search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leg Pain"

    • முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது.
    • சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    விளையாடும்போதோ, விபத்தின்போதோ முதுகெலும்பில் ஏற்படும் காயம் ஒட்டுமொத்த உடல் இயக்க செயல்பாடுகளையும் முடக்கிவிட வாய்ப்புள்ளது. 'ஸ்பைனல் கார்டு இஞ்சுரி' எனப்படும் இந்த முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது. சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடியது.

    சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் பேர் முதுகெலும்பு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, முதுகெலும்பு காயம் உள்ளவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுகெலும்பு காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விபத்துக்களில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் 90 சதவீதம் பேர் முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுவது, வன்முறையில் பாதிப்புக்குள்ளாவது போன்றவை இதில் அடங்கும். முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாள்பட்ட வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலர் மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது: கார் விபத்துக்கள்தான் பெரும்பாலும் முதுகு தண்டுவட காயத்திற்கு முக்கிய காரணமாகின்றன. அதனால் சீரான வேகத்தில் கார் ஓட்டுவது அவசியம். கார் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்களுடன் பேசுவது, எதையாவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பது போன்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கார் ஓட்டுபவரும், உடன் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.

    தடுமாறி விழுதல்: எதிர்பாராதவிதமாக உயரமான பகுதியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுவதும் முதுகெலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சைக்கிளிலோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டால் முதுகெலும்பில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால் கவனமாக செயல்பட வேண்டும்.

    விளையாட்டு: விளையாடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது. ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து சாகசம் செய்யும் விளையாட்டுகளின்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அது முதுகெலும்பு பகுதியை கடுமையாக பாதித்துவிடும்.

    மதுப்பழக்கம்: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்கு மூல காரணமாகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

    • 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

    முதுகு எலும்புகள், தசைகள், வட்டுகள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றின் கூட்டுக் கட்டமைப்பைக் கொண்டது முதுகுத்தண்டுவடம். உடலின் சீரான இயக்கத்துக்கு உதவுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராதது, அதிக கனமான பொருட்களைத் தூக்குவது, திடீர் இயக்கம், தும்மல், இருமல், உடலை முறுக்குதல், நீண்ட நேரம் நிற்பது, இடைவெளியின்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது, கழுத்து முன்னோக்கி இருக்கும்படி உட்காருவது, தொடர் தூக்கம், செய்யும் வேலையின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையினால் கூட முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம். இதுதவிர தசைப்பிடிப்பு, குடலிறக்கம், தசை இறுக்கம், இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு அல்லது காயங்கள், தசைநார் இறுக்கம் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.

    சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்து குறைபாட்டாலும் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தைப்பேறின்போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வலி வரலாம்.

    ஷிங்கிள்' எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் சேதம் ஏற்படுவது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்று, இடுப்பு அழற்சி நோய், காய்ச்சல், முதுகெலும்பு தொற்று ஆகியவையும் முதுகுவலிக்கு காரணமாகும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ரத்தப் பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டறிய முடியும். 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

    வலியைக் குறைக்கும் சிகிச்சைகள், தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். உடற்பயிற்சிகள், உடலின் சமநிலையைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் முதுகுவலி வருவதை தடுக்கலாம். ஏரோபிக் பயிற்சிகள், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றை தினசரி செய்வது, முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.

    தினசரி காலை உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும். இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கியக் காரணமாகும். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

    • முதுகுவலியை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
    • இயல்பான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம்.

    ஐ.டி.துறையில் வேலை செய்யும் பலர், இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதுடன் முதுகுவலியையும் உணர்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது. மேலும் இயல்பான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம். இதோ அதற்கான சில வழிகாட்டுதல்கள்...

    பால் பொருட்கள் : கால்சியம் குறைபாடு எலும்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உயிரணுக்களுக்கு எரிபொருளாக உதவுவதோடு, முதுகுவலிக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படும். எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை, அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

    புரதம் நிறைந்த உணவு : தினை, உளுத்தம் பருப்பு, பீன்ஸ், எள் போன்றவை புரதச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. அவை முதுகுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை சரிசெய்து விரைவாக குணமடைய உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.

