search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodanad controversy"

    கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #kodanadvideo #edappadipalanisamy #thirumavalavan

    திருச்சி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேசம் காப்போம் மாநாடு ஜனவரி 23-ல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள், தேசிய, மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது நாட்டிற்கு ஆபத்தானது. ஆகவே மதச்சார்பற்ற சக்திகளின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதால் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் ஜனநாயகம், மதச் சார்பின்மை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பங்கேற்க அழைக்கிறேன்.

    இந்த பொங்கல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. காரணம் கஜா புயல் பாதிப்பு, அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட நீர் சிக்கல்களால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு நிறுவன கொள்கைகளால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை விவசாயிகள் பாதுகாப்பு நாளாக நினைவு கூர்கிறோம்.

    கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக சாமுவேல் மேத்யூஸ் சுமார் 15-16 நிமிட வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார். சயன், மனோஜ் ஆகியோரை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்தது.

    இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதிபதி விடுவித்துள்ளார். தமிழக காவல்துறை அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யும் அளவு வழக்குகளை பதிவு செய்யவில்லை. இது காவல்துறை, தமிழக அரசின் தடுமாற்றத்தினை வெளிப்படுத்துகிறது.

    முதல்வர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை குழுவோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அது அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் வாய்ப்பு என கருதி கேட்டுக் கொள்கிறோம்.


    கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டது. ஆனால் அந்த அளவு சேதாரங்கள் ஏற்பட வில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட வருவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது.

    ஆனால் எதிர்பார்த்தபடி பிரதமர் வரவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார். இதனை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பதோடு, தேர்தலில் தக்க பாடத்தினை பா.ஜ.க.விற்கு புகட்டுவார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் பயணிக்கிறது. அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. இந்த கூட்டணியில் 9 கட்சிகள் மற்றும் பல கட்சிகள் உள்ளனர். இதில் 2-வது கருத்திற்கோ மாற்றுக்கருத்திற்கோ இடமில்லை.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என கூறியுள்ளது. ஒரே அணியிலோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிடலாம். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே சமீப காலமாக இடைவெளி இருப்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளில் தெரிகிறது. இரு அணிகளுக்கும் இடையே தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லை. பா.ஜ.க. வுடன் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அது தமக்கு தாமே குழி தோண்டுவது என வி.சி.க. கருதுகிறது.

    இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இருதுருவ போட்டியையே பார்த்துள்ளோம். 3-வதாக ஒரு கூட்டணி அமைந்தால் அது தேசிய அளவிலோ, மாநில அளவிலோ வெற்றி பெற்றதில்லை. இந்த தேர்தலும் அப்படித்தான். தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெறுகிறதா? இல்லையா? என்பது தான் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து திருமாவளவன் மாநாடு நடைபெறும் ஜி கார்னர் மைதானத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #kodanadvideo #edappadipalanisamy #thirumavalavan

    ×