search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mundakakanni Amman"

    • தாய் அம்மனாக மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கருதப்படுகிறாள்.
    • நாகர்கள் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

    மயிலை முண்டகக்கண்ணியம்மனின் அருள் சிறப்புகளாக எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். அதில் தனிச்சிறப்பாக அம்மை பாதிப்பை உடனே இறங்கச் செய்வதை சொல்கிறார்கள்.

    ஒருவருக்கு அம்மை போட்டிருந்தால், அதுக்கு அவர் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் ஆலயம் வந்து பூசாரிகளிடம் தகவல் சொன்னால் போதும். அவர்கள் அம்மனின் தீர்த்தம், மஞ்சள்,வேப்பிலையை கொடுப்பார்கள்.

    அவற்றை வாங்கிச்சென்று அம்மையால் பாதிக்கப்பட்டவரிடம் கொடுக்க வேண்டும். தீர்த்தத்தை உடனே உட்கொள்ளச் செய்ய வேண்டும். அவர் தலையில் சிறிது தீர்த்தம் தெளிக்கலாம்.

    அம்மை போட்டுள்ள இடங்களில் அம்மனின் பிரசாதமான மஞ்சளை தேய்த்து விடலாம். உடலில் சிலருக்கு அம்மை பாதிப்பு அதிகமாகி எரிச்சல் ஏற்படலாம். அந்த இடங்களில் வேப்பிலையால் தடவிக் கொடுக்கலாம்.

    இது தவிர அம்மை போடப்பட்டவர்...... இடத்தில் தலை மாட்டில் கொஞ்சம் வேப்பிலை எடுத்து வைக்கலாம். இதனால் அம்மன் அருள் பெற்று அம்மை உடனே இறங்கி விடும் என்கிறார்கள்.

    இது பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் நடந்த உண்மையாகும். அன்னையின் தீர்த்தம் அருந்தி, அவள் ஆலயத்து மஞ்சளை `அம்மா...' என்றழைத்து நெற்றியில் பூசிக்கொண்டவர்களுக்குத்தான் அந்த மகத்துவம் தெரியும்.

    பில்லி-சூனியம் ஓடி விடும்

    சிலருக்கு அல்லது சில குடும்பங்களுக்கு பில்லி-சூனியத்தால் பாதிப்பு ஏற்படலாம். அந்த சூனிய பாதிப்பு பற்றி அவர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள்.

    தொழிலில் நஷ்டம், வீண் மனக்கவலை, குடும்பத்தில் அமைதி இல்லாத நிலை, கணவன்-மனைவி இடையே தகராறு, பொருள் நஷ்டம் என்று இந்த பில்லி சூனியத்தின் பாதிப்பு வடிவம் வேறு, வேறு வகைகளில் இருக்கலாம்.

    இத்தகைய பிரச்சினைகள் தொடர்கதையாக இருந்தால் அதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டாமா? அந்த பொறுப்பை நீங்கள் முண்டகக்கண்ணியம்மனிடம் ஒப்படைக்கலாம்.

    அன்னைக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யுங்கள். பிறகு `அம்மா உன்னிடம் பொறுப்புகளை போட்டு விட்டேன்' என்று மனம் உருகி வேண்டி வீடு திரும்புங்கள். இந்த எளிய பிரார்த்தனையே போதும், உங்களைப்பிடித்த பில்லி-சூனியம் போன்றவை வந்த சுவடு தெரியாமல் ஓடோடி விடும்.

    இவள்தான் தாய்

    மயிலாப்பூர், மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம்,ராயப்பேட்டை பகுதிகளில் எத்தனையோ அம்மன் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தாய் அம்மனாக மயிலை முண்டகக்கண்ணி அம்மன் கருதப்படுகிறாள்.

    அதனால் தான் மற்ற அம்மன் ஆலயங்களில் உற்சவங்கள் மற்றம் விழாக்கள் நடக்கும் போது முதலில் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வந்து வழிபடுவார்கள். இங்கிருந்து தான் அந்த ஆலயங்களுக்கு கரகம் எடுத்து செல்வார்கள்.

    இந்த வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம்

    இத்தலத்தின் இடது பக்கத்தில் இரண்டு அரச மரத்துக்கு அடியில் ஏராளமான நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் பேரில் இந்த சிலைகளை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த நாகர்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    இந்த நாகர்களுக்கு வேண்டிக் கொண்டு,தங்கள் கையாலேயே பாலாபிஷேகம் செய்யலாம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த பாலாபிஷேகத்தை செய்து, நெய்விளக்கு தீபம் ஏற்றி கையில் வைத்து தீபாரதனை காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெண் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

    • ஆல மரப்பொந்தில் புற்று உள்ளது. அம்மன் நாக வடிவில் இருக்கிறாள்.
    • நாகம் இரவில் புற்றில் இருந்து வெளியில் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறது.

    மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. தோஷங்களை நீங்கச் செய்யும் இந்த வழிபாட்டை நாளுக்கு நாள் அதிக அளவில் பெண்கள் செய்து வருகிறார்கள்.

    முன்பெல்லாம் தினமும் சுமார் 20 முட்டைகளே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம்.

    அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதுபோல நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாக்கெட், பாக்கெட்டாக பால் கொண்டு வந்து ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    இந்த முட்டை+ பாலை உடனுக்குடன் கோவில் பணியாளர்கள் அகற்றி தொடர்ந்து மற்ற பெண்கள் வழிபாடு செய்ய உதவுகிறார்கள்.