    பழங்கள் : புளூபெர்ரி, அன்னாசி மற்றும் திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் அவை வலி நிவாரணியாகவும், முதுகுவலியை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் போலவே, அளவோடு சாப்பிடும்போது பலன் அதிகபட்சமாக இருக்கும்.

    மூலிகைகள் : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இலவங்கப்பட்டை, துளசி போன்றவற்றிலும் உள்ளது. நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களான மஞ்சள் போன்றவை வலியைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம்.

    பச்சை காய்கறிகள் : வைட்டமின்-சி மற்றும் பி-12 நிறைந்த சில காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, புரோக்கோலி போன்றவற்றால் முதுகெலும்பு வலுப்பெறுகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவும்.

    பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
    எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

    நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள். இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.

    உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன. இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள். இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.

    இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத் தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்க்கப்பட்டு விட்டனர். இவ்வாறான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள். இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.  

    இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன. நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது. அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.

    உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான். இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், தினமும் அதனையே அணிய விரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.
    • வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம்.
    • உடல் பருமனால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.

    வயதானவர்களை அதிகமாகத் தாக்கும் மூட்டுவலி பிரச்சினை, தற்போது இளம்பெண்களிடமும் பரவலாக இருக்கிறது. உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாதது, ஹார்மோன் மாற்றங்கள், சர்க்கரை நோய், காசநோய், மரபுவழி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை மூட்டுவலி பாதிப்புகளை உண்டாக்கும்.

    உடலில் கால் மூட்டு, தோள்பட்டை, கைமூட்டு, மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய முக்கிய மூட்டு பகுதிகள் உள்ளன. எலும்புகள் இணையும் இடங்களான இப்பகுதிகளில் ஏற்படும் அசவுகரியமான உணர்வு, சோர்வு, வலி, வீக்கம் போன்ற உணர்ச்சிகள் மூட்டுவலி பிரச்சினைகளின் அறிகுறியாகும். இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு மூட்டுவலி பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டே உலக 'ஆர்த்ரைடிஸ் தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆர்த்ரைடிஸ் என்பது 'ஆர்த்ரோ' எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு 'மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி' என்பது பொருள்.

    தற்போது இளம்பெண்கள் பலரும் மூட்டுவலியால் அவதிக்குள்ளாகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக 'ஈஸ்ட்ரோஜன்' எனும் ஹார்மோனின் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். இது மூட்டுகளின் நெகிழ்வு தன்மைக்கு காரணமான 'கார்டிலேஜ்' உருவாக்கத்தைக் குறைக்கும். இதனால் இளம்பெண்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது.

    மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களும் மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். உடல் பருமனால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் எளிதில் மூட்டுவலி பிரச்சினை தாக்குகிறது. மூட்டுவலிக்கான வாழ்வியல் காரணங்களை அறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.

    காசநோய், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பக்கவிளைவின் காரணமாக மூட்டுவலி இருந்தால், சிகிச்சை பெற்று அந்நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கும் பெண்கள் எடையைக் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    மூட்டுகளுக்கு வலிமை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம். இது சரும துவாரங்களின் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜென் புரதத்தை அதிகரிப்பதால் மூட்டுவாத நோய்கள் வராமல் தடுக்கும்.

    • ஆரோக்கியமான மூட்டுக்கு சரியான உடல் எடை அவசியம்.
    • நம் அன்றாட செயல்பாட்டிற்கு மூட்டுகள் மிகவும் அவசியம்.

    வேலூர் சத்துவாச்சாரி அமுதம் ஆயுஷ் கூட்டுறவு மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா, மூட்டு வலி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறியதாவது:-

    மூட்டுகள் எதனால் ஆனவை?

    எலும்பு மற்றும் எலும்பு திசு ஆகியவற்றின் பண்புகளால் ஆரோக்கியமான மூட்டுகள் உருவாகின்றன. அதனுடன், மூட்டுகள் நரம்பு திசு மற்றும் நரம்பு மண்டலத்துடன் ஓர் முக்கிய தொடர்பை பகிர்ந்து கொள்கின்றன.

