என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marakanam"

    • பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
    • ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.

    இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

    பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு.
    • விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    விழுப்புரம்:

    பெஞ்ஜல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

    மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    அவர் விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட அவர் அருகில் உள்ள சேவியர் காலனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பிடாகம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். முன்னதாக மரக்காணம் மேட்டுத்தெருவில் தற்காலிக குடில் அமைத்து வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்டி-சேலை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள மகாராஜாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.வி.ஏ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

    • மீன் பிடிக்க பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
    • மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24). விக்கரம் (23). சூர்யா (23). இதில் விக்ரம், சூர்யா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். லோகேஷ், சூர்யா ஆகியோர் மரக்காணத்தில் உள்ள பூக்கடையிலும், விக்ரம் முட்டை கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அண்ணன்-தம்பிகள் 3 பேர் மேலும் சிலருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.

    அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்த படி கூச்சல் போட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பிகளான விக்ரம், சூர்யா ஆகியோர் லோகேசை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். ஆனால் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் கால்வாயில் மூழ்கிய அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தேடினார்கள்.

    மீனவர்களின் பைபர் படகுகளை வரவழைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

    அப்போது லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா, விக்ரம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கால்வாயில் மூழ்கி பலியான லோகேஷ் உடலை பார்த்து அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×