என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Merchants protest"
- வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
- வியாபாரிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியில் காமராஜ் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் சிறிய கடைகள் 200, பெரிய கடைகள் 300 என 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதில் பெரிய கடைகளுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வரையும், சிறிய கடைகளுக்கு ரூ.6000 வரையும் மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கடைகளுக்கு வாடகை அதிகமாக உள்ளது எனவும் அதனைக் குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் காமராஜ் மார்க்கெட்டில் சில கடை வியாபாரிகள் சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
கால அவகாசம் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் எப்படி மின் இணைப்பை துண்டிக்கலாம்? எனக்கூறி இன்று காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஒன்று திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் முன்னறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததை கண்டித்தும், ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்த வேண்டும் என கூறியதை கண்டித்தும், கடை வாடகைகளை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
வியாபாரிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து தஞ்சை மேற்கு போலீசார் உடனே விரைந்து வந்து வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களை குறிவைத்து அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் இருந்தன.
இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களும், அலகு குத்திவரும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததால் அதனை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் உள்ள 9 சந்திப்புகளில் 7 இடங்களில் தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் கோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் கிரிவலப்பாதையை அடைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தனர்.
இதனால் இன்று அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,
பக்தர்களின் வருகையால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. தற்போது பாதையை அடைத்து விட்டதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய போதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நிலை குறித்து எடுத்தரைத்தும் அதனை பரிசீலனை செய்யவில்லை. இதனால் கருப்புக்கொடியுடன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- செந்துறை பகுதிகளில் சிலர் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து செட் போட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
- தொடர்ந்து கடைகளை–அகற்ற முயன்ற போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
செந்துறை :
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை பகுதிகளில் சிலர் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து செட் போட்டு பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளுக்கு தண்டோரா போட்டு அறிவித்தனர்.இதையடுத்து கடைக்காரர்கள் தாங்களா–கவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் கடை ஆக்கிர–மிப்புகளை அகற்றவில்லை.
இதையடுத்து உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், நத்தம் உதவி பொறியாளர் சரவணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நத்தம் போலீஸ்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் செந்துறை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஒரு கடையை இடித்து தள்ளினர்.
தொடர்ந்து கடைகளை–அகற்ற முயன்ற –போது வியாபாரிக–ளுக்கும்அதி–காரி–களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து அதிகாரி–களும் பொது–மக்களும் ஊராட்சி மன்ற தலைவரும் வியாபாரிகளிடம் சமரசம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒத்துழைக்கு–மாறு தெரிவித்தனர்.
நாளை மாலை வரை அவரவர் கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்ற வேண்டும். இல்லை–யென்றால் வெள்ளிக்கிழமை காலையில் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப–டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது.
- சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது.
ஆலங்குளம்:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் கேரளா செல்ல முக்கிய பாதையாக நெல்லை-தென்காசி சாலை உள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் கனரக வாகனங்கள், சிமெண்ட், காய்கறிகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகவும் இச்சாலை காணப்படுகிறது.
நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இச்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி ரூ. 430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக காமராஜர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் சிலை அமைக்க மாற்று இடம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து காமராஜர் சிலை அமைப்புக்குழு, வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடம் வழங்கக்கோரி இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று ஆலங்குளம் காய்கறி மார்க்கெட், பஜார் உள்ளிட்ட பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
தொடர்ந்து வியாபாரிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது யூனியன் அலுவலகம் அருகே உள்ளிட்ட 3 இடங்களில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என சிலை அமைப்பு குழுவினர் கூறினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
- தமிழக அரசு சூழல் உணர்திறன் திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பக எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பதாக கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி, 3 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, புத்தூர் வயல், அள்ளூர் வயல் உள்பட பல கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சூழல் உணர்திறன் மண்டலத்தை கைவிடவேண்டும். மேலும் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
நேற்று முன்தினம் கூடலூர் மற்றும் ஸ்ரீமதுரை பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூருக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் புதிய பஸ்நிலையம் முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி திடலுக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தொகுதியில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக கூடலூர் வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடலூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மளிகை கடைகள், செல்போன் கடைகள், வணிக வளாகங்கள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை வீதிகள், முக்கிய பகுதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
அப்போது அவர் கூறுகையில், சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அ.தி.மு.க சார்பில் கண்டன பேரணி நடக்க உள்ளது. இதேபோல் அடுத்த மாதம் 5-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கூடலூர் காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்