search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mill industry"

    • காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது.
    • கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொழிலுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரம், கலால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்கு, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது. நாங்கள் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் தொழிலானது தென்னை விவசாயத்தை சார்ந்து அதை ஊக்குவிக்கும் தொழிலாக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் வாராக்கடன்கள் அதிகரித்து எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது.

    தற்போது உள்ள சூழ்நிலையில் தேங்காய் எண்ணெயின் விலையை விட பாமாயில் எண்ணெய் விலை குறைவாக உள்ளது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெயை வாங்கி பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறு மின்சார கட்டணத்தை உயர்த்தும் போது நாங்கள் அதன் சுமையை தேங்காய் எண்ணெய் விலையின் மீது வைக்கும்போது தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசு வெளிநாடுகளில் இருந்து பாமாயில் எண்ைணயை இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வினியோகம் செய்து வருகிறது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்து பாமாயில் பயன்பாட்டிற்கு அதிகப்படியாக மாறி வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரம் குறைந்துள்ளது.

    தமிழக அரசு தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து எங்கள் தொழிலை ஊக்குவித்து வரும் இந்த வேலையில், தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பை அளிக்கிறது. நாங்கள் அரவை கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் போது குறைவான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

    இதனால் தென்னை விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உபயோகித்து வரும் மின் இணைப்புகளுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மின்சார கட்டணம் உயர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×