என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Menstrual Problems"
- கருவுறுதலுக்கு புரோஜெஸ்ட் டிரோன் ஹார்மோன் மிகவும் அவசியம்.
- ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.
புரோஜெஸ்ட்டிரோன் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில், கருமுட்டை விடுப்பின் பின்னர் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் முதன்மை இனப்பெருக்க ஹார்மோன் ஆகும்.
கருவுறுதலுக்கு இது மிகவும் அவசியம். அதனால் இதை கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். இது, ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.
குறைவான புரோஜெஸ்ட்டிரோன் ஒரு பெண்ணின் இளமை பருவத்தில் அல்லது மாதவிடாய் முடிவதற்கு அதாவது மெனோபாசுக்கு முன்னர் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கும்.
அறிகுறிகள்
சராசரி மாதவிடாய் சுழற்சி 28-30 நாட்கள் ஆகும். 25 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய் சுழற்சிகள், ஒரேமாதத்தில் இருமுறை வருகிற மாதவிடாய், சிறிது சிறிதாக வரும் ஸ்பாட்டிங் போன்றவை குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறிக்கலாம். இதனால் கருப்பையில் எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சியை சரிவர பராமரிக்க முடியாது. எனவே ஸ்பாட்டிங் ஏற்படலாம்.
புரோஜெஸ்ட்டிரோன் குறைவால் முதல் மூன்று மாத கர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவு ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்திற்கு பங்களிக்கலாம். அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இதனால் கடுமையான ரத்தப்போக்கு, வலி மிகுந்த மாதவிடாய், மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை ஏற்படுகிறது.
உணவுப் பழக்கவழக்கங்கள்
புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க உணவில் வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். ஏனெனில் அவை இனப்பெருக்க ஹார்மோன்களுக்கான கட்டுமானத்திற்கு அத்தியாவசியமானது.
அலிசி விதை (பிளாக் சீட்), ஆளி விதை, சியா விதை, பூசணி விதை, தேங்காய், பாதாம், பிரிம்ரோஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நல்லது.
புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க வைட்டமின் பி6 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளும் உதவியாக இருக்கும்.
மத்தி மீன், சால்மன், சூரை மீன், ஆட்டுக்கல்லீரல், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பருப்பு வகைகள், அவகேடோ, பெர்ரி பழங்கள், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் புரோலாக்டின் மற்றும் கார்டிசோல் இரண்டையும் அதிகரிக்கலாம். இது கரு முட்டை வெளிவரும் போது புரோஜெஸ்ட்டிரோன் அளவை பாதிக்கும். சீரான உடற்பயிற்சி, யோகா, இறை தியானம் நல்ல பலனைத் தரும்.
சித்த மருத்துவம்
1) குமரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
2) சதாவரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
3) கல்யாண முருங்கை இலை, விஷ்ணுகிரந்தி, அசோகப்பட்டை, கரு நொச்சி, ஆலம் விழுது, கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் போன்ற மூலிகைகளில் செய்த ஏராளமான மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.
- இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது.
- இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் முகப்பரு. நெஞ்செரிச்சல், தொப்பை கொழுப்புகளுக்கு அதிசய தீர்வாக இருக்கும். மாதவிடாயை தாமதப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் மீது தாக்கம் ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு ஆப்பிள் சீடர் வினிகரானது ரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இயல்பான இனப்பெருக்க சுழற்சிகள் இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் உண்டாக்கலாம் என்று கண்டறிந்துள்ளது.
ஆப்பிள் சீடர் வினிகர் மாதவிடாயை தாமதப்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதை நேரடியாக எடுக்க கூடாது. இது பற்கள் மற்றும் வாய் தொண்டையில் இருக்கும் மென்மையான திசுக்களில் எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும். அதனால் இதை எப்போது எடுத்துகொண்டாலும் தண்ணீரில் நீர்த்து எடுக்க வேண்டும்.
உளுந்து
மாதவிடாய் அறிக்கைகள் மூலம் மாதவிடாய் வருவதற்கு முன்பு உளுத்தம் பருப்பை வறுத்து பொடியாக்கி சாப்பிடுவது அதை தள்ளிபோட செய்யும் என்கிறது. ஆனால் இது குறித்து நிரூபனமான ஆராய்ச்சிகள் இல்லை. அதிகமாக இவை எடுத்துகொள்வதால் வயிறு உபாதை, மற்றும் வாய்வு உண்டாகும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஆப்பிள் சீடர் சாறு போன்று அதிக அமிலத்தன்மை கொண்டது. சிட்ரஸ் பழங்கள் ரத்தப்போக்கை பின்னுக்கு தள்ளக் கூடும் என்று சொல்கிறது.
