search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu Omni Bus Stand"

    • தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு அப்பால் வரதராஜபுரம் வெளிவட்ட சாலையில் ஆம்னி பஸ் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • வரதராஜபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்டச்சாலைக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு பகுதியில் தற்போது அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தையும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு அப்பால் வரதராஜபுரம் வெளிவட்ட சாலையில் ஆம்னி பஸ் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை நகர திட்டமிடல் ஆய்வு செய்கிறது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த ஆம்னி பஸ் நிலையம் அமைகிறது. அங்கு 100 ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்காக இடவசதி ஏற்படுத்தப்பட்டு பிறகு கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ் நிலையம் அங்கு மாறுகிறது. இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆம்னி பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் வெளிவட்ட சாலையையொட்டி வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. பஸ்கள் நிறுத்துவதற்கான வசதிகள் அமைப்பதற்கு முன்பு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் இங்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்களை நிறுத்த முடியும். இங்கிருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள். தற்போது குடியிருப்பு பகுதியாக வளர்ந்து வரும் வரதராஜபுரத்தில், ஆம்னி பஸ் நிலையம் அமைந்த பிறகு வணிக வளர்ச்சி அடையும் என்றனர்.

    இதுகுறித்து வரதராஜபுரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், "வரதராஜபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்டச்சாலைக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் பணிகளையும் முடிக்க வேண்டும். ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு மினிபஸ்களை இயக்க வேண்டும். மேலும் அடையாறு ஆற்றில் கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    ×