என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LokSabhaElections"

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PChidambaram
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், நாட்டின் அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும், முக்கிய தலைவர்களும்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் சமூக வலைத்தளங்களிலும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    அந்த வகையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பா. சிதம்பரம் தேர்தல் குறித்து இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18.

    ‘நீட்' தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது தற்போது எளிதாகிவிட்டது. மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா?

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PChidambaram 
    கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிருஷ்ணகிரியில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை  ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வந்திருக்கக்கூடிய தொண்டர்கள், மக்களுக்கு மனமார வணக்கம் தெரிவிக்கிறேன். இந்தியா எனும் ஒரு நாட்டிற்கு பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த வித்தியாசங்கள், நாகரீகம் , பண்பாடு,  வரலாறு, மொழி, ஆகியவற்றை நாம் அதிகம் மதிக்கின்றோம்.

    நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உண்டு. திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி, பாஜகவை எதிர்க்கின்றது. அவரது ஒரு சிந்தனை மக்களை வழிநடத்தும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இருப்பதை மறந்துவிடுகிறார்.



    தமிழக மக்கள் நினைத்தால் மத்தியிலும் ஆட்சியை மாற்ற இயலும். தமிழ் மக்களின் கலாச்சாரம், தமிழ் மீதான பற்று ஆகியவற்றை மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தமிழர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தமிழக மக்களை அவமதிப்பதால் பாஜக, அதிமுக ஆகியன எப்போதும் ஆட்சி நடத்த இயலாது. அன்பு செலுத்தினால் மட்டுமே ஆட்சி செய்ய இயலும். நான் அதை நன்கு புரிந்திருக்கிறேன். வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என தெரியும்.

    மக்களுக்கு செல்ல வேண்டிய பணம் அனைத்தும் பாஜகவைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே செல்கிறது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமர் மோடி பார்க்கக்கூட இல்லை. இளைஞர்களுக்கு எங்கும் வேலையும்  கிடைக்கவில்லை. எனவே தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும்  நியாயம் கிடைக்கவே காங்கிரஸ் கட்சியினர்  போராடி வருகிறோம்.

    ஜிஎஸ்டி வரி வணிகத்தை அழித்திருக்கிறது. திருப்பூர் வேலைக்கொடுக்கக்கூடிய நகரம், அது இந்த ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த கபர்சிங் வரியால் மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் நியாய் திட்டத்தின் மூலம் ரூ.72 ஆயிரம் பணம் நாட்டில் வாழும் 20% ஏழை மக்களுக்கு அளிக்கப்படும்.

    ஏழைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த பின்னர் தான் பணம் வங்கிக்கணக்கில் போடப்படும். ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெறும்.   மேலும் தமிழகத்தில் தமிழனான ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

    வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரம், திருப்பூர் மீண்டும் புத்துயிர் பெறும். காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசு எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்சி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #RahulGandhi


    உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது , வாக்குச்சாவடிக்குள் செல்பி எடுத்த பாஜக தலைவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Casefiled #ModelCodeofConduct
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற, வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவில் புதிய வாக்களர்களும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர்.

    தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது எனவும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் செயல்படுவதை தடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் அங்கு உள்ள ஆவணங்கள், மற்றும் வாக்கு இயந்திரங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உத்தரகண்டில் பாஜக தலைவர்கள் 4 பேர் உட்பட 11 வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் வாக்களித்துவிட்டு செல்பி எடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செல்பி எடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Casefiled #ModelCodeofConduct



    உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.

    இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிர்தி இரானி  வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   இதனை எதிர்கட்சியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.



    இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில்  ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும்  ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடுஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #SmritiIrani
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இந்நிலையில் 2017ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, சாதி மற்றும் மதத்தினை தேர்தல் பிரசாரங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ளது.

    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் பேசியதாக  நேற்று தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு, 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  #ECNotice #ModelCodeofConduct




    மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் தொகுதியில் உலகிலேயே மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்கினை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #Jyotiamge
    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று  (ஏப்ரல் 11ம் தேதி)  துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே அம்மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இதேப்போல் மக்களும் காலை 7 மணி முதல் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் உலகின் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே (26)  மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை மகிழ்ச்சியுடன் வாக்களித்தார்.

