என் மலர்
நீங்கள் தேடியது "Minister Kadambur raju"
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகின்ற தேர்தல்களில் மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது. அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். கட்சி மாறி வருபவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
மேகதாது திட்ட அறிக்கை தொடங்குவதற்கு தமிழகம் மட்டுமல்ல புதுவை முதல்வர் நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனையை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், அந்தந்த மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்பது விதி. விதிகளுக்கு உட்பட்டு எங்கள் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து, மேகதாதுவில் அணை கட்டுவதை அரசு தடுக்கும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அரசு அழைத்து பேச தயாராக உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியுள்ளார். நிச்சயமாக அவர்களை அழைத்து பேசும்போது, சுமூக தீர்வு காணப்படும்.
திரைப்பட தணிக்கைக்குழுவில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தால் தான், அவர்கள் மாநிலத்தின் பிரச்சனைகளை எடுத்து கூறி, மாநிலத்தில் தாக்கம் ஏற்படக்கூடிய விஷயம் இருக்குமாயின், அதனை தணிக்கை நடைபெறும் நேரத்தில் தடுக்க முடியும்.
மாநில அரசின் பிரதிநிதித்துவம் இல்லாததால் இதுபோன்ற நிலை உள்ளது. இதனை எடுத்து கூறியுள்ளோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்ய போகிறோம் என்றார்கள். அதன் பின்னர் இல்லை என்றனர்.
அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவர்களின் உரிமையில் தலையிட முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அதனை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterKadamburRaju
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவது நடந்து வருகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதை ஏற்று அவர்கள் வந்தால் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்திக்க பயந்து கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.
2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு யாராவது வந்தால் அது குறித்து தலைமை முடிவு செய்யும். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் சரத்துகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற 4 மாநிலங்களிடமிருந்து கருத்து கேட்க வேண்டும்.
மேகதாது மட்டுமல்ல மற்ற எந்த இடத்தில் அணை கட்டினாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்தப் பணியை தடுத்து நிறுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ள டிஎம்சி தண்ணீரில் ஒரு டிஎம்சி கூட குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். முதல்வர் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு ஆலை இயங்க வேண்டும் என்றால் அதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்க வேண்டும். ஆனால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நியாயத்தை உணர்ந்து, போராட்டம் தொடங்கிய 40 நாட்களிலேயே ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமல் ஆலையை மூடிவிட்டோம். அதன்பிறகு மக்களிடம் போராட்டத்தை கைவிட பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது போராட்டம் அமைதியாகத்தான் இருந்தது. சில சமூக விரோத அமைப்புகள் மக்களை திசை திருப்பி தவறான வழியில் தூண்டிவிட்டு, மக்களுக்கு தவறான வழிகாட்டியதால் கடந்த மே மாதம் 22-ந் தேதி விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அதன்பிறகு அமைக்கப்பட்ட ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் தவறுதலாக வழிநடத்தப்பட்டு விட்டோம் என்று கருத்து தெரிவித்தார்கள்.
அந்த சம்பவத்துக்கு பிறகு அரசின் அவசரகால நடவடிக்கையாக ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அங்கு தி.மு.க. ஆட்சியில் ஆலை விரிவாக்கத்துக்காக 245 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கனிமொழி எம்.பி, ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு இரட்டை வேடம் போடுகிறது என்கிறார்.
இரட்டை வேடம் போடுவது தி.மு.க.தான். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். அதன்பிறகு விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கியதும் தி.மு.க. தான். ஆலை தொடங்கும் போது அதற்கு எதிர்ப்பாக அ.தி.மு.க. இருந்தது. ஆகையால் இரட்டை வேடம் போடுகிறவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும்.
மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது. அமைதியாக போராட்டம் நடக்கும் வரை அவர்களுக்கு அனைத்து அனுமதியும் வழங்கினோம். போராட வேண்டாம், மக்களின் உணர்வுகளை தெரிவிக்க வேண்டாம் என்று அரசு கூறவில்லை.
