search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumari district"

    • வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள்.
    • மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதை.

    இன்றைய குமரி நிலம் தொன்மையும், புராதன பாரம்பரியங்களும் மிக்க நிலம் என்றால் மிகையாகாது. இந்த நிலத்தில் வாழும் மக்களெல்லாம் நீண்ட பாரம்பரியம் கொண்ட வரலாற்றின் குழந்தைகள் என்று கூறலாம்.

    நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைகள் செய்த செயல்கள் ஆகியவற்றை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பளிக்கின்றன. அறம் போதித்தவர்கள், ஆன்மிகம் வளர்த்தவர்கள் இந்த மண்ணில் ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். தெய்வங்கள் எழுந்தருளியதாக நம்பிக்கைக் கொள்ளும் இடங்களில் பெரும் கோவில்கள் கட்டிய மன்னர்களும், கோட்டைக் கொத்தளங்களுடன் ஆட்சியை தக்கவைக்க போர்களுடனேயே வாழ்ந்த மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள அடையாளங்கள் பல. அது பற்றிய பல்வேறு சம்பவங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் குமரி நிலத்தின் ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும் ஒரு கதையுடன் கூடிய வரலாறு இருக்கின்றது.

    குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஊர் தான் வாள் வச்ச கோஷ்டம். வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள் கொள்ளலாம். அதாவது போருக்கு பயன்படுத்தப்படும் வாளை வைத்த கோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இந்த ஊர் நாகர்கோவிலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அழகான குளங்கள், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள், பச்சையாய் பரவி நிற்கும் வாழை மரங்கள், ரப்பர் மரங்கள் என இந்த ஊர் இயற்கை எழில் நிறைந்து காட்சி தருகிறது.

    வாள் வச்ச கோஷ்டம் என்னும் இந்த அழகான ஊரின் பெயருக்கான காரணத்தை நாம் கண்டடைய வேண்டுமெனில் அதற்காக நாம் மன்னராட்சிக் காலத்திற்கும், அதற்கு முந்தைய புராண காலத்திற்கும் செல்ல வேண்டும். இந்த ஊரின் தனித்துவ அடையாளமாக அமைந்துள்ளது இங்குள்ள மகிஷாசுர மர்த்தினி கோவில் ஆகும்.

    இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதையாக இருந்துள்ளார். மகிஷாசுர மர்த்தினி தேவியின் பாதத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களது வாளை வைத்து வணங்கி முதற்குருதி தொட்டு கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இது போன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் நாட்டை விரிவாக்கம் செய்து பத்மநாப சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த பின்னர் தனது பெயரை பத்மநாபதாசன் என்று மாற்றியபிறகு மகிஷாசுரமர்த்தினி கோவிலுக்கு வந்து தேவியின் முன்பு தனது வாளை சமர்ப்பித்து வழிபட்டதால் இந்த கோவிலுக்கு வாள் வச்ச கோஷ்டம் என்று பெயர் வந்ததாகவும், இதுவே பின்னர் ஊரின் பெயராக நிலை பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் தமிழ், கிரந்தம், வட்டெழுத்து மொழி வடிவங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கோவிலின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, வேணாடு மன்னரின் உதவியுடன் அரங்க நாயகம் என்பவரால் கி.பி. 1234-ல் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. வீர ரவி கேரள வர்மன். கருவறை முன்புறம் உள்ள முகமண்டபம் முள்ளமங்கலம் திருவிக்கிரமன் நம்பூதிரியால் கி.பி.1620-ல் கட்டப்பட்டதாக கூறுகிறது.

    இக்கோவிலின் உள்பகுதியிலிருந்து ஒரு சுரங்கப்பாதை செல்கிறது. இது பத்மநாபபுரம் அல்லது சாரோடு அரண்மனைக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தச் சுரங்கப்பாதை மூடிய நிலையில் உள்ளது.

    இந்த கோவிலை மகாபாரத கதையுடன் இணைத்து கூறப்படுவதும் உண்டு. பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வன வாசத்திற்கு செல்லும் முன்பு தங்களது ஆயுதங்களை மகிஷாசுரமர்த்தினி குடி கொண்ட இந்த இடத்தில் வைத்து பூஜை செய்ததாகவும், பரசுராமர் ரத்தம் சிந்துவதை நிறுத்தும் வகையில், இங்கு வந்து தனது வாளைக் கழுவி தேவியின் முன்பு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த கோவிலை ஒரு சிற்பக் கலையின் பொக்கிஷம் என்று கூறினால் அதில் மிகையில்லை. அந்த அளவுக்கு இக்கோவிலின் வாசலில் காட்சி தரும் துவார பாலகிகள் முதல் உள் மண்டபங்களின் தூண்களில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களின் சிலைகள் வரை ஒவ்வொன்றும் காண்போரை வியப்படைய செய்கின்கின்றன. இவையெல்லாம் அன்றைய சிற்பக் கலைக்கு கட்டியம் கூறுவதாகவும் உள்ளன.