    உலகின் மிகவும் குள்ளமான ஜோதி அம்கே கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ ஆகும்.



    ஜோதி அம்கே ஜோதி அம்கே வாக்களித்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாரஷ்டிரா மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி  38.35% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Jyotiamge


    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ஸ்மிரிதி இரானி தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தனது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து பூஜை நடத்தினார்.



    அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.  அப்போது ஸ்மிர்தி இரானியுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.

    இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SoniaGandhi
    ரேபரேலி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் வரும் மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



    இதற்காக இன்று ரேபரேலி தொகுதியை  அடைந்த சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக புறப்பட்டார்.  காரில் சென்ற சோனியாவிற்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற வேண்டி, இன்று காலை பூஜை நடத்தினார். அப்போது சோனியா காந்தியுடன் அவரது மகள் மற்றும் உத்தரபிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, மற்றும் மகன் ராகுல் காந்தியும் உடன் இருந்தனர்.

    இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி , பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். சோனியா காந்தி போட்டியிடுவதை முன்னிட்டு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi   
    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியினர் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #YogiAdityanath
    பரேலி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.  கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன.



    காங்கிரஸ்,  முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். நான் காங்கிரசிடம் ஒன்றைக்  கேட்க விரும்புகிறேன், நாட்டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்? என கூறுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #YogiAdityanath
    17-வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் 9 மணிவரையிலான வாக்குபதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #Votecasting
    புது டெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.



    இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் பின்வருமாறு:

    மேற்கு வங்காளம் - 18.12%, மிசோரம் - 17.5%, சத்தீஸ்கர்-10.2%, மணிப்பூர்-15.6%, நாகாலாந்து- 21% , சகரன்பூர் -8%, கைரானா - 10%, முசாபர்நகர் - 10%, மீருட் - 10%, பிஜ்னூர் - 11%, பாக்பட்- 11%, காசியாபாத் - 12%, கவுதம் புத் நகர் - 12%, தெலுங்கானா -10.6%, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- 5.83%, அசாம் - 10.2%, அருணாசலபிரதேசம்- 13.3%, லட்சதீவுகள் - 9.83%.  #LoksabhaElections2019 #Votecasting

    பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கடந்த மார்ச் 27 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Urmila #Congress
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது 45). ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து ஏற்கனவே  உறுதி செய்தார்.

    இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கடந்த மார்ச் 27 அன்று கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார்.



    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறியிருந்தார்.

    இந்நிலையில் நடிகை ஊர்மிளா வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #Urmila #Congress


      
    மகாராஷ்டிராவில் பெண் வாக்காளர்களின் வாக்குகளை கவர, அம்மாநில தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. #WomenWorkersBooths
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டின் அனைத்து கட்சியினரும் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 11, 18, 23, மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 8 கோடியே 73 லட்சத்து 29 ஆயிரத்து 910 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4 கோடியே 57 லட்சத்து 1877 பேர் உள்ளனர். ஆண் வாக்களர்களுக்கு நிகராக பெண் வாக்காளர்கள் 4 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரத்து 950 பேர் உள்ளனர்.



    மேலும் இந்த ஆண்டு தேர்தலில், 1000 ஆண் வாக்காளர்களுக்கு 911 பெண் வாக்காளர்கள் என்ற அளவில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதையடுத்து அனைத்து பெண்களும் தவறாமல் ஓட்டு போட ஊக்கம் அளிக்கும் வகையில், அம்மாநில தேர்தல் ஆணையம், சகி மத்தன் கேந்திராஸ் எனும் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளது. 48 தொகுதிகளிலும் தலா ஒரு மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பெண் வாக்காளர்களை கவரும் வகையில், வாக்குச்சாவடிகளை சுத்தமாக வைத்திருந்து, ரங்கோலி உள்ளிட்ட சில கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #WomenWorkersBooths
    ×