search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam Temple"

    • குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.
    • கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

    குடமூக்கு என்னும் பெயர் இடைக்காலத்தில் தான் கும்பகோணம் என மாறியுள்ளது என்பது அருணகிரியாரின் பாடல் வாயிலாக உணர முடிகிறது.

    குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.

    கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆதிகும்பேஸ்வரர் ஆவார்.

    இவர் உலகத்திற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியமையால் ஆதிகும்ேபஸ்வரர் என்றும் நிறைந்த சுவை கொண்ட அமுதத்தில் இருந்து உதித்தமையால் அமுதேஸர் என்றும் அழைப்படுகின்றார்.

    இறைவன் வேடுவர் உருக்கொண்டு அமுத கும்பத்தை தம் அம்பினால் எய்தியமையால் கிராதமூர்த்தி என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

    மகா பிரளயத்திற்குப் பின் படைப்புத் தொழிலினை பிரம்மா தொடங்குவதற்கு இறைவன் இத்தலத்தில் எழுந்தருளிய லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

    இதனால் இத்தலம் உயிர்ப்படைப்பின் தொடக்க இடமாததால் படைக்கப்பட்ட படைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தை அடைதல் அவர்களின் பிறவிக் கடமையாகும்.

    எந்த ஒன்றிற்குமே மூலம் தான் சிறப்புடையது.

    உயிர்களின் தோற்ற மூலமான இத்தலம் பிற தலங்களுக்கு எல்லாம் புண்ணியம் நிறைந்த முதன்மைத் தலமானது.

    அது மட்டுமல்லாது புராணப்படி மகா பிரளயத்திற்குப் பின் நிலவுலகில் தோன்றிய முதல் தலமும் இதுவேயாகும்.

    இத்தலத்து அம்பிகை மங்கள நாயகி ஆவாள்.

    இவள் மந்திர பீடேஸ்வரி, மந்திர பீடநலத்தாள், வளர்மங்கை என்றும் போற்றப்படுகின்றாள்.

    தம்மை அன்புடன் தொழுவார்க்கு மங்களம் அருளும் தன்மையால் "மங்களநாயகி" என்றும் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் மந்திரபீடத்தில் அன்னை விளங்குவதால் மந்திரபீடேஸ்வாி என்றும்,

    தம் திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு மந்திர பீடத்திலிருந்து நலம் அருளுவதால் "மந்திரபீட நலத்தாள்" என்றும் போற்றப்படுகின்றாள்.

    தம் தேவாரப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் பெருமான், "வளர்மங்கை" என்று அன்னையைப் போற்றுகின்றார்.

    திருச்செங்கோடு தலத்தில் இறைவன் தம் இடபாகத்தை அம்பிகைக்கு அருளியமை போன்று இத்தலத்தில் இறைவன் தம் 36000 கோடி மந்திர சக்திகளையும் அன்னைக்கு வழங்கினார்.

    இதனால் அன்னை இத்தலத்தில் மந்திர பீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

    அம்மனின் உடற்பாகம் பாதநகம், முதற்கொண்டு, உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சி அளிக்கின்றன.

    இவற்றுள் பிற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே சக்தி வடிவினை மட்டும் கொண்டதாகும்.

    இத்தலத்து அன்னை ஐம்பத்தோரு சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாக உள்ளடக்கியவளாய், சக்தி பீடங்கள் அனைத்திற்கும் பிரதானமானவளாய் விளங்குகிறாள்.

    இத்திருக்கோயிலில் காலையில் முதலில் சூரிய பகவானுக்கும், மாலையில் சந்திரனுக்கும் வழிபாடுகள் நிகழ்கின்றன.

    இத்திருக்கோயிலில் உள்ள 16 தூண் மண்டபம் மிக்க கலையழகுகளுடன் திகழ்கின்றது.

    • இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் உள்ளன.
    • தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்களில் மூன்று கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

    தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்கள் 274ல் காவிரியாற்றின் தென்கரையில் 127 தலங்கள் அமைந்துள்ளன.

    இவற்றில் மூன்று கும்பகோணத்தில் அமைந்து உள்ளன.

    இவை மட்டுமல்லாது இந்நகரை சுற்றிலும் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

    இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் இருப்பதால் இந்நகரம் கோவில் நகர் என்றும் போற்றப்படுகின்றது.

    அவற்றில் முதன்மையானது கும்பேஸ்வரர் ஆலயம் ஈசன் தன் கரத்தினால் சிருஷ்டித்த தலம் என்பதால் சிறப்பைப் பெற்றது.

    முதல்வர், வானவர், மன்னவர் என அனைவரும் அவரை பூஜித்திருப்பதால் இத்தலம் மூர்த்தி சிறப்புடையது.

    தேவர்கள், திருமால், பிரம்மா, இந்திரன், தேவ மாதர்கள் என அனைவரும் தீர்த்தமாடிய திருக்குளமாக மகாமகக் குளம் அமைந்து இருப்பதால் இத்தலம் தீர்த்த சிறப்பு பொருந்திய தலமாக விளங்குகிறது.

    பிரளயத்தின் போது அதில் மிதந்து வந்த அமுதக் கலசமான குடத்தை இறைவன் அம்பை செய்து அதன் மூக்கை உடைத்தமையால் குடமூக்கு என்னும் பெயர் இத்தலத்திற்கு உரியதாயிற்று.

    சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் வைணவ ஆழ்வாரான பூதத்தாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடமூக்கு என்றும்,

    பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடந்தை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தலத்தை மலை தனி வந்து கும்பகோண நகர் வந்த பெருமானே! என்று அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.

    புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும்.
    சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆறுவித சமய வழிபாட்டில் சூரியனை கடவுளாக வழிபடுவதற்கு ‘சவுரம்’ என்று பெயர். இந்தியாவில் சூரிய வழிபாடு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு முறையில் செய்யப்பட்டு வருகிறது.

    சூரியனை உலக முதல்வனாக ‘ஆதித்ய ஹிருதயம்’ நூல் கூறுகிறது. இது ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டைப் பற்றி விவரிக்கின்றன. சூரியன் காலையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாம வேதமாகவும் திகழ்வதாக ‘சூரிய அஷ்டகம்’ சொல்கிறது.

    காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிறந்த பன்னிரண்டு மக்களும் ‘பன்னிரு சூரியர்கள்’ எனப்பட்டனர். அதிதியின் பிள்ளைகள் என்பதால் ‘ஆதித்தியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த பன்னிருவர்களில் முதல்வனான விசுவான் தான், இப்போது உலகை பிரகாசிக்கச் செய்யும் சூரியன் என்று மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

    உலகெங்கும் சூரியனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும். சிறிய ஆலயம், நவக்கிரகங்களை மட்டுமே தெய்வங்களாகக் கொண்ட கோவில், சூரியனை மூலவராகக் கொண்ட திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. தனது இரு தேவியருடன் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க, மற்ற எட்டு நவக்கிரகங்களும் எட்டு திசைகளில் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    காலவ முனிவரை, ஒரு இளம் துறவி சந்தித்தார். அவரிடம் தன் எதிர்காலத்தைக் கேட்டறிந்தார். பின்னர் “அனைவரின் எதிர்காலத்தையும் சொல்லும் நீங்கள், உங்களின் எதிர்காலத்தை எப்போதாவது கணித்ததுண்டா?” என்று கேட்டார்.

    திடுக்கிட்ட காலவ முனிவர், “நீ யார்?” என்று கேட்க, வந்தவர் “நான் காலதேவன்” என்று கூறி மறைந்தார். இதனால் தன்னுடைய எதிர்காலத்தை ஆராய்ந்தார் காலவ முனிவர். அதில் முன்வினைப் பயனால், அவருக்கு தொழுநோய் வரும் என்பது தெரிந்தது.

    இதையடுத்து முன்வினைப்பயனை தருகின்ற நவக்கிரகங்களை காலவ முனிவர் சரணடைந்தார். விந்தியமலையில் பஞ்சாக்னி வளர்த்து, நவக்கிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவக்கிரகங்களும் அவரின் முன்பாக தோன்றின. காலவ முனிவர் கேட்ட, தொழுநோய் பீடிக்காத வரத்தையும் அளித்தனர்.

    இதையறிந்த பிம்மன், நவக்கிரகங்களை வரவழைத்தார். “சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அவரவர் செய்த வினைகளின் பயனை அளிக்கவே நீங்கள் என்னால் படைக்கப்பட்டீர்கள். உங்களுக்கு தனித்து இயங்கும் சுதந்திரம் இல்லை. அப்படியிருக்கையில் காலவ முனிவருக்கு நீங்கள் வரம் அருளியது தவறு. எனவே நீங்கள் அனைவரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்படவேண்டிய கால அளவு வரை, அதே நோயால் துன்பப்படுவீர்கள்” என்று கூறினார்.

    அதைக் கேட்டு வருந்திய நவக்கிரகங்களும் பிரம்மனை பணிந்து, விமோசனம் அருள வேண்டி நின்றன. உடனே பிரம்மன், “காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அர்க்க(எருக்கு)வனமான திருமங்கலக்குடி சென்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை வரை, 78 நாட்கள் தவம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உதயத்துக்கு முன் எழுந்து, காவிரியில் நீராடி பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட வேண்டும். அன்றைய தினம் ஏழு நாழிகைக்குள் ஒரு எருக்கு இலையை எடுத்து, அதில் பிடி அளவு தயிர் அன்னம் வைத்து உண்ண வேண்டும். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்” என்றார்.

    பிரம்மதேவன் சொன்னபடி, அகத்தியரின் வழிகாட்டு தலில், நவக்கிரகங்கள், இறைவன்- இறைவியோடு, விநாயகர் சிலை ஒன்றையும் நிறுவி அந்த வழிபாட்டைச் செய்தனர். 78 நாட்கள் முடிவில் சிவபெருமான் அவர்கள் முன்பாக தோன்றி, “இன்றோடு உங்களின் நோய் முழுவதுமாக குணமடையும். நீங்கள் தவம் இருந்த இடத்தில் உங்களுக்கு தனி ஆலயம் உருவாகும். அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யும் வரத்தை தந்தோம்” என்று அருளினார்.

    நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ‘கோள்வினை தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் அருள்கிறார். தென்னகத்திலேயே சூரியனுக்கென்று தனிக் கோவில் அமைந்த தலம் இது. கருவறை உள்ளே உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் சிவசூரிய பெருமானாக நின்ற கோலத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அங்கிருந்தே குரு பகவானையும தரிசிக்கும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. தவிர தென்மேற்கில் சனீஸ்வரன், தெற்கில் புதன், தென்கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்ரன், வடமேற்கில் ராகு எழுந்தருளியுள்ளனர்.

    திருவாவடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், தினமும் காலை 6 மணியில் இருந்து பகல் 1மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    ×