    ஆரோக்கியமான மூட்டுகள் ஒருவகையான கொழுப்பு பொருளால் உயவூட்டப்படுகிறது. இது உராய்வு இல்லாத இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த செயல்முறை திசு ஊட்டச்சத்தின் செயல்முறையைப் பொறுத்தது. இது மூட்டு ஆரோக்கியத்தில் அக்னியின் பங்கை கூறுகிறது.

    நமது ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் வலுவான அக்னி மற்றும் சரியான அளவிலான செரிமானம் அவசியமானது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

    ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் அவற்றின் உடலியலை ஆதரிக்கும் அனைத்தும் திசு ஊட்டச்சத்தை நம்பியுள்ளன. இது இறுதியில் அக்னியின் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகும்.

    மூட்டு நோய்களின் வகைகள்

    வாதம் என்பது நம் உடலின் செயல்படும் ஆற்றல். நமது அன்றாட இயக்கங்களுக்கும், அன்றாட செயல்பாடுகளை செய்வதற்கும் மூட்டுகள் தேவை. ஆனால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டுக்கும் அதன் உகந்த செயல்பாட்டிற்கு சீரான வாதம் அவசியம். மூட்டுகளில் உள்ள வாதத்தில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அது பல்வேறு மூட்டு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

    ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், கீல்வாதம், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ். கீல்வாதம் மூட்டு வலி மற்றும் விறைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும். சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், இடுப்பு மற்றும் முழங்கால்கள் போன்ற எடை தாங்கும் பாகங்களில் இது சிதைவை ஏற்படுத்தும். முடக்கு வாதம் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அழற்சி நோயாகும். இது முதலில் மூட்டின் சினோவியம் அல்லது புறணியை குறிவைக்கிறது, இதன் விளைவாக வலி, விறைப்பு, வீக்கம், மூட்டு சேதம் மற்றும் மூட்டுகளின் செயல்பாடு இழப்பு ஏற்படுகிறது. வீக்கம் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களின் மூட்டுகளை ஒரு சமச்சீர் வழியில் பாதிக்கிறது.

    மூட்டுகளை பராமரிக்கும் எளிய வழிமுறைகள்

    வாதத்தின் பண்புகளில் குளிர்ச்சி மற்றும் வறட்சி ஆகியவை அடங்கும். எனவே குளிர்காலத்தில், மூட்டு தசைகள் மற்றும் எலும்புகள் கடுமையான வாதத்தால் கடினமாகவும் வலியுடனும் இருக்கும். இதை எப்படி தடுப்பது? உங்கள் மூட்டுகளை சூடாக வைத்திருக்கும் ஆடைகளை பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள், எள் எண்ணெய் அல்லது பிற மருத்துவ எண்ணெய்களை கொண்டு உங்கள் மூட்டுகளை தவறாமல் மசாஜ் செய்யுங்கள்.

    நேராக நிற்பது மற்றும் உட்காருவது, உங்கள் கழுத்தில் இருந்து முழங்கால்கள் வரை மற்றும் இடுப்பு மூட்டுகள், முதுகு தசைகளை பாதுகாக்க உதவுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு முதுகுபையை பயன்படுத்தினால் அதை இரு தோள்களிலும் வைக்க வேண்டும். பளு தூக்கும் போது, உங்கள் முதுகை வளைப்பதற்குப் பதிலாக உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய தசைகளை கொண்ட முழங்கால்களை பயன்படுத்துங்கள்.

    ஆரோக்கியமான மூட்டுக்கு சரியான உடல் எடை அவசியம். அதிக எடையுடன் இருப்பது உங்கள் மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரித்து உங்கள் மூட்டுகளை சேதப்படுத்தும்.