அதிக அமிலம் உள்ள உணவுகள் உங்கள் பற்கள், ஈறுகள், வாய், தொண்டை, வயிறு மற்றும் குடல்களை எரிச்சலூட்டும். இந்த முறையில் நீங்கள் விரும்பினால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம்.
ஜெலட்டின்
ஊன்பசை என்று அழைக்கப்படும் இதை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிப்பது மாதவிடாயின் தொடக்கத்தை சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதப்படுத்தலாம். உங்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டால் மீண்டும் இந்த சிகிச்சையை தொடங்க வேண்டும்.
ஜெலட்டின் மாதவிடாய் தொடக்கத்தை தாமதப்படுத்துவதற்கு இயற்கை ஊக்குவியாக ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாக இல்லை. இதை ஆதரிக்க ஆராய்ச்சிகள் இல்லை. அதிக அளவு ஜெலட்டின் குடிப்பது செரிமான கோளாறு போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
தீவிரமான உடற்பயிற்சி
தீவிரமான அல்லது அதிகமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாதவிடாய் தொடங்குவது தாமதமாகலாம். மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அதிக உடல் உழைப்பு அல்லது இயல்பாகவே அதிக உழைப்பு கொண்டவர்களுக்கு அது சரியான நேரத்தில் தொடங்குவதில்லை.
உடற்பயிற்சி மற்றும் மீட்பு ஆகிய இரண்டுக்கும் உடல் ஆற்றல் பயன்படுத்தும் போது மாதவிடாய் சுழற்சியை நிறைவேற்றுவதற்கு ஆற்றல் இருப்பு இல்லாமல் இருக்கலாம் என்பதால் இந்த நிலை உண்டாகிறது., அதனால் தான் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மாதவிடாயை அடிக்கடி தவறவிடுகிறார்கள். ஒரு காலத்தை தாமதப்படுத்த உடற்பயிற்சி செய்தால் போதும் என்பதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவிடாய் தாமதப்படுத்த இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது. ஆனால் என்னவாக இருந்தாலும் அது குறித்து முழுமையான ஆராய்ச்சி தேவை. ஏனெனில் இயற்கை வைத்தியங்கள் பாதுகாப்பானதாக இருந்தாலும் ஆராய்ச்சிகள் அவை பயனுள்ளவை என்பதை நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள். தவிர்க்க முடியாத காலங்களில் மட்டுமே உங்கள் காலங்களை தள்ளிப்போடலாம். அதுவும் மருத்துவர் அறிவுறுத்திய அறிவுறுத்தலின் படி.
முதலில் பெண்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலையில் செயல்படும் போது அதை தடுக்கும் வகையில் நாமே செயல்படுகிறோம். இது நல்லதல்ல. ஏனெனில் ஒவ்வொருவரது உடல் அமைப்பும், செயல்பாடும் மாறுபடும். இதை உங்கள் மருத்துவரால் மட்டுமே உணர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
மாதவிடாய் முன்னாடி வருவதற்கு அல்லது தாமதமாவதற்கு மாத்திரைகள் எடுத்து கொள்வது அதிலும் சுயமாக எடுத்துகொள்வது மோசமானது. இதை மருத்துவரிடம் ஆலோசித்தால் மருத்துவர் 3 நாட்களுக்கு முன்பு தொடங்கி அதற்கேற்ப அது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பரிந்துரைப்பார்கள். அது உங்கள் உடல் நிலை, காரணம், தாமதப்படுத்த வேண்டிய நாட்கள் போன்றவற்றை பொறுத்தது.
அதோடு உங்கள் தேவைக்கேற்ப அது புரோஜெஸ்ட்ரோன் அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கலந்து கொடுக்கப்படும். இதன் அளவு கூட்டி, குறைத்து உங்கள் தேவைக்கேற்ப மருத்துவரால் மட்டுமே வழங்கமுடியும். இனி மாதவிடாய் தாமதத்துக்கு மாத்திரைகள் போடும் போது உங்கள் உடல் மாற்றம் குறித்தும் யோசியுங்கள்.
- மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும்.
- பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.
மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் பருவமடைதலுக்கு பிறகு ஒவ்வொரு 28 நாட்களிலும் வரக்கூடிய நிகழ்வு. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 முதல் 35 நாட்களுக்கு இடையில் வரலாம்.
சிலருக்கு இந்த நாட்களை தாண்டியும் மாதவிடாய் சுழற்சி வரலாம். எல்லா மாதமும் இதேபோல் ஒரே சீராக வரும் என்று சொல்ல முடியாது.
உடலில் ஹார்மோன்களின் சுழற்சிக்கு இடையில் வரக்கூடிய இந்த மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். ஆனால் பலரும் இந்த மாதவிடாய் சுழற்சி அவர்கள் விரும்பும் நேரத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளி வைக்க நினைக்க கூடாது. ஏனெனில் உடல் இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்தால் அவை பிரச்சனையை உண்டு செய்யலாம்.
தவிர்க்க முடியாத சூழலில் அதாவது ஒரு பெண் அதிக கனமான மாதவிடாய் காலங்களை வலியோடு எதிர்கொள்ளும் போது அவர்கள் பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போது அல்லது அவர்களே விழா நாயகியாக திருமணப்பெண்ணாக இருக்கும் போது இதை தவிர்க்க நினைக்கலாம். அதோடு இவை அடிக்கடி செய்ய வேண்டியிராது என்பதால் இதை செய்வதில் பிரச்சனையில்லை.
மாதவிடாய் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் மருந்துகளை சுயமாக எடுக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். சரியான முறைகளை பயன்படுத்தி மாதவிடாய் தாமதப்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான விஷயம் தான்.
ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். அடிக்கடி விரும்பும் வகையில் மாதவிடாய் காலங்களை மாற்றிக்கொள்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் தள்ளிப்போட எடுக்கும் மருந்துகளில் செயற்கை புரோஜெஸ்ட்ரான் அல்லது ஈஸ்ட்ரோஜன் உள்ளது. அதிகமாக இதை பயன்படுத்தும் போது வருங்காலத்தில் அந்த பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.
உங்கள் உடலில் நீங்கள் செய்யும் மாற்றங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். அதோடு சுயமாக மருந்துகள் எடுப்பதும் உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம்.
- மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும்.
- புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது.
மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். ரத்தப்போக்கு அளவு நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கு அதிகமாகவும், ரத்தப்போக்கு அதிகரித்தும் காணப்படுவதை 'அதிகரித்த ரத்தப்போக்கு' அல்லது 'பெரும்பாடு' (மெனோரேஜியா) என்பார்கள். இதற்கான காரணங்கள் வருமாறு:-
1) ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன்களுக்கு இடையில் உள்ள சமநிலை மாறுபாடு,
2) கருப்பை உள்ளுறுப்புகளான சினைப்பாதை, சினைப்பை இவற்றில் கருப்பை புறணியான எண்டோமெட்ரியம் வளருதல், எண்டோமெட்ரியம் கடினமடைதல்,
3) கருப்பையில் வளரும் சாதாரண தசைக்கட்டிகள், சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் மற்றும் சாக்கலேட் கட்டிகள்,
4) கருப்பை புறணியில் வளரும் பாலிப்ஸ், அடினோமயோசிஸ், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களான காப்பர் டி இவை குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது.
இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. அதிக ரத்த இழப்பின் காரணமாக உடல் பலவீனம், சோர்வு, மூச்சு விட சிரமம் போன்ற உணர்வு வரலாம். எனவே, என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து ஆலோசனை பெறுவது நல்லது.
சித்த மருத்துவம்
இந்த பிரச்சனைகளுக்கு கீழ்க்கண்ட சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து பயன்பெறலாம்.
1) திரிபலா சூரணம் 1 கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.
2) கொம்பரக்கு சூரணம் 1 கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்.
3) திரிபலா சூரணம் 1 கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இரு வேளை ஏழு நாட்கள் உண்ணவும்.
4) வாழைப்பூ வடகம் 1-2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை, இரவு இருவேளை சாப்பிடலாம்.
6) இம்பூறல் மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
7) கரிசாலை லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை, முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 11 வயதிலேயே பருவமடைவது தற்போது சாதாரண விஷயம்.
- ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.
பெண் குழந்தைகள் பருவ மடைதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம். நாகரீகம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள இப்போதைய காலகட்டத்தில் 92 முதல் 94 சதவீத பெண் குழந்தைகள் 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.
மேலும் சில பெண் குழந்தைகள் 11 வயதிலேயே பருவமடைவதும் தற்போது மிகவும் சாதாரண விஷயமாகவே கருதப்படுகிறது.
இதற்கு முந்தைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் 14 வயது மற்றும் 15 வயதில் பருவமடையும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன் விளைவாக 11 முதல் 13 வயதுக்குள் பருவமடைய தொடங்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் பருவமடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தனர்.
ஆனால் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கூட பருவமடைதல் பற்றி நிறைய விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பருவமடையாவிட்டால் அதற்கான காரணத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
மேலும் இதுபற்றி தங்கள் வகுப்பு தோழிகளிடமும் பேசி ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பருவமடையும் வயதை கடக்கும் போது இதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையாக சில குழந்தைகள் எதிர்நோக்குகிறார்கள்.
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 15 வயதான பிறகும் பருவம டையாமல், மாத விலக்கு வராமல் இருக்கும் நிலை இன்றும் உள்ளது. பெண் குழந்தைகள் பருவமடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதை மருத்துவத்தில் பிரைமரி அனனோரியா என்று சொல்கிறோம்.
15 வயதான பிறகும் ஒரு பெண் குழந்தை பருவமடைய வில்லை என்றால் அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாகவே பெண் குழந்தைகள் பருவமடைவதற்கு முன்பு உடல் ரீதியாகவே சில மாற்றங்கள் நடக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு 12 வயது பிறந்ததுமே உடலின் உயரம் அதிகரிக்க தொடங்கும். மார்பக பகுதியில் வளர்ச்சி ஏற்படும். அந்த பெண் குழந்தையை பரிசோதிக்கும் போது பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமே உருவாகத் தொடங்கி இருக்கும். அதுபோன்ற மாற்றங்களால் அந்த பெண் குழந்தை 13 வயதில் பருவமடைந்து விடும்.
சிலநேரங்களில் அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும், அடி வயிற்றில் வலி இருக்கும். ஆனாலும் அதுபோன்ற குழந்தைகள் சரியான வயதில் பருவமடைந்து விடுவார்கள். 11 வயதில் இருந்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றங்களின் விளைவாக 12 அல்லது 13 வயதில் அவர்களுக்கு மாதவிலக்கு வந்துவிடும்.
இவை அனைத்தும் எதைக் குறிக்கிறது என்று பார்த்தோம் என்றால் சினை முட்டைகள், சினைப்பையில் வளரும் பொழுது அந்த பெண்ணுக்கு உடல் அளவில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு வருகிறது.
15 வயதாகியும் மாதவிலக்கு வரவில்லை என்று சில குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். அந்த குழந்தைகள் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள். உடல் அளவிலும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத விலக்கு வராமல் இருக்கும்.
ஆனால் பரிசோதனைகள் மூலமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் மாதவிலக்கு வரவில்லை என்று பல நேரங்களில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும்.
பெண் குழந்தைகளுக்கு சினை முட்டைகள் வளரும் போது அந்த வளர்ச்சிக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் உடலில் எல்லா இடங்களிலும் மாற்றங்களை உண்டாக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இல்லாமல் சினை முட்டைகள் சரியாக வளராத பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் வளர்ச்சி இருக்காது. அந்த பெண் குழந்தை ஒல்லியாக இருப்பார்கள். உயரமும் குறைவாக இருப்பார்கள்.
ஒரு பெண் குழந்தை பருவமடைந்ததும் மாதவிலக்கு வருவது எதைக் குறிக்கிறது என்றால் அந்த பெண் குழந்தைக்கு சினை முட்டைகள் வெளியாகத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும்.
அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையும் போது சினைப்பையில் கோடிக்கணக்கில் முட்டைகள் காணப்படும்.
இந்த முட்டைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஹைபோதலாமஸ் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வர ஆரம்பிக்கும். இதனுடைய தூண்டுதலின் காரணமாகத்தான் இந்த முட்டைகள் வளரும். முட்டைகள் வளர வளர அதில் இருந்து வரும் ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.
மேலும் அந்த பெண் குழந்தைக்கு மார்பக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் தான். இந்த முட்டைகள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அது வெளிவர ஆரம்பிக்கும் போதுதான் கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடைந்து மாதவிடாய் வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு முதல் முக்கியமான காரணம் முட்டை வளர்ச்சி இல்லாத நிலை தான். முட்டைகள் வளர்ச்சி யாருக்கு இல்லாமல் இருக்கும் என்பதை பார்க்கும்போது சிலருக்கு முட்டைகள் இருக்கும், ஆனால் அது வளர்வதற்கு தேவையான ஹார்மோன் இருக்காது.
அதாவது அதுபோன்ற பெண்களுக்கு மூளையில் இருந்து வரும் ஹார்மோன் தூண்டுதல் இல்லையென்றால் முட்டைகள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இதனால் பருவமடைதல் விஷயத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.
இன்னும் சில பெண் குழந்தைகளுக்கு சினை முட்டை இருக்கும். அந்த சினை முட்டை நன்றாகவே வளரும். அதற்கான ஹார்மோன் மாற்றங்களும் இருக்கும். மார்பகமும் வளரும். ஆனால் மாதவிலக்கு மட்டும் வராது. இது போன்ற சூழலுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகிறது.
அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது கர்ப்பப்பையே உருவாகாமல் இருக்கலாம். அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் அதெல்லாம் சரியாக இருந்தும் மாதவிலக்கு வரவில்லை என்றால் முட்டைகள் இல்லாமல் இருக்கலாம்.
- பெண்கள் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதில் சிரமப்படுகிறார்கள்.
- தாமதமான மாதவிடாய் மன அழுத்தத்தைத் தூண்டலாம்.
ஒரு பெண்ணுக்கு, வழக்கமான மாதவிடாய் அவளது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பெண்ணின் கருவுறுதலையும், ஹார்மோன் அளவையும் சமநிலையில் வைத்திருக்கும். சரியான மருந்து மற்றும் சரிவிகித உணவுக்கு கூடுதலாக உட்கொள்ளும் போது சில உணவுகள் மாதவிடாய் பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சில நேரங்களில், மன அழுத்தம், அதிகப்படியான உணவு அல்லது தேவையற்ற அழுத்தம் போன்ற காரணங்களும் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. தாமதமான மாதவிடாய்கள் மேலும் மன அழுத்தத்தைத் தூண்டலாம். பலர் ஆயுர்வேத சிகிச்சையை நாடுகிறார்கள்.
மஞ்சள்
இது கருப்பை மற்றும் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தின் தூண்டுதலாக செயல்படும் ஒரு எம்மெனாகோக் ஆகும். அதன் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவு கருப்பையை விரிவுபடுத்துகிறது, இது மாதவிடாய் தொடங்குவதைக் குறிக்கிறது. வெந்நீர் அல்லது பாலுடன் மஞ்சளைக் குடிப்பது, மாதவிடாய் காலத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பப்பாளி
பப்பாளி போன்ற பழங்களில் கரோட்டின் உள்ளது, இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டுகிறது, இதனால் மாதவிடாய் முன்கூட்டியே வரும். அன்னாசிப்பழம் இது வைட்டமின் சி அதிகமாக உள்ளது, இது இடுப்பு பகுதியில் வெப்பத்தை உருவாக்கி கருப்பையில் மேலும் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கருப்பையின் புறணி உதிர்வதற்கு இது ஒரு காரணமாகும். மாதவிடாய் காலங்களில் மாம்பழங்கள் இதே போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்கிறது மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனைக் குறைக்கிறது, இது முறையே கருப்பைச் சுருக்கம் மற்றும் இரத்தப் புறணி துண்டாக்கப்படுவதற்கு காரணமாகும்.
வெல்லம்
இது வெப்பத்தை உருவாக்கும் உணவு. வெல்லம் சிறிது சாப்பிடும் போது உங்கள் மாதவிடாய்களை சரியான நேரத்தில் கொண்டு வருவது நன்மை பயக்கும். வெல்லம் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் தன்மையுடையதால், மாதவிடாய் காலங்களில் அதை உட்கொள்ளுமாறு பல மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. உடலில் இரும்புச் சத்தை பராமரிக்க, மாதவிடாயின் போது வெல்லத்தை சிறிதளவு எடுத்துக் கொள்வது நன்மை தரும்.
காபி
காபியில் உள்ள காஃபின் ஈஸ்ட்ரோஜனைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது, இது உங்கள் மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கு காரணமாகிறது. மாதவிடாயின் போது வலியைக் குறைக்கும் வேதிப்பொருள் காஃபின் ஆகும். மாதவிடாய் காலத்தில் வலியைப் போக்க சில உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காஃபின் மற்றும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைப் போக்கும் குணங்கள் இருப்பதால், அவற்றில் காபி முதன்மையானது.
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழங்கள் பெண்களில் உடலில் வெப்பத்தை உருவாக்கும். மாதவிடாயின் போது வெதுவெதுப்பான பேரீச்சம்பழம் சாறு குடிப்பது நிச்சயமாக நிவாரணமளிக்கும். குளிர்கால மாதங்களில் ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் எடுத்துக் கொண்டால், அது நிச்சயமாக உங்கள் இனப்பெருக்க மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இஞ்சி
இது மற்றொரு எம்மெனாகோக் மற்றும் இயற்கையாகவே ஒரு மூலிகையாகக் கருதப்படுகிறது, இது மாதவிடாய் ஓட்டத்தைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. உணவு முதல் பானங்கள் வரை பல வடிவங்களில் இஞ்சியை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். தேனுடன் இனிப்பான சூடான தேநீர் வடிவில் உட்கொண்டால் நன்மை தரும்.
தேன், உங்கள் உடலுக்கு, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மிகவும் இனிமையானது. இஞ்சியுடன் இணைந்தால், அது உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
- சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு.
- மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் பாதுகாப்பானது.
நம் ஊரைப் பொறுத்தவரையில் கல்யாணம் போன்ற குடும்ப விழாக்கள், குடும்பத்துடன் சேர்ந்து டூர் போவது, தவிர்க்க முடியாத கோயில் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக, சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு. இதற்காக அவர்கள் மாத்திரைகளைப் பயன்டுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.
அப்படி, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் பாதுகாப்பானவை தானா...? அந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடலாமா...? எவற்றில் எல்லாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்...? எவற்றை எல்லாம் செய்யக் கூடாது?
மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?
சுயமருத்துவம் கூடாது
"மாதவிடாயை, மாத்திரைகளின் உதவியோடு தள்ளிப்போடுவதை ஒரு மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் அது பாதுகாப்பான ஒன்று. ஆனால், மருத்துவரைப் பார்க்காமல் தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிபயன்படுத்தக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில் பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. குறிப்பாக தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிப் போடக்கூடாது.
பக்கவிளைவுகள்
மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்து முடித்த பின்னர், மீண்டும் பீரியட்ஸ் வரும்போது சிலருக்கு பழையபடி நார்மலாக வரும். சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப் போகும். 30 நாள்கள் சுழற்சி உள்ளவர்களுக்கு, சில சமயங்களில் 45 நாள்கள் கழித்தும்கூட வரலாம். சிலருக்கு உதிரப்போக்கு அதிகமாகலாம். மாதவிடாய் சமயத்தில் வயிறு இழுத்துப் பிடிக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால், தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தும்போதே சிலருக்கு தசைப்பிடிப்பு உண்டாகலாம். இவைபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சிலருக்கு மிக நார்மலாகக்கூட பீரியட்ஸ் வரலாம். இவை அனைத்துமே ஆளுக்கு ஆள் மாறுபடும்.
எனவே, மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்த பின்பு மீண்டும் பீரியட்ஸ் வரும்போது, உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தெரிந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உங்கள் மகப்பேறு மருத்துவரை உடனே சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது மிக அவசியம்.
ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல
மாதவிடாயைத் தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்தால், அதனால் கருப்பையில் கட்டி வரும், குழந்தை பிறப்பதில் சிக்கல் வரும் என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அச்செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. அதேநேரத்தில், எதுவுமே குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப்போனால் அது நல்லதில்லை அல்லவா? எனவே, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் ஹார்மோன்கள் தொந்தரவு அடைய வாய்ப்பிருக்கிறது.
மாதவிடாய் வலி... மெஃப்தால் ஸ்பாஸ் மாத்திரை... உஷார் பெண்களே... உஷார்!
மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள். எனவே, வெளியில் இருந்து திரும்பத்திரும்ப ஹார்மோன்களைக் கொடுக்கும்போது, அதனால், உடலில் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்களில் சமநிலையின்மை ஏற்பட்டுவிடும். எனவே, மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
- ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும்.
- மெனோபாஸ் வயது என்பது 50 தான்.
* மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹோர்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்து பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
* 50 வயதிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
* 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.
* மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹோர்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரிமெனோபாஸ் நேரத்திலும் வரும்.
* ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தவறில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
* பத்து பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிடுகிறது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
* அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
* இந்த காலத்தில் கால தாமதமான திருமணம் காரணமாக நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மெனோபாஸ் காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது.
- உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும்.
இந்த பிரச்னையை 'இன்சோம்னியா' (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60 சதவிகிதப் பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது. சிலருக்கு தூக்கத்தைத் தக்கவைப்பதில் சிரமம் இருக்கும்.
இன்னும் சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்துவிடும். மீண்டும் தூக்கத்தைத் தொடர்வது சிக்கலாக இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே மெனோபாஸ் காலகட்டத்தில் சகஜமாக ஏற்படுபவை என்கின்றன ஆய்வுகள்.
ஒரு வருட காலத்துக்கு பீரியட்சே வராமல் இருந்தால் அதை மெனோபாஸ் என்கிறோம். மெனோபாசுக்கு முந்தைய காலகட்டமான பெரிமெனோபாஸ் காலகட்டத்திலேயே நம் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கிவிடும். ஹார்மோன் சுரப்பு குறைவதால் உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதும் நடக்கும்.
ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் உடல் சூடாவது, அதிகம் வியர்த்துக் கொட்டுவது போன்ற உணர்வுகள் சகஜமாக இருக்கும். உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்த்துக்கொட்டுவது போல உணர்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்போர் எல்லாம் குளிர்ச்சியாக உணர்ந்தாலும் உங்களுக்கு மட்டும் வியர்த்துக்கொட்டும். அதேபோல ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவுகள் ரொம்பவும் குறைவதால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரிக்கும்.