அவர்களின் கோரிக்கையை ஏற்றதால்தான் ஆலை மூடப்பட்டது. அந்த வகையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது. மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #KadamburRaju #sterlite
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு துறையில் உள்ள ஒரு அதிகாரி ஓய்வு பெறும் போது, அந்த இடத்துக்கு மற்றொரு அதிகாரியை நியமிப்பது என்பது மரபு. அந்த வகையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற காரணத்தால், அபய்குமார்சிங் என்ற அதிகாரியை அரசு நியமித்தது. ஆனால் சிலை கடத்தல் வழக்கில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பொன் மாணிக்கவேல் தொடர வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருக்கலாம்.
இதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. இது நீதிமன்றத்தின் முடிவு. அரசால் அறிவிக்கப்பட்டவரும், அந்த பணியை செய்வார். அவர் விசாரித்த வழக்குகள் முடிவடையாததால், பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கிறது. தருண் அகர்வால் குழுவுக்கு அந்த அக்கறை இல்லை. அவர்கள் வந்த காரணம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பிரச்சனை என்ன? அந்த ஆலையின் தன்மை என்ன? என்பது குறித்து மட்டும் தான் விசாரிக்க அனுப்பப்பட்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக தான் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வீடுகள் மட்டும் தான் கட்டித்தரப்படும் என கூறவில்லை. மக்களின் பாதிப்புகளை கூட அரசியல் செய்கின்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல.
திரைத்துறையை பாதுகாப்பதற்காக திருட்டு விசிடிக்கு தனியாக சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு தான். அந்த சட்டம் அப்படியே நிலுவையில் உள்ளது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த திரைத்துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒருமித்த கருத்துடன் வந்தால், அந்த சட்டத்தை மிக வேகமாக நடைமுறைப்படுத்தி முழுமையாக திருட்டு விசிடி இல்லாத நிலையை உருவாக்க அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #KadamburRaju
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்மவார் சங்கம் சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் கம்மவார் மக்களை இணைக்கும் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுக்கு அவர் சொந்த ஊரான வையம்பாளையத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் அதனை முதல்வர் திறந்து வைப்பார்.
அவர் கோவில்பட்டியில் உயிர் நீத்ததால் அவருக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலை அமைக்கப்படும்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களுக்கு தவறான கருத்துக்களை, மக்களின் யதார்த்த நிலையை தெரியாமல் நடிகர் கமலஹாசன் பேசி வருகிறார். இன்னும் நடிகராக தான் இருக்கிறார். அரசியல்வாதியாக மாறியதாக தெரியவில்லை. அவருடைய அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை அவர் பெறவில்லை என்பது தெரிகிறது.
கஜாபுயல் குறித்து அறிவிப்பு வந்ததும் அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் உயிர் சேதம் அதிகளவில் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ பாராட்டியுள்ளனர். கஜா புயல் சேதம் குறித்து போர்கால நடவடிக்கையாக தமிழக முதல்வர் பார்வையிட்டு, பிரதமரிடம் எடுத்துரைத்து ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.
மத்திய குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது. மக்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனை அரசியலாக பார்ப்பது நல்லது கிடையாது. எதிர்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அர்ப்பணிப்புடன் தனது கடமையை செய்து வருகிறது.
மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆகியோர் பாதித்த பகுதிகளை பார்த்து உள்ளனர். முதல்வர் பாதிப்பு குறித்து அறிக்கை அளித்துள்ளார். பிரதமருக்கு திட்டமிட்ட அலுவல் இருக்கும், கஜாபுயல் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மத்திய அரசு இணக்கமான முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Minister #KadamburRaju
கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து லாரி மூலம் நிவாரணப் பொருள்களுடன் சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர், பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெமினி, சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, நிர்வாகிகள் போடுசாமி, பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Minister #KadamburRaju

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். #Sarkar #EdappadiPalaniswami #MinisterKadamburRaju
சர்கார் படத்துக்கு எதிராக அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-
அமைச்சர் சி.வி.சண்முகம்:-
சர்கார் படத்தில் அம்மாவின் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சி அரசின் மக்கள் நலத் திட்டங்களை அவமதிக்கும் செயலாகும். எனவே சர்கார் திரைப்படத்தை திரையிட்டுள்ள தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மாவின் விலையில்லா திட்டங்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பது அரசை அவமதிக்கும் செயலாகும். இதற்காக நடிகர் விஜய், படத்தயாரிப்பாளர், இயக்குனர், படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

குறிப்பாக கல்வித்துறையில் வழங்கப்படும் அரசு திட்டங்கள் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவுமே வழங்கப்படுகிறது. இன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறது. சர்க்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ:-
சர்க்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது. அவற்றில் சம கால அரசியலை விமர்சிக்கும் வகையிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல.
சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்டநடவடிக்கை குறித்துயோசிப்போம். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முல்வருடன் விவாதிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Sarkar #Vijay #ADMK #TNMinisters
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. அரவக்குறிச்சி தொகுதி- தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
2. திருவாரூர் தொகுதி- ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்), ஆசைமணி (முன்னாள் எம்.எல்.ஏ.)
3. பாப்பிரெட்டிபட்டி- செ.ம.வேலுசாமி (கொள்கை பரப்பு துணை செயலாளர்), ப.மோகன் (அமைப்பு செயலாளர்)
4. திருப்போரூர்- நீலாங்கரை முனுசாமி (மீனவர் பிரிவு செயலாளர்), கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர்)
மானாமதுரை தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொகுதி மாற்றப்பட்டு பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ். பி.சண்முகநாதன் ஒட்டப் பிடாரம் தொகுதிக்கு பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Edappadipalaniswami #OPanneerselvam #KadamburRaju
தூத்துக்குடி:
அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது;-
தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்ற அறிவிப்பு வந்து உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் என்ற நிலையில் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் விருப்பப்படி ஆலோசனை கூட்டம் நடத்தலாம். அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது.
ஒரு கட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கின்ற நேரத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய கட்சி கொறடாவிற்கும், சட்ட பேரவை தலைவருக்கும் அதிகாரம் உண்டு.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளார். இதில் மேல்முறையீடு செய்வது தேவை இல்லாதது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அதே நிலைபாட்டில் இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கட்சியின் கொறடா, முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் ஆகியோர் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள்.
காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நாங்கள் எப்போது தேர்தல் நடந்தாலும் தயாராக உள்ளோம். தனியாக தேர்தல் வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் சரி அ.தி.மு.க. நிச்சயமாக தேர்தலை எதிர்கொள்ளும். 20 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து கட்சிகள் செயற்குழு பொதுக்குழுக்களை கூட்டி கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு படி தொகுதி வரையரை செய்யப்பட்டு வருகிறது. 90 சதவீதம் முடிந்துவிட்டது. முழுமையாக முடித்துவிட்ட பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக தான் தற்போது தேர்தல் நடத்தவில்லை. என்றும் நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்பட்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #ministerkadamburraju #dinakaransupportingmla
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய அதேநேரத்தில் திருச்செந்தூரில் சிவந்தி அகாடமியில் விழா நடைபெற்றது. விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார்.
விழாவில் மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இன்று முதல் அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மணிமண்டப பணிகள் வேகமாக நடைபெறும். மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும். 2019-ம் ஆண்டுக்குள் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியதும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அதன் விவரம் வருமாறு:-
தமிழக முதல்-அமைச்சர் கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இம்மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்துக்கு இன்று அடிக்கல் நாட்டிய தமிழக முதல்-அமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், நான் சிவந்தி ஆதித்தன் பேசுகிறேன். எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியமைக்கு என் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்- அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடிக்கல் நாட்டப்பட்டதும் காணொலி காட்சியில் மணிமண்டபத்தின் முழு மாதிரி தோற்றம் காட்டப்பட்டது. இதை தொடர்ந்து மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கின.
பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தார்கள்.
விழாவில் எம்.பி.க்கள் பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வசந்தகுமார், இன்பதுரை.

முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, இந்து முன்னணி மாநில தலைவர் அரசு ராஜா, துணைத்தலைவர் ஜெயக்குமார்.
பா.ஜனதா கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நெல்லை மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் தோப்புமணி, துணைத்தலைவர் தர்மர்.
நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வது குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் கடந்த 2015-ல் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. ஓடைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் ஏற்பட்டால் தேங்காமல் கடலுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டால் எதிர்கொள்ள உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 25 முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டால் 100 சதவீதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
