவையில் உள்ள 3 ஸ்டேடியங்களில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) முழு வீச்சில் செய்து வருகிறது. தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    தொடக்க விழா நிகழ்ச்சிகள் 1½ மணி நேரம் வரை நடைபெறும். கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

    • ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி நாளை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக கவர்னர், முதலமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும்.

    * அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

    * பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.

    * வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

    * ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு, ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.

    எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாளை 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்ற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ×