search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MANA"

    • 52 வயதான நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
    • "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" என்றார் நிக்கி

    வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களத்தில் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    குடியரசு கட்சியின் சார்பில், டிரம்பை தவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா மாநில கவர்னரும், ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்கா தூதருமான 52 வயதான நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க வழிவகுத்த "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்றுங்கள்" (Make America Great Again) எனும் முழக்கத்தையே இவ்வருட தேர்தலுக்கும் முழக்கமாக கையில் எடுத்துள்ளார், டிரம்ப்.

    தற்போதைய நிலவரப்படி, வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள தலைவராக டிரம்ப் பார்க்கப்படுகிறார்.

    ஆனால், டிரம்புடன் போட்டியிட முன்வந்த பிற தலைவர்கள் பின்வாங்கி விட்ட நிலையிலும் நிக்கி ஹாலே தொடர்ந்து ஆதரவு தேடி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், பிரசாரத்தில் நிக்கி தெரிவித்ததாவது:

    "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" (Make America Normal Again).

    80-வயதுடைய இருவர் பணியாற்றியதை விட நாம் சிறப்பாக பணியாற்ற முடியும்.

    அவர்கள் இருவரின் பரஸ்பர தாக்குதல் மக்களை களைப்படைய செய்து விட்டது. இதில் குழப்பமும் சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.

    தங்களின் சின்னஞ்சிறு நோக்கங்களுக்காக சண்டையிடும் தலைவர்கள் மக்களுக்கு வேண்டாம். அமெரிக்க மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துபவர்களே அவர்களுக்கு அதிபர்களாக வேண்டும்.

    நீங்கள் பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் ஒரு அதிபராக நான் நிச்சயம் பணியாற்றுவேன்.

    இவ்வாறு நிக்கி கூறினார்.

    இதற்கிடையே, "நிக்கி ஹாலே அதிபரானால் அமெரிக்காவை முடிவில்லா போர்களுக்கு தள்ளி விடுவார். ஏனெனில், நிக்கி போர்களையே விரும்புகிறார். தன்னை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் எனக் கூற அவரிடம் இதுவரை சரியான வாதங்கள் ஏதுமில்லை" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

    77 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் 81 வயதான ஜோ பைடன், இருவருமே முதுமை நிலையை அடைந்து விட்டதால், வேறு ஒரு இளம் தலைவர் அதிபராக வேண்டும் என பல வாக்காளர்கள் கருதுவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    ×