search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Temple"

    • தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார்.
    • உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தந்தை வாசு. தாயார் மணி (54). ஜீவா என்கிற தங்கை உள்ளார். பிரபு மற்றும் அவரது தங்கை ஜீவா ஆகியோர் சிறுவயதில் இருந்தபோதே தந்தை வாசு இறந்து விட்டார்.

    தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார். இதனால் பிரபுவுக்கு உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோவில் கட்ட வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசையாக இருந்து உள்ளது.

    தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள தாயாரை பெருமைபடுத்தும் வகையிலும், நன்றி கடன் செலுத்தும் வகையிலும் தனது வீட்டிற்கு அருகே 1,200 சதுர அடி நிலம் வாங்கி, கோவில் போன்று கட்டி அதில் 3 அடி உயரத்தில் தனது தாயாருக்கு சிலை வைத்து உள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இது குறித்து பிரபு கூறியதாவது:-

    நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். பல்வேறு கஷ்டங்களை சந்தித்து என்னை வளர்த்த தாயாரை கவுரவப்படுத்த நான் எண்ணினேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட, உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது.

    இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெள்ளை நிறத்தில் செதுக்கப்பட்டு உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வைப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாயின் சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    உயிருடன் இருக்கும் எனக்கு மகன் சிலை வைத்து இருப்பது பெருமையாகவும், நெகிழ்வாகவும் இருப்பதாக பிரபுவின் தாயார் மணி கூறினார்.

    ×