    சிகிச்சை முறை

    மூட்டு நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது, உணவு, மருந்துகள் மற்றும் பஞ்சகர்மாவுடன் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்க பரிந்துரைக்கிறோம். பொதுவாக நாம் இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் கொண்ட உணவுகளை பரிந்துரைக்கிறோம். இது உடலில் உள்ள வாதத்தை குறைக்கிறது. குக்குலு, குடுச்சி, சல்லாகி, அஸ்வங்கந்தா, மஞ்சள் போன்ற மூலிகைகளை உங்கள் உணவில் தவறாமல் பயன்படுத்தலாம். வெவ்வேறு பஞ்சகர்மா சிகிச்சைகள் மூலம் உங்கள் நோயை நிர்வகிக்க ஆயுர்வேத மருத்துவரிடம் முறையான ஆலோசனையை பெறலாம்.

    ஒரு வாகனத்தின் சீரான செயல்பாட்டிற்கு அதன் பாகங்கள் மிகவும் முக்கியம். அதுபோல நம் அன்றாட செயல்பாட்டிற்கு மூட்டுகள் மிகவும் அவசியம்.

    இவர் அவர் கூறினார்.

    • உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம்.
    • முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது.

    மூட்டுவலியும், முதுகுவலியும் பெண்களின் ஆரோக்கியத்தினை பாதிக்கும் ஒரு அங்கமாகவே உள்ளன. பிரசவத்திற்கு பின்னர் பெண்களில் பெரும்பாலானவர்கள் முதுகு வலி அனுபவிக்காத நாட்களே இல்லை எனலாம். முதுகு வலி ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏனெனில் மகப்பேற்றின் போது அளவில் பெரிதாகும் கருப்பையானது கீழ் முதுகு மற்றும் இடுப்பு மூட்டுகளில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் விளைவாக முதுகுவலி உண்டாகக்கூடும்.

    மகவை சுமக்கும் அனைத்து பெண்களும் இத்தகைய வலியினையும் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்தமான ஒன்று. இயற்கையாக ஏற்படும் இத்தகைய மாறுதல்களால் உண்டாகும் முதுகு தண்டுவட வலி ஒருபுறமிருக்க, மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகளால் இது போன்ற தொந்தரவுகள் இன்னும் சற்று கூடுதலாகி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து, ஆரோக்கியத்திற்கான பாதையைக் கடினமாக்குகிறது.

    முதுகு தண்டுவடப் பகுதியில் தண்டுவட எலும்புகளின் இடையே உள்ள சவ்வு வீக்கம், சவ்வு சரிவு போன்ற பல்வேறு நோய்நிலைகள் இன்றைய நவீன காலத்தில் பெண்களை அதிகம் தாக்கி அவர்களை துன்புறுத்துவது இயல்பாகிவிட்டது. அதுமட்டுமின்றி தண்டுவட எலும்புப் பகுதியில் ஏற்படும் கட்டிகளும் முதுகு வலிக்கு காரணமாகின்றன.

    ஆகவே பெண்கள் நாட்பட்ட முதுகு வலியில், ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று எண்ணி அலட்சியம் காட்டாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்கும் அவர்கள் தான் ஆணி வேர். முதுகுவலி ஒருபுறமிருக்க, பெண்களுக்கு வயோதிகப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் கீல்வாதம் அவர்களை அதிகம் துன்புறுத்தும். இந்த மூட்டு வாத நோயை 45 வயது கடந்த பெண்கள் அனைவரும் அனுபவிக்க தயாராக வேண்டிய நிலை உள்ளது வருத்தம் தான். ஏனெனில் பெண்களில் மூன்றில் இருவருக்கு இந்த மூட்டு வாதம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கிறது.

    பொதுவாக இரு முழங்கால் மூட்டுகளில் உண்டாகும் இந்த முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வேதனை, நடப்பதில் சிரமம், உட்கார்ந்து எழுவதில் சிரமம், கால்களை நீட்டி மடக்குவதில் சிரமம், தாங்கி தாங்கி நடத்தல் போன்ற மூட்டு வாத நோயின் பல குறிகுணங்களைக் கொண்டு பெண்கள் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடக்கின்றனர். பல்வேறு நோய் நிலைகள் பெண்களின் மூட்டுக்களை பாதிக்கும் தன்மையுடையதால் மருத்துவரை அணுகி நோய்நிலையைக் கணித்து சிகிச்சையை துவங்குவது நல்லது.

