search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "memory power"

    • மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
    • குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன.

    இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை. அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க....

    பால்

    புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நல்ல பல் ஆரோக்கியம் இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மீன்

    ஞாபக சக்தி அதிகரிப்பதில் முக்கியமான உணவுப்பொருளாக மீன் மற்றும் பிற கடல் உணவுகள் விளங்குகின்றன. காரணம், இவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முட்டை

    முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் "செரடோனின்" என்ற மகிழ்ச்சி ஹார்மோன் உருவாக்கத்திற்கு முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

    நட்ஸ்:

    வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இவை மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5 அல்லது 6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுக்க வேண்டும்.

    ஆரஞ்சு பழம்:

    ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பி உள்ளது, இது ஆரோக்கியமானது. மூளைக்கு இன்றியமையாதது. ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, ஒருநாள் விட்டு ஒரு நாள் முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம். சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

    ×