search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurukshetra lathicharge"

    • அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் மந்திரியாக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார்.
    • கட்டார் அரசாங்கம் ஒரு தடியடியை நம்பும் அரசாங்கமாக மாறிவிட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. அரசாங்கம் நடந்து வருகிறது. முதல்வராக பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டர் உள்ளார். அம்மாநிலத்தில் சூரியகாந்தி மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசாங்கம் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் இதற்கு மறுத்து வருகிறது.

    குறைந்தபட்ச ஆதார விலையில் சூரியகாந்தி விதைகளை வாங்க மறுக்கும் அரியானா அரசின் முடிவை கண்டித்து, குருக்ஷேத்திரத்தில் டெல்லி-அம்ரித்சர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்ல வைப்பதற்கு காவல்துறை தடியடியும், தண்ணீர் பீரங்கியும் பயன்படுத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் மற்ற பல மாவட்டங்களில் சாலைகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாங்கம் விதைகளை வாங்க மறுப்பதால் தங்கள் விளைச்சல்களை குவிண்டாலுக்கு அரசாங்க விலையான ரூ. 6,400க்கு பதிலாக, தனியார்களிடம் குவிண்டாலுக்கு ரூ. 4,000த்திற்கு குறைத்து விற்க வேண்டியுள்ளதாக போராடும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கைகள் வைத்தும் அது நிராகரிக்கப்பட்டதால், அவர்களின் சாலை மறியலும், அதனை தொடர்ந்து தடியடி மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்ட காட்சிகளும் நடந்தேறின.

    அரசாங்கத்தைக் கண்டிக்கும் விதமாக சோனிபட், கோஹனா மற்றும் ரோஹ்டக் நகரங்களிலும் பல விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோனிபட் பகுதியில் சர்தானா கிராமத்தின் அருகே கானௌர்-புக்தலா சாலையை விவசாயிகள் மறித்து போராடினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், கட்டார் அரசாங்கம் ஒரு தடியடியை நம்பும் அரசாங்கமாக மாறிவிட்டது. விவசாயிகள் மேல் நடத்தப்பட்ட இந்த தடியடி பா.ஜ.க. - ஜ.ஜ.க. (ஜனநாயக ஜனதா கட்சி) கூட்டணி அரசின் மேல் அடிக்கப்பட்ட ஆணியாகும். குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 6,400 என்றிருக்கும் நிலையில் ரூ. 4000-4500 என விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளபட்டிருக்கிறார்கள். இதற்கு நீதி கேட்டு போராடினால், அவர்களுக்கு தடியடி பதிலாக கிடைக்கிறது. இந்த அடக்குமுறை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குருக்ஷேத்திரத்தில் உள்ள ஷாஹாபாத்தில் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட தடியடி பிரயோகம், விவசாயிகளின் மீது கட்டார் அரசாங்கத்திற்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது என தெரிவித்தார்.

    ×