    சித்த மருத்துவ மூலிகைகள் பல பெண்களின் மூட்டுக்களின் வாதம் சார்ந்த அனைத்து நோய் நிலையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளன. தசமூலம், ஓமம், முருங்கை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, ஆமணக்கு, நொச்சி, குந்திரிக்கம், அரத்தை, குறுந்தொட்டி, அமுக்கரா, நிலவேம்பு, திரிபலை,திரிகடுகு, குங்கிலியம் போன்ற மூலிகைகள் அவற்றில் சில. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வலி நிவாரணி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி நோய்களுக்கு சித்த மருத்துவம் எளிமையாக வலியுறுத்துவது முருங்கையைத் தான். நவீன உலகத்தில் எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை நாட துவங்கி விட்டதால், முருங்கை போன்ற மருத்துவ குணமிக்க எளிய மூலிகை மருந்துகள் பல நம் நாட்டினருக்கு மறந்தே போய்விட்டது.

    முருங்கை கீரையுடன் மூட்டு வலியை குறைக்கும் மருத்துவகுணமுள்ள, இஞ்சி, பூண்டு, மிளகு, பெருங்காயம், மஞ்சள், சீரகம் இவற்றுடன் சிறிது உப்பிட்டு சூப் வைத்து அருந்தினால் மூட்டுகளுக்கு வலிமை கிடைக்கும். அடிக்கடி இதனை எடுத்து வர பெண்கள் வயோதிக பருவத்தில் கூட மூட்டு நோயில் இருந்து விடுபட்டு வீறு நடை கொள்ள முடியும்.

    சித்த மருத்துவ மருந்தான 'குந்திரிக்க தைலம்' எனும் மருந்தினை மூட்டுகளின் வீக்கத்தின் மீது தடவி வெந்நீரில் ஒத்தடமிட வீக்கம் குறைந்து நிவாரணம் தரும். பிண்ட தைலம் எனும் சித்த மருந்தையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    மூட்டு வலியால் அவதியுறும் பெண்கள் பாலில், மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து தொடர்ந்து எடுக்க நிச்சயம் நல்ல பலன் தரும்.

    சர்வ ரோக நிவாரணியான அமுக்கராக் கிழங்கு சேர்ந்த அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்தை பாலில் கலந்து எடுப்பதன் மூலம் மூட்டு வலி, முதுகு வலி சார்ந்த நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதை வீக்கமான இடத்தில் முட்டை வெண்கருவுடன் சேர்த்து பற்று போட்டாலும் வீக்கம் குறைந்து வலி குறையும்.

    மூட்டு வாதத்திற்கென தனிச்சிறப்பு மிக்க கீரை முடக்கறுத்தான். முடக்கறுத்தான் கீரையில் உள்ள லுடியோலின் மற்றும் அபிஜெனின் குளுகுரோனிட் ஆகிய முக்கிய வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தை குறைப்பதோடு, தேய்ந்த குருத்தெலும்புகளுக்கு புத்துணர்வு தந்து மீண்டும் வளர்ச்சி பெற உதவுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூடு தன்மையுள்ள முடக்கறுத்தான் கீரை நோய்க்கு காரணமாகும் சித்த மருத்துவம் கூறும் வாதம்,கபம் இவற்றை குறைத்து மூட்டு வலியை குறைக்கும். அவ்வப்போது முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலும், சூப் வைத்து குடித்தாலும் வாதத்தை குறைக்கும்.

    மூட்டு சார்ந்த நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் வாதம் பாதிப்படைவதே முதன்மைக் காரணம் என்கிறது சித்த மருத்துவம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வதும். அவ்வப்போது மலச்சிக்கலை போக்கிக் கொள்வதும் வாதத்தை குறைக்கும் எளிமையான வழிமுறைகள்.

    சாதாரணமாக ஏற்படும் இடுப்பு வலி, முதுகு தண்டுவட எலும்பு பகுதிகளில் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கங்களுக்கு நொச்சி, ஆமணக்கு இலை, எருக்கு இலை, வாதமடக்கி எனும் தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவைகளில் ஒன்றை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடமிட நல்ல பலன் தரும். அல்லது இவை சேர்ந்த சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் காரணிகளை தடுக்க கூடியதாக உள்ளன.