வேறு ஏதேனும் பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகக்கூட தூக்கம் பாதிக்கப்படலாம். அப்படி எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதைப் பரிந்துரைத்த மருத்துவரிடம் அது குறித்து ஆலோசனை பெறுங்கள்.
தூக்கமின்மையில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சில வாரங்கள் நீடிக்கும், பிறகு தானாக சரியாகிவிடும். இன்னொரு வகை க்ரானிக் இன்சோம்னியா. இது நீண்டகாலமாகத் தொடரும். மூன்று மாதங்களுக்கு மேலும் தொடரும்.
இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் வேளையில் தூக்கம் வருவதாக உணர்வார்கள். எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
தூக்கமின்மை பிரச்சினைக்கான முதல் தீர்வு 'காக்னிட்டிவ் பிஹேவியரைல் தெரபி'. அதாவது நமக்கு ஏதேனும் நெகட்டிவ் சிந்தனைகள் உள்ளனவா, அவை நம் தூக்கத்தை பாதிக்கின்றனவா என பார்த்து அவற்றை சமாளிக்க கற்றுத்தரப்படும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி பரிந்துரைக்கப்படும்.
சிலருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அது பழக்கமாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
அந்த மாதிரி மருந்துகளைத் தவிர்த்து மருத்துவரின் பரிந்துரையோடு மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள் எடுப்பது பெரிய அளவில் உதவும். மேற்குறிப்பிட்ட எந்த விஷயமும் உதவவில்லை என்றால் உங்களுடைய தூக்க ரொட்டீனை பார்க்க வேண்டும். தூக்கவியல் மருத்துவரை அணுகினால் அவர் அதுதொடர்பான கேள்விகளைக் கேட்டு பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
நம் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களைச் சரிசெய்ய வேண்டியதும் அவசியம். முதல் விஷயம் நாம் தூங்கும் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மாலை நேரத்தில் மங்கலான விளக்குகளையே பயன்படுத்துங்கள். செல்போன், லேப்டாப் போன்றவற்றின் உபயோகத்தைத் தவிர்க்கவும். யோகா, தியானம் போன்ற ரிலாக்சிங் டெக்னிக்குகளை பின்பற்றலாம்.
தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். மிதமான உணவாக இருக்க வேண்டியது அவசியம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதற்கு தயாராக வேண்டும். நெகட்டிவ் எண்ணங்கள் வந்தால் அவற்றைப் போக்க நிபுணர்களின் உதவியை நாடலாம்.
- பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்.
- சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்.
பெண்களின் நலன் மீது பாரம்பரியமாக நாம் அதிக அளவில் அக்கறை செலுத்தி வருகிறோம். ஆனால் இந்த பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப்பழக்கங்களை மறந்து விட்டோம்.
தமிழகத்தில் பன்னெடுங்காலமாக பெண்கள் பூப்பு எய்திய பின் நல்ல ஆரோக்கிய உணவு வகைகளை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கிய பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பெய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காக சுருங்கிவிட்டது.
பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும். சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும். தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது. இதில் எள், உளுந்து, வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.
ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்தில் பெருக்க இந்த உணவுமுறை துணை செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை. மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள் வரை எள் சார்ந்த அதிக பொருட்கள் சேர்க்கப்படும். இது பெண்களுக்கு பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் பைட்டோ ஓஎஸ்ட்ரோஜென் எள்ளில் உள்ளது. மாதவிடாய் ஏற்பட்ட 6 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை உளுந்தங்களி சேர்க்கப்படும்.
இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள் வரை வெந்தயக்கஞ்சி கொடுப்பா். இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகளை சரியான தடிமனுக்கு பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாக திகழும்.
- உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம்.
- தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.
* முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய்தானா அல்லது அது ரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம்.
* மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய்தான். அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில், அது ரத்த கசிவதாக இருக்கலாம்.
* பிறப்புறுப்பில் இருந்து ரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.
* உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இந்த பிரச்சினை வரலாம்.
* ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பிரச்சினை வரலாம்.
* நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.
* திடீரென உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.
- நீர்க்கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.
- மாதவிடாயும், நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் கருப்பை நீர்கட்டி பிரச்சனையும் ஒன்று. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் உருவாவதையே நீர்க்கட்டி என்கிறோம். இதை பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இந்த நீர்க்கட்டிகளும் ஒரு காரணம் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயும் இந்த நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.