    இந்த கோவிலில் மகிஷாசுர மர்த்தினி தேவி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த கோவிலாக மகிஷாசுர மர்த்தினி எழுந்தருளியுள்ள இக்கோவில் பார்க்கப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினரும் மாதம் தோறும் இங்கு வந்து வழிபட்டும், சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர்.

    இப்போது மகிஷாசுர மர்த்தினி கோவிலும் வாள் வச்ச கோஷ்டம் ஊரும் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. வாள் வச்ச கோஷ்டம் ஊரில், குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற 12 சிவாலயத் திருத்தலங்களில் 11 -வது சிவாலயமான திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயம், மும்மத வழிப்பாட்டுத் தலமான பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. வாள் வச்ச கோஷ்டம் தற்போது பேரூராட்சியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை - பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விவசாயிகள் அணை நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது.

    குமரி மாவட்ட விவசாயிகள் கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே ஈடுபடுவார்கள். இதற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீரை நம்பியே விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இது தவிர குமரி மாவட்டத்தில் குளங்களை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். குமரி மாவட்ட அணைகளுக்கு தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை மற்றும் கோடை மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் கிடைக்கும். இவற்றை சேமித்து வைத்தே விவசாயம் நடைபெறும்.

    விவசாயத்திற்காக குமரி மாவட்ட அணைகள் ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கு தண்ணீர் தேக்கப்படவில்லை.

    பெருஞ்சாணி அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.95அடி தண்ணீரே உள்ளது. இது போல சிற்றார் 1 அணையில்5.28 அடி தண்ணீரும், சிற்றார் 2 அணையில் 5.38அடி தண்ணீரும் உள்ளது.

    இவை தவிர மாம்பழத்துறையாறு அணையில் 42.24அடி தண்ணீரும், பொய்கை அணையில் 8.90 அடி தண்ணீரும் மட்டுமே உள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு தொடங்கிய பராமரிப்புபணி இன்னும் முடிவடையவில்லை. தற்போது அணையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அணையில் தண்ணீர் தேக்கப்படவில்லை. வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் போதுதான் இங்கு தண்ணீர் தேக்க இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதுபற்றி குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள் சேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட வேண்டும். அதற்கு குமரி மாவட்ட அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்க வேண்டும்.

    பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளின் மொத்த நீர் இருப்பு 500 மில்லியன் கன அடியே உள்ளது. இந்த அளவுக்கு நீர் இருந்தால் அணைகளை திறக்க முடியாது. எனவே வருகிற ஜூன் 1-ந் தேதி அணைகளை திறக்க வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    குமரி மாவட்டத்தில் 2 மணி நேரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மதியம் நேரங்களில் அனல்காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீட்டிற்குள் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில்அறிவிக்கப்படாத மின்தடை இருந்து வருகிறது. நேற்றும் இரவு 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

    இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், 10 மணியில் இருந்து 11 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் நாகர்கோவில், கொட்டாரம், சாமித்தோப்பு, கரும்பாடு, தென்தாமரைகுளம், சுசீந்திரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    அறிவிக்கப்படாத மின்தடைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணி முதல் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல இடங்களில் பல மணி நேரமாக அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கும் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்தது. தற்போது மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் இரவு தூங்க முடியாமல் அதிகளவு பாதிப்பு அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டு மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியம், நிர்வாக சீர்கேட்டால் தான் ஏற்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மின் வெட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். தொடரும் பட்சத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களை திரட்டி அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் அரிக்கேன் விளக்கு ஏந்தி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை விளக்க அணி மாநில நிர்வாகி நந்தகோபால் கூறுகையில், அறிவிக்கப்படாத மின்தடை மக்களை பாதிப்படைய செய்துள்ளது. மின்தடை செய்யும் நேரங்களை முறையாக அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பொதுமக்களும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மின் வினியோகம் தடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசுகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். நெசவாளர் காலனி, ஆசாரிப்பள்ளம், மேலராமன் புதூர், சைமன்நகர், மூவேந் தர்நகர், பொன்னப்ப நாடார் காலனி, டி.வி.டி. காலனி, பார்வதிபுரம், கட்டையன் விளை, காமராஜர்புரம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நான் கடந்த முறை 7 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறி உள்ளார். பாராளு மன்றத்தின் ஆவணங்களை பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும்.