    நொச்சி இலையை குளிக்கின்ற வெந்நீரில் போட்டு குளிக்க இடுப்பு வலி, மூட்டு வலிகளை குறைக்கும். அல்லது யூகலிப்டஸ் இலைகளை போட்டு குளித்தாலும் வலி குறையும். மூட்டுகளில் சேரும் கபமாகிய குளிர்ச்சியும், வாதமாகிய வாயுவும் வலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுவதால் குளிர்ச்சி, வாயுவை அதிகரிக்கும் உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் மூட்டுகளில் வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    வலிகளை குறைக்க மருந்துகளை உட்கொண்டு சளைத்தவர்கள், வலியைக் குறைக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் சிறிது கற்பூரம், கொஞ்சம் ஓமம் சேர்த்து காய்ச்சி பதமான சூட்டில் மேலே தடவி வர நிவாரணம் தரும். மூட்டு வீக்கங்களுக்கு சோற்றுக்கற்றாழை மடலை சூடாக்கி ஒத்தடம் இடுவது நல்லது. இயற்கையாக வீக்கமுருக்கி செய்கை தன்மையுள்ள மஞ்சளையும், கல்லுப்பையும் சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒத்தடம் இடுவதும் வீக்கம் குறைய வழிவகை ஆகும்.

    ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாதம், ருமட்டாய்டு எனும் முடக்கு வாதம், யூரிக் அமிலம் உப்பு படிவதால் ஏற்படும் கீல்வாதம் ஆகிய மூன்று முக்கிய வகைகளுமே பெண்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. கருவில் பிள்ளையை சுமந்து உச்சக்கட்ட வலியான பிரசவ வலியை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் பெண்கள், இத்தகைய மூட்டு வலிகளை தாங்க முடியாமல் தவிப்பது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவலநிலைக்கு ஆளாக்கும். நோயின் தன்மையை பிரித்தறிந்து துவக்கத்திலேயே சித்த மருத்துவத்தை நாடுவது நோயின் தீவிரத்தை குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவும்.

    சித்த மருத்துவத்தின் தனி சிறப்பு வெளி மருத்துவ முறைகள் 32 என்பதும் தான். சித்த மருத்துவத்தின் புற மருத்துவ முறைகளில் சிறப்பு மிக்க ஒன்று பற்று போடும் முறை. மூட்டு வலி,முதுகு தண்டுவட வலி போன்ற நோய் நிலைகளில் வீக்கத்தை குறைக்கவும், எலும்புகளை வன்மைப்படுத்தவும் ஆவாரை இலை,முருங்கை இலை, கருப்பு உளுந்து இவற்றுடன் சேர்த்து முட்டை வெண்கருவுடன் பற்று போட்டு வர சிறந்த பயன் தரும். சித்த மருத்துவம் கூறும் உள்மருந்துகளை மட்டும் பயன்படுத்துவதை விடுத்து வெளி மருந்துகளையும் பயன்படுத்தினால் ஆரோக்கியம் விரைவில் கிட்டும்.

    உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பேணிக்காக்க வேண்டும். அத்துடன் உணவே மருந்து எனும் சித்த மருத்துவ அடிப்படையினை பின்பற்ற துவங்கினால் மூட்டு வலி மாத்திரம் அல்ல, இன்னும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளையும் தடுத்து நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
    பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம். பாதங்களில் பிரச்சனை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம். பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்’’.

    சியாட்டிகா (Sciatica)

    சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை  பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.

    தட்டைப்பாதங்கள் (Flat Feet)

    முன் பாதத்துக்கும் குதிகாலுக்கும் இடையே ‘ஆர்ச்’ (Arch) போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத் `தட்டைப் பாதம்’ என்பார்கள். இது பெரும்பாலும், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுகிறது. அதற்கேற்ப ஷூ அணியாவிட்டால் சிலருக்குப் பாதத்தின் `ஆர்ச்’ பகுதியிலும் குதிகால்களிலும் வலி ஏற்படும். நாளடைவில் நிற்பது, நடப்பது போன்ற நிலைகளிலும் மாற்றம்  ஏற்பட்டு, அது கால் மூட்டு, இடுப்பு, பின்புறப்பகுதி, முதுகு ஆகியவற்றிலும் வலியை உண்டாக்கும். பாதங்களின் `ஆர்ச்’ எப்படி இருக்கிறதோ அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.