கர்பப்பை நீர்க்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். பெரும்பாலானோருக்கு ஏற்படும் அறிகுறி சரியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது தான். அதாவது முறையற்ற பீரியட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். கர்பப்பை நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.
ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு முகத்தில் ரோமம் வளரும். பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறையும். முடிகொட்டும் பிரச்சினை ஏற்படும். குரலில் வேறுபாடு ஏற்படுகின்றது. முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கின்றது. மனஅழுத்தம் ஏற்படும், மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது.
இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்வதற்கு இந்த பதிவில் பெண்கள் என்னென்ன உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும் என்று இனி பார்க்கலாம்.
வெந்தயம்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். இதை தடுக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். அதாவது வெந்தயத்தை ஒரு நாள் முன்பு இரவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடவேண்டும். மேலும் மதியம் உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை சாப்பிடும் பொழுது இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.
துளசி:
கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் துளசி இலையை சாப்பிட வேண்டும். நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் என்று அழைக்கப்படும் ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கும். எட்டு துளசி இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதால் இந்த துளசி ஆன்றோஜென் ஹார்மோன் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
ஆளி விதைகள்:
ஆளி விதைகளையும் இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம். ஆளி விதைகளில் ஒமேகா சத்துக்கள் உள்ளது. மேலும் புரதச்சத்துக்களும் நிரம்பி உள்ளது. இதனால் இந்த ஆளி விதைகள் உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்பாட்டிற்கு உதவுகின்றது. ஆளி விதைகளை பொடி செய்து நீரில் கலந்தோ இல்லது பழச்சாறில் கழந்தோ குடிக்கலாம். இதனால் உடல் பருமனும் குறைகின்றது.
லவங்கப் பட்டை:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் லவங்கப் பட்டையையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். லவங்கப் பட்டையை பொடி செய்து காலையில் குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிது கலந்து குடிக்கலாம். அல்லது தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம். லவங்கப் பட்டையும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. லவங்கப் பட்டையையும் கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம்.
பாகற்காய்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் கசப்பு மிகுந்த பாகற்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை வாரத்தில் ஐந்து முறை சமைத்து உண்ண வேண்டும். பாகற்காயை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு கட்டுக்குள் வருகின்றது. இன்சுலின் கட்டுக்குள் இருப்பதால் ஆன்றோஜென் ஹார்மோன் அளவும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.
நெல்லிக்காய்:
கர்பப்பை நீர்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் உடலில் இன்சுலின் அளவு சுர்ப்பதை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. நெல்லிக்காய் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இன்சுலின் அளவு குறைவதோடு உடல் எடையும் குறைகின்றது.
தேன்:
கர்பப்பை நீர்ககட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தேனை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்தால் கர்பப்பை நீர்க்கட்டிகள் தானாக கரைந்து விடுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் தேனையும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் கர்பப்பை நீர்க்கட்டி கரைந்து விடும்.
உளுந்து:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் உளுந்தை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து சாதத்தை சாப்பிடுவது ஹார்மோன்களை சீராக்கி பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்சினையை சரிசெய்ய உதவுகின்றது. மேலும் பூண்டு குழம்பு, எள்ளுத் துவையல் போன்றவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சீராக்கப்பட்டு பிசிஓடி பிரச்சினை சரி செய்யப்படுகின்றது. சூடான சாதத்தில் வெந்தயப் பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு சாப்பிடுவது நல்லது.
கற்றாழை:
மாதவிடாய் காலத்தில் வயிறு வலி அதிகம் உள்ள பெண்கள் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குறைவதோடு கர்பப்பை நீர்கட்டிகள் உருவாமல் தடுக்கப்படுகின்றது.
சின்ன வெங்காயம்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் சிறிய வெங்காயத்தை உணவில் அதிகம் சேரத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் 50 கிராம் அளவு சிறிய வெங்காயத்தை சேரத்துக் கொள்வதால் பிசிஓடி பிரச்சினை சரியாகின்றது.
கீரை வகைகள்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தினமும் ஏதாவதொரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சமைத்து சாப்பிட வேண்டும். மகப்பேறுக்கு ஏங்கும் பெண்களாக நீங்கள் இருந்தால் மேற்சொன்ன கிரைகளை பசு நெய் மற்றும் பாசிப்பயிறு கலந்து சாப்பிட வேண்டும்.
முருங்கை :
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை குறைக்க முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதைகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசின், சாரைப் பருப்பு இவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் ஓட்ஸ், திணை, முளைக்கீரை போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கு, வெள்ளை சர்க்கரை, அரிசி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்