search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kula Deiva Temple"

    • நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
    • குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.

    தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு தங்களது குல தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வார்கள். இதற்காக 15 நாட்களை செலவிட்டு கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் புறப்பட்டு செல்வார்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

    இவர்களின் குலதெய்வ கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வரை ஒன்றாக செல்வார்கள். அதன் பின்னர் அங்கிருந்து 3 பிரிவாக பிரிந்து புதுப்பட்டி கூடமுடை அய்யனார் கோவில், கீழராஜகுலராமனின் உள்ள எர்ச்சீஸ்வரர் பொன் இருளப்பசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தைலாபுரம் மல்லி வீரகாளியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்வார்கள்.

    முதலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்த 56 கிராம மக்கள் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த ஆண்டு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டுக்காக கடந்த 17-ந்தேதி 215 மாட்டு வண்டிகளில் 56 கிராம மக்கள் புறப்பட்டனர். அவர்கள் அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் அணிவகுத்து சென்றனர்.

    தற்போதைய கால கட்டத்தில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாட்டு வண்டியில் செல்வது பழைய கால வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த 56 கிராம மக்கள் காலங்கள் கடந்தாலும் தங்களது பாரம்பரியத்தை மீறக்கூடாது என்ற நோக்கத்தில் மாட்டு வண்டிகளில் செல்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒரு மாட்டு வண்டிக்கு 15 நாட்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை வாடகை கொடுத்து தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.

    சொந்த மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தங்களது மாட்டு வண்டிகளில் வந்து விடுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு சமைக்க தேவையான பொருட்களையும் மாட்டு வண்டிகளில் எடுத்து செல்கின்றனர்.

    குலதெய்வ கோவிலை அடைந்ததும் அங்கு தங்கி இருந்து வழிபாடுகளை செய்கின்றனர். இதன் மூலம் 56 கிராம மக்களும் ஒருவரை யொருவர் அறிந்து கொண்டு குடும்ப சம்பந்தமான உறவுகளை மேம்படுத்தி கொள்கின்றனர். நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனை நாகரீகமாகவும் கருதுகின்றனர்.

    தனித்தனி தீவுகளாக மாறிபோன மனிதர்களுக்கு மத்தியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் 56 கிராம மக்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு ஒன்றாக செல்வது வேறு எங்கும் காண முடியாத காட்சியாக உள்ளது. மாட்டு வண்டிகளில் செல்லும்போது இயற்கையை ரசித்து செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இது சிறுவர், சிறுமிகள் மனதை மிகவும் கவருகிறது.

    இந்த மாட்டுவண்டி பயணம் 15 நாட்கள் தொடர்கிறது. சில நாட்கள் மட்டும் குல தெய்வ கோவில்களில் தங்கி இளைப்பாறுகின்றனர். அங்கு ஒன்றாக சமைத்து சாப்பிட்டு உறவினர்களுடன் உரையாடி மகிழ்கின்றனர்.

    இந்த பயணத்தில் சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர். குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    100 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் கடந்து சென்று 7 நாட்கள் தங்கி இருந்து 3 கோவில்களிலும் வழிபாடுகள் நடத்தி விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் சொந்த கிராமங்களை சென்றடைவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளோம். மாட்டு வண்டி சொந்தமாக இல்லாதவர்களும் ரூ.35 ஆயிரம் வாடகை செலுத்தி மாட்டுவண்டி பூட்டி செல்கின்றோம்.

    மாட்டு வண்டி இல்லாதவர்கள் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மாட்டுவண்டிகளை ஏற்பாடு செய்து குல தெய்வ கோவில்களுக்கு செல்கிறோம்.

    மாட்டு வண்டிகளில் சென்று வழிபட்டால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி கிடக்கிறது. பல ஆண்டுகளாக சென்று வந்தபோதிலும் எங்களுக்குள் எந்தவித மோதல்களும் ஏற்பட்டதில்லை. எங்கள் உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. சொந்த பந்தங்களுடன் உறவாட இது வாய்ப்பாக இருக்கிறது.

    இந்த வழிபாட்டில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கொம்பூதி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்கிறோம்.

    தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த முறை செல்ல முடியவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் செல்கின்றோம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் சென்றால் பல நன்மைகளை அடையலாம். ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.

    இந்த வழிபாட்டை முதலில் தொடங்கியவர்கள் பாத யாத்திரையாக சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் மாட்டு வண்டிகளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தற்போது மாட்டு வண்டி கிடைக்காதவர்கள் கார் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களில் சென்று வருகிறோம். குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×