search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP Woman"

    • ரவீணா உய்கே என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • டாக்டரின் வழிகாட்டுதல்படி மருத்துவச்சி ரேஷ்னா வன்ஷ்கர், ரவீணாவுக்கு பிரசவம் பார்த்தார்.

    போபால்:

    நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில், பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு, அவரது டாக்டர் தங்கை செல்போன் மூலம் பிரசவத்துக்கு ஆலோசனை வழங்குவார். அதன்படியே நடிகர் விஜய்யும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாயையும், குழந்தையையும் காப்பாற்றுவார்.

    சினிமாவில் வரும் இந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில், மத்திய பிரதேசத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையில், அந்த மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக உள்ளது. அங்குள்ள ஜோராவாடி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த ஊருக்குள் யாரும் செல்லவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அந்த கிராமத்தை சேர்ந்த ரவீணா உய்கே என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி இருந்ததால், அவர்களால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை.

    போன் மூலம் மாவட்ட ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்ட ரவீணாவின் கணவர், தனது மனைவியின் நிலைகுறித்து தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட சுகாதார அதிகாரியான பெண் டாக்டர் மனிஷா சிர்சாமுடன் மருத்துவக் குழுவினர் கிராமத்துக்கு புறப்பட்டனர். ஆனால் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் குழு கிராமத்தை அடைய முடியாது என்பது தெளிவாகத் தெரிந்ததும், டாக்டர் சிர்சாம், ரவீணாவின் கணவருக்கு போன் செய்து, கிராமத்திலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவச்சியை தங்கள் வீட்டிற்கு வரவழைக்கச் சொன்னார்.

    இதையடுத்து அந்த கிராமத்து மருத்துவச்சியான ரேஷ்னா வன்ஷ்கர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட டாக்டர் சிர்சாம், தான் கூறும் வழிமுறைகளை பின்பற்றி ரவீணாவுக்கு பிரசவம் பார்க்கும்படி தெரிவித்தார்.

    டாக்டரின் வழிகாட்டுதல்படி மருத்துவச்சி ரேஷ்னா வன்ஷ்கர், ரவீணாவுக்கு பிரசவம் பார்த்தார். அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்த டாக்டர், அதற்கு தகுந்தபடி மருத்துவ ஆலோசனைகளை கூறினார்.

    இறுதியில் ரவீணாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. மறுநாள் வெள்ளம் வடிந்ததும், ரவீணாவும், அவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். "தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்" என்று சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார்.

    ×