    துறைமுகம் கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்றார். இப்போது துறை முகத்திற்கு எதிரானவன் அல்ல என்று பிரசாரம் செய்து வருகிறார். யாரை ஏமாற்ற நினைக்கிறார் அவர். மீனவர் சமுதாய மக்களை மட்டும்மல்லாமல் 20 லட்சம் மக்களையும் ஏமாற்றுகிறார்.

    மூடிக்கிடக்கும் ரப்பர் தொழிற்சாலை திறக்கப்படும் என்கிறார். இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டதாக பேசுகிறார். இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான விளக்கம் அவருக்கு தெரியுமா? தூத்துக்குடியில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு, நமது மாவட்டத்தில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு. திட்டங்களை பற்றி தெரியாமல் காங்கிரஸ் வேட்பாளர் பேசி வருகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசி வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி பயத்தில் பேசி வருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்து உள்ளோம். நாகர்கோவில் நகரில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் நிறைவேற்றி உள்ள வளர்ச்சித்திட்டங்கள் மக்களுக்கு தெரியும். நான் செயல்படுத்தி உள்ள வளர்ச்சித்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் போது அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், த.மா.கா. மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கால்டுவின் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp #parliamentelection

    பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. #PMModi
    நாகர்கோவில்:

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

    தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை இப்போதே வகுத்து செயல்பட தொடங்கிவிட்டன.

    பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி கடந்த 27-ந்தேதி நரேந்திர மோடி தமிழகம் வந்தார். மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அவர் அடிக்கல் நாட்டி பேசினார்.

    அதன்பிறகு 2-வது கட்டமாக கடந்த 10-ந்தேதி திருப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார்.

    3-வது கட்டமாக வருகிற 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கான இடம் தேர்வு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியது.

    இந்த மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் அதே மைதானத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் அந்த மைதானத்தில் 2 விழாக்களுக்கும் தனித்தனியாக மேடை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மைதானம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு சென்று பணிகளை துரிதப்படுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் அவர் குமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதிப்படுத்தினார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு பிரதமர் குமரி மாவட்டம் வருகை தந்தால் இங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளதால் பிரதமரின் குமரி வருகை தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #PMModi
    குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். #plasticban
    குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளேட்டுகளை கடைகளில் இருந்து அகற்றி அவற்றுக்கு பதில் மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் துணிப்பை கொண்டு வரும்படி அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு துணிப்பை கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு அட்டைப் பெட்டிகளில் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

    இதேபோல துணிக்கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன.

    மீனாட்சிபுரம், கோட்டார், வடசேரி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பார்சல் டீ-க்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் நிறுத்தப்பட்டன. பேப்பர் கப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக பார்சல் டீ, காபி வாங்குபவர்கள் கட்டாயம் பாத்திரம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர். டாஸ்மாக்கடைகளில் உள்ள பார் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருந்தனர். பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பார் உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.

    இதனால் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டன. பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தின்பண்டங்களுக்கு வழங்கப்படும் பேப்பர் தட்டுகளுக்கு பதில் சில்வர் தட்டுகள் வினியோகிக்கப்பட்டது. #plasticban
    பிப்ரவரி 1-ந்தேதி குமரிக்கு வருகை தரும் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #vaiko
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட அலுவலகத்தில் அவைத் தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மகராஜ பிள்ளை வரவேற்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பிச்சைமணி, துணைச் செயலாளர் ஆனந்த் ராஜ், மாநில நிர்வாகிகள் மோசஸ் மனோகர், சந்திரன், ராபின்சன் ஜேக்கப், சுமேஷ், ராணி செல்வின், ராஜ்குமார், அரிராம ஜெயம் மற்றும் ராபர்ட் கிங்ஸிலி, ஜெரோம் ஜெயகுமார், ஷாஜி, பீர்முகம்மது, நெல்சன், பால்ராஜ், மணிகண்டன், வைகோ.குமார், சிவகுமார், சந்திரசேகர், கைலாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 1-ந்தேதி வருகை தரும் தலைவர் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதுடன் தேர்தல் நிதியாக ரூ.51 லட்சம் வழங்குவது, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பணிக்குழுவை உடனடியாக நியமனம் செய்து தலைமை கழகத்திற்கு அனுப்புவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கூட்ட முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆனந்த ராஜன் நன்றி கூறினார்.  #vaiko
    குமரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 58) தொழிலாளி. இவரது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்துடன் பாஸ்கரன் காணப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒழுகினசேரி பகுதியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெர்னாட்சேவியர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளச்சல் சாஸ்தன்கரை பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் ரோச். இவரது மகள் நிகிஷா (25). இவருக்கும் திருமணம் ஆகவில்லை.

