search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Mountbatten"

    • திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.
    • ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    குத்தாலம்:

    இந்திய சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சிப் பரிமாற்றத்தைக் குறிப்பிடும் வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் நிறுவப்பட்டது.

    இதுகுறித்து திருவாவடு துறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பல வாண தேசிய பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது:-

    1947-ம் ஆண்டு நிகழ்ந்த செங்கோலை அளிக்கும் நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்து பெருமையடைகிறோம். திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.

    பின்னர், அந்த செங்கோல் திரும்பப் பெறப்பட்டு, கங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. நிறைவாக, பண்டித ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது.

    அண்மையில் பதிப்பிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில், 'செங்கோல் சிறப்பு' என்னும் அத்தியாயத்தில் இதுகுறித்து விவரமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், அப்போதைய ஆதீனர்த்தர் 20-வது மகா சன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்த மாசிலாமணிப் பிள்ளை (96), இந்த நிகழ்வு குறித்து நேரடி சாட்சியாக உள்ளார்.

    மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுத்து வாங்கிய பணியை ஆதீன குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதையும், ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கியதையும், மூதறிஞர் ராஜாஜி ஏற்பாட்டில் இது நடைபெற்றதையும், மதராஸ் ஆட்சியர் ஆதீனத்துக்கு வருகை புரிந்ததையும், செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றதையும் மாசிலாமணிப்பிள்ளை நினைவு கூர்கிறார்.

    ஆதீன குழுவினர் புகைப்படக் கருவியோடு செல்லாத காரணத்தால், மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக, மங்கல நாதமும், திருமுறைத் தமிழும் ஒலிக்க, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஆதீன குழுவினர் முறையாக நிறைவேற்றினர்.

    இவையெல்லாம் பல இடங்களில், ஊடகங்கள் உள்பட பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க வரலாற்றைத் திரித்து, ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்து உள்ளார்.

    ×