என் மலர்
நீங்கள் தேடியது "michigan cyclone"
- மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளை நேற்று முன்தினம் அதிகாலை நெருங்கியது.
- மிச்சாங் புயல் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர்-காவாலி இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) கரையை கடக்கக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல், வடதமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலைக் கொண்டு, அதன்பின்னர் தெற்கு ஆந்திர பகுதிகளையொட்டி கரையை கடக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் மிச்சாங் புயல் நிலைக்கொண்டு இருந்தது.
அப்போது இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. புயலைச் சுற்றி அடர்ந்த மேகக் கூட்டங்கள் அதிகளவுடன் நகர்ந்து வந்ததால், அதனுடைய நகர்வு வேகம் முன்பை விட மிகவும் குறைந்தது. இதனால் முதலில் புயலாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டது.
மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளை நேற்று முன்தினம் அதிகாலை நெருங்கியது. அந்த நேரத்தில் இருந்து அதிகனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. மிச்சாங் புயலின் மையப் பகுதி என்று கூறப்படும் கண் பகுதியை சுற்றி இருக்கும், மழை, காற்று மேகங்களும், அதனைத் தொடர்ந்து வந்த மழை மேகங்களும் சென்னை மீது படரத்தொடங்கியது.
சென்னையை ஒட்டிய பகுதிகளில்தான் புயலின் பாதை சற்று வளைந்து சென்றது. இதனால் அந்த நேரத்தில் புயலின் வேகம் மேலும் குறைந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் புயலுடன் மேகக்கூட்டங்கள் வெகு நேரங்கள் பயணித்தன. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை அதிகனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செ.மீ. மழை பெய்திருந்தது. அதற்கடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியது.
அதி கனமழை, மிக கனமழை பெய்த இடங்கள் பெரும்பாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த இடங்களாகவே இருந்தன. நேற்று காலையும் சென்னையில் மழை தொடர்ந்தது. இடைவிடாமல் பெய்த மழையினால் சென்னை மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போனது.

அதிகனமழை ஒரு பக்கம் இருந்தாலும், தரைக்காற்றின் தாக்கமும் அதிகளவில் இருந்தது. அந்த வகையில் அதிகபட்சமாக நேற்று அதிகாலை 4.15 மணியளவில் மீனம்பாக்கத்தில் 88 கி.மீ. வேகத்திலும், அதற்கடுத்தபடியாக எண்ணூர் துறைமுகத்தில் 81 கி.மீ. வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் அதிகாலை 3.20 மணிக்கு 71 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. விளம்பர பேனர்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் தகர சீட்டில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்கள், கடைகளும் சூறாவளி காற்றினால் துவம்சமாகின.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் மழை கொட்டியதற்கு, மிச்சாங் புயலின் வெளிப்புற மேகக்கூட்டங்கள்தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளையொட்டியே கடந்து சென்றது. இதில் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூரில்தான் அதி கனமழை கொட்டி இருக்கிறது. பிற்பகலில் இந்த மாவட்டங்களில் மழையுடன், காற்றும் வீசியது.
பின்னர் மாலையில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வடமேற்கு திசை காற்று, மேற்கு திசை காற்றாகவும், நடுப்பகுதியில் வடதிசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும், மேலடுக்கில் வடகிழக்கு திசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும் மாறியது. இதனால் மிச்சாங் புயல், சென்னை பகுதிகளை கடந்து விலகிச் செல்ல தொடங்கியது.
புயல் விலகிச் சென்றாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவு வரை மழை பெய்த வண்ணமே இருந்தது. அதனையடுத்து முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை குறையத் தொடங்கியது. அதன் பின்னர், சென்னையில் நள்ளிரவுக்கு பிறகு ஓரளவுக்கு மழை குறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மிச்சாங் புயல் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர்-காவாலி இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெற்கு ஆந்திர பகுதியையொட்டி நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெல்லூர்-காவாலி இடையே கரையை கடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
- சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று சென்னைக்கு 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் போதாக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். புயல்களின் மிரட்டலும், பருவமழையின் ஆக்ரோஷமும் சென்னை மாநகரை புரட்டியெடுக்க தவறுவதில்லை.
அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்களை மிகவும் கலங்கவைத்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 மற்றும் டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் பெருமழை கொட்டியது. அந்த 2 நாட்களில் 24 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதாவது, தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் 47 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மூழ்கின.
அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்தாலே, சென்னைவாசிகளின் பலருடைய நினைவுக்கு வருவது, 2015-ம் ஆண்டு டிசம்பர் மாத நிகழ்வுதான். அதன் தாக்கத்தில் இருந்து இதுவரை சென்னைவாசிகள் வெளியே வர முடியாமல் இருக்கின்றனர். அந்த அளவுக்கு 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

அந்த ஆண்டு மட்டுமா... இப்போதும் விடுவதாக இல்லை என்ற ரீதியில் வங்க கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மியான்மர் நாட்டினரால் `மிச்சாங்' என பெயரிடப்பட்ட அந்த புயல் சென்னை மக்களை தண்ணீரால் தத்தளிக்க வைத்துவிட்டு ஆந்திர மாநிலம் நெல்லூரை நோக்கி கடந்துவிட்டது.
அவ்வாறு கடக்கும் வேளையில் `மிச்சாங்' புயல் சென்னை மாநகர் மீது மழைநீரை வாரியிறைத்ததன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்திவிட்டது.
மிச்சாங் புயல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.

`மிச்சாங்' புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகு நேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. தெருக்கள் தோறும் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், கடல் சீற்றம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிச்சாங் புயல் பந்தாடியது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், மழைநீர் வடிகால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் உள்ள திறப்புகள் வழியாக மழைநீர் பொங்கி வழிந்தபடி சாலைகள் தோறும் ஆற்றில் செல்வது போல் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனால், வீடுகளில் பெண்கள் சமையல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சுதாரிப்பாக தண்ணீரை நிரப்பி வைக்காதவர்கள் மோட்டரை போட்டு தண்ணீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் தண்ணீர் கீழே செல்ல முடியாமல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையும் நிலவியது.
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்த போதிலும், காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவச பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு நடுவே பணிகளுக்கு சென்றனர். அதிலும் பலர் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
புயல் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், மருந்துகடைகள், பாலகம், ஓட்டல்கள் திறந்து இருந்தன. வீடுகளில் சமைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கியதால் ஓட்டல்களில் இட்லி, தோசை போன்றவை விரைவில் காலியாகிவிட்டன. அதைத் தொடர்ந்து, பொங்கல் மற்றும் உடனடியாக தயார் செய்வதற்கு வாய்ப்பாக உள்ள சப்பாத்தி, பூரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இதே போன்று மதிய நேரத்தில் ஆங்காங்கே பிரியாணி கடைகள், துரித உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்கள் திறந்து இருந்தன. மேலும் டீ கடைகளும் சொற்ப அளவில் திறந்து இருந்தன.
புயல் காரணமாக யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரித்து இருந்த நிலையிலும், ஏதேதோ காரணங்களுக்காக பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணித்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அதாவது, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள்கள் தத்தளித்தபடி சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது, வெள்ளமானது அலைபோல் எழும்பியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.
சென்னையின் இதயப்பகுதியான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை எனத் தொடங்கி தியாகராயநகர், மயிலாப்பூர், கோயம்பேடு, தென்சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஆலந்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளான பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் நேற்று தொய்வின்றி மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சி அளித்தது. இதைப் பார்க்கும்போது சென்னை மாநகரமே தண்ணீரில் மிதப்பது போல் தான் தோன்றியது என்றால் அது மிகை அல்ல. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றதுமே பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரி பகுதி தான் நேற்றைய மழையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லும் அளவிற்கு அங்கு மழையின் தாக்கம் பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.
வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை சேலையூர் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. அதிலும் இந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டன. இது மட்டுமன்றி, பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் ஏரி உடைந்ததால் வேளச்சேரி நெடுஞ்சாலையில் அந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக அங்குள்ள பல் ஆஸ்பத்திரி அருகே பஸ்கள், டெம்போ வேன் உள்ளிட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், சேலையூரில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், நாராயணபுரம் பகுதி மக்கள் அங்கிருந்து வேளச்சேரிக்கும், சேலையூருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த பகுதியில் வீடுகள் தரைத்தளம் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலையும் ஏற்பட்டது. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு செல்வதையும் பார்க்க முடிந்தது. தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. இதேபோன்று, முடிச்சூர், அனகாபுத்தூர், மதனபுரம் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன.
மொத்தத்தில், சென்னையின் பிரதான சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகளுக்குள் செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதோடு, எங்கு பள்ளம் இருக்கும் என்று தெரியாத அளவிற்கு மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே மரங்களும் விழுந்து கிடந்தன. தேனாம்பேட்டை எஸ்.எம்.பாலாஜி பல் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள மரம் ஒன்று விழுந்ததில், ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றும் கார் ஒன்றும் சேதம் அடைந்தது. இதே போன்று, அண்ணாநகர் பகுதியிலும் மரங்கள் விழுந்து கார் சேதம் அடைந்ததை பார்க்க முடிந்தது.
இதே போன்று, நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மொத்தத்தில் நேற்று பெய்த மழை காரணமாக சாலை போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து முழு வீச்சில் இயங்கவில்லை என்றே கூற முடியும். மெட்ரோ ரெயில் போக்குவரத்து மட்டும் தடையின்றி இயங்கியது.
கொளத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் தவிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று அயனாவரத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்தில் மழைநீர் புகுந்ததால் 4 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டு பாதுகாப்பாக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் கூட தொடர் மழை காரணமாக முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். இன்று(செவ்வாய்க்கிழமை) மழை சற்று ஓய்ந்த பின்னரே மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதே போன்று, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்று தெரிகிறது.
- முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம்.
- அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.
சென்னை:
சென்னை, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.
இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!
அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.
வெல்லட்டும் மானுடம்!
அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.
— M.K.Stalin (@mkstalin) December 4, 2023
2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு… pic.twitter.com/QBIHxuR7uP
இவ்வாறு முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
- நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.
சென்னை:
சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது.
எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன. சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.
சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி. மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.
15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
- மழையால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னையில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 4,500 பேர் நேற்றும், இன்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அடுக்குமாடிகளில் யாராவது சிக்கி தவிக்கிறார்களா என்பதை டிரோன்கள் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்றும், இன்றும் நடந்தது. டிரோன்கள் மூலம் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு மீட்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
தென்சென்னை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நேற்று ஹெலிகாப்டர் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்றும் 2-வது நாளாக விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.
புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். தண்ணீரை முழுமையாக அகற்றிய பிறகு பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
மழையால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 42 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை வரை வடசென்னை, தென் சென்னை பகுதிகளில் 866 இடங்களில் மழை தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று இரவு ராட்சத எந்திரங்கள் மூலம் சுமார் 60 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. அங்கு நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இன்று காலை நிலவரப்படி இன்னமும் 800 இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அவற்றை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த இடங்களில் இருந்து இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் அனைத்து துறைகளையும் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருப்பவர்களும் நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள்.
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 25 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மிச்சாங் புயல் மழைக்கு சுமார் 400 இடங்களில் மரங்கள் விழுந்தன. அவற்றில் நேற்று இரவு வரை சுமார் 350 இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. 50 மரங்கள் இன்று அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணி இன்று அல்லது நாளை நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள 2 சுரங்கப்பாதைகளில் 16 பாதைகளில் போக்குவரத்து தொடங்கி விட்டது. இன்னும் 6 சுரங்க பாதைகள் மட்டும் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது.
