என் மலர்
நீங்கள் தேடியது "Lok Sabha"
- 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு
- ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது.
மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் எதற்காக கூறினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
சபாநாயகர் கூறியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற தகவலை கூறினார். பின்னர் தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்தார்.
மக்களவையில் நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அன்று, பிரதமர் மோடி, கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதில் கூடுதல் தகவல்களை கூற விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சபாநாயகரைச் சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை
- வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை 3 மொழிகள் கற்றுக் கொள்ள சொல்கிறார்கள் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய கலாநிதி வீராசாமி, "நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் பல ஆண்டுகால முயற்சியினால் வறுமை ஒழிக்கப்ட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 -10% ஆகவும் பீகாரில் 20% ஆகவும் உத்தரபிரதேசத்தில் 15 -20% ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகளை எடுத்து பாருங்கள். 1967 பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் வறுமை என்று பேசுவது நீங்கள் சொல்வது போல வருடத்திற்கு ரூ.27,000 சம்பாதிப்பவர்கள் பற்றி அல்ல. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிறோம்.
அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குகிறோம். இதனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் (GER) 25%. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய GER விகிதம் 52%.
10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது தமிழ்நாடு, ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான்.
தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2,157 கோடி கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது.
எங்களுக்கு அந்த ரூ.2,157 கோடி வேண்டாம் என்றும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களது முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை. வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
அவர்கள் 3 மொழியை கற்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான 3 ஆவது மாநிலத்தில் இருந்து தற்போது 2 ஆவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
- மக்களவையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது.
- மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தி.மு.க. எம்.பி. வில்சன் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், "மாநிலங்களவையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ள நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எனவே சட்டவிதி 267-ன்கீழ் அனைத்து அலு வல்க ளையும் ரத்து செய்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. இதை வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.
அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. மத ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கர்நாடகா காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு எதிராக நடந்து வருகிறது.
கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கிறார். தங்கள் கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டை செய்ய இருப்பது சரியானது அல்ல. இதை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்," என்றார்.
ஜே.பி.நட்டா பேசியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும் போது, "நட்டாவின் பேச்சுகளை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களுக்கு நன்மை தரும் இட ஒதுக்கீட்டை யாராலும் அகற்றி விட முடியாது," என்று கூறினார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்குரல் கொடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மக்களவை இன்று 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
அப்போது சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுந்து உத்தர பிரதேசத்தில் கொலை-கொள்ளை அதிகரித்து விட்டது. அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். உடனே சமாஜ்வாடி எம்.பி.க்கள் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிடித்தனர்.
இதை கண்டதும் சபாநாயகர் ஓம்பிர்லா கோபம் அடைந்தார். இப்படி நடந்து கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மக்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
- கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம்.
- எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றார்.
புதுடெல்லி:
மக்களவையில் பிரதமர் மோடி கும்பமேளா விவகாரம் குறித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கும்பமேளா விவகாரத்தில் பிரதமர் மோடி சொல்வதில் உடன்படுகிறேன். கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம்.
ஆனால் ஜனவரி 29-ம் தேதி மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?
நான் சொல்ல விரும்பிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்களுக்கு பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயம் தேவை.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. பிரதமர் வேலைவாய்ப்பு குறித்து பேச வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி இல்லை. ஜனநாயக கட்டமைப்பின்படி மக்களவையில் பேச அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. காரணம் இது புதிய இந்தியா என தெரிவித்தார்.
- நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல சிவாஜி மறு அவதாரம் எடுத்துள்ளார்
- பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முந்தைய பிறவியில் புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று என்று பாஜக எம்.பி. பிரதீப் புரோகித் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதீப் புரோகித், "பிரதமர் மோடி அவரது முந்தைய பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று ஒரு துறவி என்னிடம் கூறினார். பிரதமர் மோடி உண்மையிலேயே சத்ரபதி சிவாஜி தான் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அவர் மறு அவதாரம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டார் என்று பாஜக எம்.பி.க்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை பா.ஜ.க. எம்.பி. எழுப்பினார்.
- மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக சாடினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை எழுப்பினார். அகவிலைப்படி விவகாரத்தில் அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசால் நேரடியாக உதவ முடியுமா? என கேட்டார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு எம்.பி.க்களும் மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட ஓம் பிர்லா, உங்களுக்குள்ளே விவாதிக்க வேண்டாம். மக்களவையை ஒரு மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என சாடினார்.
- மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு அனுராக்சிங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
- தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளது
புதுடெல்லி:
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும், சில மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன என்றும் மத்திய மந்திரி கூறி உள்ளார். மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அம்சங்களை இயற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக ஆளுநர் ரவி, மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கூறியிருந்தார். மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
- நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2023-24ல் மொத்த செலவினம் ரூ.45,03,097 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த மூலதனச் செலவு ரூ.10,00,961 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளி, ராகுல் காந்திக்கு எதிராக ஆளும் பாஜக எம்.பி.க்களின் போர்க்கொடி என பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் பணிகள் முடங்கின. இதனால் பட்ஜெட் மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே, மக்களவையில் விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் அடுத்தடுத்த ஒத்திவைப்புகளுக்கு பிறகு மாலையில் மீண்டும் அவை கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா, அரசின் செலவின திட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2023-24க்கான மானிய கோரிக்கைகள் மற்றும் அதன் தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், விவாதமின்றி மசோதா நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி அவையில் இருந்தார்.
பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்க தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடைமுறை 12 நிமிடங்களில் நிறைவடைந்தது. இனி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்த வரி திட்டங்களை கொண்ட நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
பட்ஜெட் தொடர்பான மசோதாக்கள் அனைத்தும் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது எந்த மாற்றமும் செய்ய முடியாது. மக்களவையில் மட்டுமே ஒப்புதல் தேவைப்படும் 'பண மசோதாக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மசோதாக்கள் விவாதத்திற்குப் பிறகு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படும்.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைய உள்ளது. பட்ஜெட் நடைமுறைகள் முடிந்த பிறகு கூட்டத் தொடரின் காலம் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
- மாநிலங்களவை மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் பணிகள் முடங்கின.
அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவையை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதனையடுத்து மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.
- இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
- உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான்.
இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
- அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் பேசினார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மசோதாவை அறிமுகம் செய்து பேசினார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் எதிர்ப்பு தெரிவித்தார். இது கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கருத்தை மீறுவதாக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறிய அவர், இந்த மசோதா டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் என்றார்.
- நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்று ராகவ் சத்தா தெரிவித்தார்.
- மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.
இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா கூறுகையில், இந்த மசோதா முந்தைய அவசரச் சட்டத்தை விட மோசமானது என்றும், நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களிலேயே மிகவும் ஜனநாயக விரோத பேப்பர் என்றும், இது ஜனநாயகத்தை அதிகாரத்துவம் மூலம் மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டார்.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஆளுநர் மற்றும் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கும் எனவும் ராகவ் சத்தா தெரிவித்தார்.
மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.