    இவரது பெற்றோர் நேற்று அருகில் உள்ள வள்ளவிளைக்கு சென்று இருந்தனர். வீட்டில் நிகிஷா மட்டும் தனியாக இருந்து உள்ளார். இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகிஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ் பெக்டர் சுஜித்ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடைவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31) டிரைவர். இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். மேலும் இவருக்கு திருமணம் ஆகாத வருத்தத்திலும் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் சுரேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப் டிவி‌ஷன்களில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் ஆவணங்கள் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    தக்கலையில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 128 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முறையான ஆவணம் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    குளச்சல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 179 பேர் மீதும், கன்னியாகுமரியில் நடந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 301 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் மொத்தம் 767 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்டத்தில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    குமரி மாவட்டத்தில் 13 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சலை கண்காணித்து கட்டுப்படுத்த சிறப்பு சுகாதாரத்துறை அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்தவர் திரேஷா (வயது 60). ஓய்வு பெற்ற பேராசிரியையான இவர் பன்றி காய்ச்சலுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் மற்றும் ஒரு வயது குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண் மட்டும் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பள்ளம் பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றி காய்ச்சல் வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் மாவட்டம் முழுவதும் மேலும் 11 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மொத்தத்தில் 13 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் நலமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதினாலும் தமிழக அரசு சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் சரவணன் என்பவரை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நியமித்துள்ளது. அவர் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு அதிகாரி சரவணன் கொசு ஒழிப்புக்கான மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நிருபர்களிடம் கூறியபோது, “குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமாக இருக்கிறார்கள். பன்றி காய்ச்சலை உடனே கண்டுபிடித்துவிட்டால் அதற்கான சிகிச்சைகள் அளித்து குணப்படுத்தி விடலாம். எனவே காய்ச்சல் வந்தால் அஜாக்கிரதையாக இருந்துவிடாமல் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் காய்ச்சல் காரணமாக ஏதேனும் மாணவ-மாணவிகள் விடுப்பு எடுக்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகிறோம். பன்றிக்காய்ச்சல் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்“ என்றார்
    குமரி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. தக்கலையில் அதிக பட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. #Rain #Northeastmonsoon

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

    தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வலு பெற்று 6-ந்தேதியில் இருந்து அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவிலில் மதியம் பெய்யத் தொடங்கிய மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இரவும் மழை நீடித்தது.

    தக்கலை பகுதியில் சுமார் 3 மணிநேரமாக கனமழை கொட்டியது. அங்கு அதிக பட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குழித்துறை, குளச்சல், குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இரவும் மழை பெய்ததால் இதமான குளிர்காற்று வீசியது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் வானம் மப்பும், மந்தார மாகவே காணப்பட்டது. திடீர், திடீரென மழை பெய்தது. திற்பரப்பு அருவிப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அங்கு இதமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து மட்டும் பாசனத்திற்காக 757 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலையில் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 584 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.50 அடியாக உள்ளது. அணைக்கு 246 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21.90 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன் கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    தோவாளை, செண்பக ராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-15.4, பெருஞ்சாணி-40.2, சிற்றாறு 1-30.4, சிற்றாறு 2-24, மாம்பழத்துறையாறு-30, குழித்துறை-50, தக்கலை-70, குளச்சல்-12.4, குருந்தன்கோடு-19, அடையா மடை-22, கோழிப்போர்விளை-58, முள்ளங் கினாவிளை-6, புத்தன் அணை-41.6, திற்பரப்பு-24, நாகர்கோவில்-39.2, பூதப்பாண்டி-13.4, சுருளோடு-46.2, கன்னிமார்-7.2, ஆரல்வாய்மொழி-12.2, மயிலாடி-14, கொட்டாரம்-34, ஆனைக் கிடங்கு-40, இரணியல்-17.2.  #Rain #Northeastmonsoon

    குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக பாலமோரில் 6 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தின் மலையோர கிராமங்களிலும், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அதன்பின்பு மழை ஓய்ந்திருந்த நிலையில் வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதற்கேற்ப குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது.

    குமரி மேற்கு மாவட்டத்தின் மலை கிராமங்கள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த மழை கொட்டியது. இது மாவட்டத்தின் உள்புற பகுதிகளிலும் பெய்தது. அதிக பட்சமாக பாலமோரில் 6 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை- 23, பெருஞ்சாணி- 30.2, சிற்றார்- 13.2, திற்பரப்பு- 27.2, முள்ளங்கினாவிளை- 4, புத்தன் அணை- 31, நாகர்கோவில்- 6, பூதப்பாண்டி- 2.4, சுருளோடு- 15.2, கொட்டாரம்-11.6, மயிலாடி- 3.2, இரணியல்- 11, ஆனைகிடங்கு- 5.2, குளச்சல்- 4.6, கோழிப்போர் விளை- 11.

    குமரி மாவட்டம் முழுவதும் பெய்த  மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி  29.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 819 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 905 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 67.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 589 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 233 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
    ×