சென்னையில் பஸ் போக்குவரத்து 90 சதவீதம் சீரடைந்து விட்டது. 488 பஸ் வழித்தடங்களில் 56 வழித் தடங்களில் மட்டும் இன்னமும் தண்ணீர் தேங்கி உள்ளது. நாளைக்குள் அந்த வழித்தடங்களும் சீராகும் என்று தெரிகிறது.
அதுபோல மின்சாரமும் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 97 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது. இன்று இரவுக்குள் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தினமும் சராசரியாக 19 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படும். நேற்று 14 லட்சம் லிட்டர் பால்தான் வினியோகம் செய்யப்பட்டது. 5 லட்சம் லிட்டர் பால் குறைந்ததால் கடைகளில் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இன்றும் 19 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படவில்லை. இதனால் இன்றும் பல பகுதிகளில் கடைகளில் பால் கிடைக்கவில்லை. தனியார் நிறுவன பால்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
முகவர்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் வினியோகம் இன்று சீரடைந்தது. நாளைக்குள் பால் வினியோகம் முழுமையாக சீரடைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 900 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பல இடங்களில் பெட்ரோல், டீசல் லாரிகள் வராததால் பங்க்குகள் மூடும் நிலை ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி 850 பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கின.
புயல், மழை காரணமாக தொலை தொடர்பு சென்னையில் கடுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 90 சதவீதம் தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வடிந்து வந்தாலும் இன்னும் 3500 தெருக்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது.
குறிப்பாக பெரம்பூர், ஜமாலியாவை சுற்றி உள்ள பகுதிகள், ராயபுரம், வியாசர்பாடியை சுற்றி உள்ள பகுதிகள் பட்டாளம், புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு, மணலி சடையாங்குப்பம், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், பாடி, அயப்பாக்கம் கொளத்தூரில் சில பகுதிகள், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம், ஸ்டான்லி நகர், ரங்கராஜபுரம், சுரங்கப் பாதை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.
இது தவிர சிட்கோ நகர், அம்பத்தூர் மேனாம்பேடு, கருக்கு பகுதிகளிலும் மழை நீர் வடியவில்லை. மிக அதிக அளவு தண்ணீர் நிறைந்த பகுதிகளாக பள்ளிக்கரணை, பெருங்குடி பெரும்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, முடிச்சூர், சேலையூர், சோழிங்கநல்லூர், நாவலூர், திருவேற்காடு, ராஜாங்குப்பம், நசரத்பேட்டை, மாங்காடு, ஓம் சக்தி நகர் பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தத்தளித்த வண்ணம் உள்ளது.
இங்குள்ள மக்கள் உணவின்றி தவியாய் தவித்து வருகின்றனர்.
- பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.
- வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது போல மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்னைக்கு இன்று வந்தார்.
இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கு அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதன்பிறகு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ளப்பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். பின்னர் ஐ.என்.எஸ். அடையாறில் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் இறங்கியதும் அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிச்சாங் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி மற்றும் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகிறது.
பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புறப்படுகிறார். 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அவர் 2.40 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.
- மிச்சாங் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார்.
- மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடி அவர் ஆய்வு செய்தார்.
சென்னை:
மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல் மந்திரி முக ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:
நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ரூ.450 கோடியை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நகர்ப்புற வெள்ளப் பிரச்சினையை சென்னை சமீப வருடங்களில் அடிக்கடி சந்தித்து வருவதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.510 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.
#WATCH | Defence Minister Rajnath Singh conducts an aerial survey of flood-affected areas of Tamil Nadu #CycloneMichuang pic.twitter.com/dmXUSpJS2c
— ANI (@ANI) December 7, 2023
- கடந்த 3-ந்தேதியில் இருந்து சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் மூடப்பட்டது.
- பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் மழை காரணமாக கடந்த 3-ந்தேதியில் இருந்து சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் மூடப்பட்டது.
இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பரங்கிமலை மெட்ரோ ரயில்நிலையம் வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் (08.12.2023) பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
— Chennai Metro Rail (@cmrlofficial) December 8, 2023
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
- அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
சென்னை:
மிச்சாங் புயல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆகியோர் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியமாகிறது என கூறியுள்ளார்.