    குதிகால் வலி (Achilles Tendinopathy)

    குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும்.  பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.

    காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்

    * காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.

    * இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.

    * குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.

    * தரையில் வழுக்காத  செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

    * தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை.  பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

    * சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது பாதங்களிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படுகின்றது. இதற்கான சில பொது காரணங்களை இங்கு பார்ப்போம்.
    கணுக்காலிலும், காலிலும் வீக்கம் என்பது அசவுகர்யமாக இருக்கும். கவலை அளிக்கும். இதற்கு பல முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆனால் சில சாதாரண காரணங்களும் இருக்கக் கூடும். வெகு நேரம் நிற்க நேர்ந்தால் கூட இந்த வீக்கம் ஏற்படும். பாதமும் கணுக்காலும் கீழ் கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது ஏற்படுகின்றது. அதில் சில பொதுவான காரணங்களை கீழே பார்ப்போம்.

    * பலருக்கு அதிக நேரம் நின்று கொண்டே பார்க்க வேண்டிய வேலை இருக்கும். கால்களை நகர்த்தாது, அசைக்காது, நடக்காது தொடர்ந்து ஓரிடத்தில் நின்று கொண்டே வேலை பார்க்கும் பொழுது கால்களில் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகின்றது. இதனால் பாதம், கணுக்கால் இவற்றில் நீர் தேக்கம் ஏற்படுகின்றது.

    அதே போன்று கால்களை வெகு நேரம் தொங்க போட்டவாறு உட்காருபவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. 30 நிமிடங்களுக்கொருமுறை 5 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும். இதனை முறையாக செய்யாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும்.

    * இறுக்கமாக அணிவதால் கால்களில் கொப்பளம் ஆகுவது மட்டுமல்ல கணுக்காலில் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இறுக்கமான ஷீக்களை அணிவதனை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

    * அதிகம் உப்பு உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நீர்தேக்கம் இருக்கும். இது பாதம் கணுக்கால் மட்டுமல்ல, உடல் முழுவதுமே வீக்கத்தினை உண்டாக்கும். இதுபோன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    * அதிக எடை உடலில் கூடும் பொழுது உடல் இந்த எடையினைத் தாங்க கூடுதல் உழைப்பினைத் தர வேண்டும். கால், பாதங்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதால் காலில் வீக்கம் ஏற்படலாம். இத்தகையோர் தகுந்த உணவு முறை அறிவுறுத்தலின் படி முயற்சித்து எடையை குறைக்க வேண்டும். முறையான உடல் பயிற்சியினையும் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்திலும் கால், பாதத்தில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் மருத்துவ ஆலோசனையை முறையாய் பின்பற்ற வேண்டும்.

    * கணுக்கால், கால் வீக்கம் என்பது இருதய பாதிப்பினாலும், வலுவிழந்த இருதய தசைகள் காரணமாகவும் ஏற்படலாம். சோர்வு, மூச்சிறைப்பு, இருமல், எடை கூடுதல், அடிக்கடி சிறுநீர் செல்லுதல் போன்ற அறிகுறிகளுடன் கணுக்கால், பாத வீக்கமும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    * எலும்பு முறிவு, மூட்டு முறிவு போன்றவை ஏற்பட்டால் வீக்கம் இருக்கவே செய்யும். மருத்துவ சிகிச்சையே இதற்குத் தீர்வு.

    * பாக்டீரியா, பூஞ்ஞை பாதிப்புகளும் கணுக்கால், பாதத்தில் இருந்தால் வீக்கம் இருக்கும். மருத்துவ சிகிச்சை அவசியம்.

    * காரில், ரயிலில், விமானத்தில் வெகு நேரம் காலை தொங்க போட்டுக் கொண்டு செல்லும் பொழுது கால் சிறிது வீங்கலாம். இது பின்னர் எழுந்து நடக்கும் பொழுது தானே சரியாகி விடும். அப்படி இல்லையெனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 
    ×