என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi Surname"

    • வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கூறினார்.
    • ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பாட்னா:

    மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

    இதேபோல் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக பீகார் மாநிலம் பாட்னாவிலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    இந்த வழக்கின் விசாரணைக்காக ஏப்ரல் 12ம் தேதி (இன்று) ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. சூரத் நீதிமன்ற வழக்கில் ராகுல் காந்தியின் சட்டக்குழுவினர் பிசியாக இருப்பதால் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதை உறுதி செய்யும்படி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

    இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிரியா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மனுதாரர் தரப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது' என்றார்.

    ×