- வாகன ஓட்டிகள் நடுரோட்டில் விழுந்த பெரிய பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகில் இன்று காலை 8 மணியளவில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது. 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இருப்பினும் வாகன ஓட்டிகள் நடுரோட்டில் விழுந்த பெரிய பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரம் இந்த பணி நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் பள்ளத்தை மூடி சரி செய்தனர்.
இதன் காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளம் மூடப்பட்ட பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் சென்றன.
- தூய்மை பணியாளர்கள் மற்ற பணிகளுக்கு சென்றதால் சென்னை நகர் முழுவதும் வீதிகளில் குப்பை மேடுகள் புதிதாக உருவாகி உள்ளன.
- மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக குப்பைகளை அள்ளினாலும் குவிந்து கொண்டே இருக்கிறது.
சென்னை:
சென்னையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில் வெள்ள பாதித்த அடுத்த இரண்டொரு நாட்களில் தண்ணீர் வடிந்து விடும். ஆனால் இந்த முறை வெள்ள நீர் வடியவில்லை. மெதுவாக உள்வாங்கியது.
இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிய 4 நாட்களுக்கு மேல் நீடித்தது.
சென்னையின் முக்கிய நகரப் பகுதிகள் முதல் புதிதாக உருவான பகுதிகள் வரை வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ள நீர் வடிந்து வந்த பகுதிகளில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.
ஒவ்வொரு தெருக்களிலும், வீதிகளிலும் சகதிகள் தேங்கி கிடக்கின்றன. வீடுகளில் தேங்கிய சகதியை சுத்தம் செய்வதற்கே பெரும்பாடாக உள்ளது. வெள்ளம் புகுந்த சாலைகளில் சேரும் சகதியும் காணப்படுகிறது.
மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து வெள்ளமாக புரண்டு ஓடியதால் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இது ஒரு புறம் இருக்க குப்பைகள் ஒவ்வொரு பகுதியிலும் மலை போல் குவிந்துள்ளன. அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அப்பகுதி மக்கள் கொட்டினர்.
4 நாட்களாக குப்பை எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்ற பணிகளுக்கு சென்றதால் சென்னை நகர் முழுவதும் வீதிகளில் குப்பை மேடுகள் புதிதாக உருவாகி உள்ளன.
வீடுகளில் தேங்கிய குப்பைகளை மக்கள் வெளியே கொண்டு வந்து கொட்ட முடியாமல் முடங்கியதால் மூட்டை மூட்டையாக குப்பை சேர்ந்தன. பிளாஸ்டிக் பைகளிலும், பயணற்ற பைகளை சேகரித்து வைத்த குப்பைகளை ஊழியர்கள் வராததால் தெரு வீதிகளில் கொட்டினர்.
சென்னையில் 15 மண்டலங்களிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. திடீரென உருவான குப்பை மேடுகளில் நாய்களும், மாடுகளும் கிண்டி கிளறி வருகின்றன. உணவில்லாமல் தவித்த விலங்குகள் குப்பைகளில் கிடக்கும் உணவு கழிவுகளை சாப்பிடுவதற்கு அதனை தெரு வீதி முழுவதும் தள்ளி விடுகின்றன.
இதனால் சென்னை நகரமே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக குப்பைகளை அள்ளினாலும் குவிந்து கொண்டே இருக்கிறது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் அதிக குப்பை மற்றும் சகதிகள் சேர்ந்து இருப்பதால் அவற்றை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
11,700 தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டத்தில் இருந்து 2,256 சுகாதார பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நோய் கிருமி பரவாமல் தடுக்கும் வகையில் சாலைகள், தெரு வீதிகளில் உள்ள சாக்கடை, சகதி கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டால்தான் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
- நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 42 ஆயிரம் பேரில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.
- சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் மழை நீர் வடியாமல்தான் உள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற முடியாதபடி மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் நடந்தன. 420 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு சுமார் 42 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் மழை பாதித்த பிறகு கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய முடக்கம் ஏற்பட்டது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பால்-குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று முன்தினம் முதல் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. நேற்று 95 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில்கள் முழு அளவில் இயக்கப்பட்டதால் நேற்று பெரும்பாலான மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலைக்கு வந்தனர்.
நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 42 ஆயிரம் பேரில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். மருத்துவ குழுக்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்யப்படுகின்றன.
நேற்று முன்தினம் வரை 800 இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது. நேற்று 343 பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் நேற்று இரவு 50 பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இன்று காலை மற்ற இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
ஆனால் அந்த இடங்களில் தண்ணீர் அகற்றுவதில் கடும் சவாலும், சிக்கலும் நீடிக்கிறது.
இன்று காலை நிலவரப்படி சுமார் 200 இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. அங்கு இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் மீட்பு படையினரும், நிவாரண குழுவினரும் கடும் போராட்டத்தை சந்தித்து உள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக பெரம்பூர், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, டான்சி நகர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், ஓட்டேரி, திருவொற்றியூர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், முடிச்சூர், சமத்துவ பெரியார் நகர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம், பரத்வாஜ் நகர், கிருஷ்ணா நகர், மணிமங்கலம், லட்சுமி நகர், எர்ணாவூர், எண்ணூர், மணலி, வடபெரும்பாக்கம், கண்ணம்பாளையம், மஞ்சம்பாக்கம், புழல், வடகரை, முகலிவாக்கம், திருவேற்காடு, கெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் இன்றும் 5-வது நாளாக தண்ணீர் தேக்கம் காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் ராட்சத எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் நடந்து வருகிறது. இங்கு மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி கிடப்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தண்ணீரில் நடந்து சென்றுதான் வாங்கி வருகின்றனர். இங்கு மழை நீரை வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
மழை நின்று 5 நாட்கள் ஆகியும் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது குறித்து மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பினாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் மழை நீர் வடியாமல்தான் உள்ளது.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீரை வடிய வைப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. கூவம், அடையாறு பகுதிகளில் மழைநீர் அதிகமாக வருவதாலும், உள்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இன்னும் தண்ணீர் அதிகம் செல்வதாலும் மழை நீர் மெதுவாகத்தான் வடிந்து வருகிறது.
இதன் காரணமாக மணலி சடையாங்குப்பம், பாலகிருஷ்ணாபுரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, ராயபுரம் எம்.சி. ரோடு, புளியந்தோப்பின் பல பகுதிகள், பெரம்பூர் ஜமாலியா, சூளை கண்ணையா தெரு, பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு, மாதவரத்தில் தணிகாசலம் பகுதி, வேளச்சேரி, மடிப்பாக்கம் ராம்நகர், குபேரன் நகர், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த பகுதிகளில் மாநகராட்சி தனி கவனம் செலுத்தி 240-க்கும் மேற்பட்ட மோட்டார்களை மாற்றி அமைத்து தண்ணீரை வடிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுவதால் ஆங்காங்கே பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தண்ணீர் வடியும் பகுதிகளில் தேங்கிய குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 360 இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் துப்புரவு பணியில் மாநகராட்சியில் உள்ள 23 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து 2,360 பேர் துப்புரவு பணிக்காக வந்துள்ளனர். அவர்களும் கடினமாக பணியாற்றி வருகிறார்கள்.
சென்னை நகருக்குள் சில பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்காக அந்தந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் களப் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை நகரில் மழை நீர் வடியாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.
மழை நீரில் சாக்கடை கலந்து விட்டதால் பொதுமக்கள் அதில் நடக்கவே அருவறுப்படைந்து வருகின்றனர். வேறு வழியின்றி அதில் நடந்து சென்றுதான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெருவிலும் இன்று 6-வது நாளாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெரு, நாச்சியார் அம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். புளியந்தோப்பு நாராயணசாமி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.