    நாகம் வழிபடுதல்

    மூலவர் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் பின்புறம் ஆல மரம் உள்ளது. அந்த ஆல மரப்பொந்தில் புற்று உள்ளது. இங்கு அம்மன் நாக வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நாகம் இரவில் புற்றில் இருந்து வெளியில் வந்து அம்மனை வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு வசதியாக கோவில் நிர்வாகத் தினரே கருவறை ஓலைக்குடிசையின் அடிப்பகுதியில் ஆங்காங்கே ஓட்டை போட்டு வைத்துள்ளனர்.

    அதன் வழியாக நாகம் சென்று வருவதாக நம்பப்படுகிறது. இந்த நாகம் சிலரது கண்களுக்கு தென்படுவது உண்டு. ஆனால் அடுத்த ஒரிரு வினாடிகளில் அந்த நாகம் எங்கும் சென்றது என்பதை கண்டு பிடிக்க முடியாதபடி மறைந்து விடுமாம்.

    கோவில் ஊழியர்களே அந்த நாகத்தை பல தடவை பார்த்துள்ளனர். ஆனால் அந்த நாகம் பக்தர்கள் யாரையும் இதுவரை அச்சுறுத்தியதாக எந்த வரலாறும் இல்லை.

    ராகு-கேதுவின் அமைப்பால் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள், இந்த நாகம் குடியிருக்கும் புற்றுப்பகுதியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் தோஷ நிவர்த்தியாகக் கருதப்படுகிறது. முட்டை உடைத்து, பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டால் நாக தோஷ பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

    சிம்ம வாகனத்தில் உற்சவர்

    ஆலயத்தின் வலதுபுறம் அதாவது மூலவர் கருவறைஅம்மனுக்கு இடதுபுறம் அன்னையின் உற்சவர் சன்னதி உள்ளது. தனி கோவில் போல அந்த சன்னதி காட்சி அளிக்கிறது. அங்கு உற்சவர் அம்மன் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.

    வீதி உலா செல்வது இந்த உற்சவர் அம்மன் தான். ஒரு வருடத்தில் ஆடி கடைசி ஞாயிறு, விஜயதசமி,தை கடைசி வெள்ளி, சித்ராபவுர்ணமி, வருடபிறப்பு ஆகிய 5 தடவை மட்டுமே உற்சவர் வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் இந்த சன்னதி முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கண் நோய்கள் நீங்கும்

    அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு பல்வேறு கோரிக்கைகளை சுமந்து கொண்டு பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதை ஆய்வு செய்த போது பக்தர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் கண் நோயை தீர்த்து வைக்குமாறு அன்னையிடம் வேண்டுவது தெரியவந்துள்ளது.

    அம்மனின் நாமத்தில் முண்டகக்கண்ணி என்று இருப்பதால் அதை முண்டக்கண்ணி என்ற நோக்கில் பக்தர்கள் நினைத்து கண் நோய்களுக்கான வழிபாடு அதிகம் நடைபெறுகிறதாம்.

    இந்த ஆலயத்துக்கு அம்மனுக்கு நன்கொடையாக வரும் வெள்ளி கண் மலர்கள் மற்றும் உண்டியல்களில் அதிகபட்சமாக கிடைக்கும் கண்மலர்கள் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம்.

    • மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம்.
    • நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது.

    நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் தோன்றிய மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம். மயிலையில் நீங்கள் எந்ததெருவுக்குள் சென்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தை காண்பீர்கள்.

    இந்த சிறப்பின் ஒரு அம்சமாக மயிலையில் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் இருந்து மிக, மிக எளிதாக இந்த ஆலயத்தை சென்று அடையலாம்.

    லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன.

    விநாயகரை வணங்கி முண்டகக்கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.

    வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். அவள் தரும் பிரசாதமே அம்மை நோய், விஷக்கடி, பில்லி, சூனியம், கடும் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்தாக உள்ளது.

    முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம். ஒரே ஒரு பிரகாரம் தான். பிரகாரத்தை சுற்றத் தொடங்கியதும் அருகில் தனி அறை போல உள்ள அமைப்பினுள் சில சன்னதிகள் இருப்பதை காணலாம்.

    ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, அய்யப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ஆஞ்சநேயர், வள்ளலார் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். அந்த அறையின் ஒரு பகுதி சுவரில் சித்த புருஷர்களும், மகான்களும் படங்களில் உள்ளனர்.

    இதையடுத்து வெளியில் வந்து மீண்டும் பிரகாரத்தை தொடர்ந்தால், முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதி வரும். அங்கு தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.

    இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எனவே இந்த இடத்தில் பொங்கல் வைக்க பெண்கள் போட்டி போடுவது உண்டு. இந்த பகுதியை பொங்கல் மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

    இதையடுத்து அம்மனின் இடதுபுற பக்கவாட்டில் தனி சன்னதியில் உற்சவர் அம்மன் இருப்பதை காணலாம். சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் உள்ளாள்.

    ஆலய கிணறு, மடப்பள்ளியை கடந்து சென்றால் தான் உற்சவரை கண்டு வழிபட முடியும். உற்சவர் சன்னதி இடதுபுறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். அந்த சன்னதி அமைப்பின் இருபுறமும் ஜமத்கனி முனிவரும் அவரது மகன் பரசுராமரும் உள்ளனர்.

    இவர்களை வழிபட்டால் அத்துடன் வழிபாடு முடிந்தது. அந்த அளவுக்கு இந்த ஆலயம் மிக சிறிய ஆலயமாக உள்ளது. முண்டகக்கண்ணி அம்மன், நாகர் இருவரையும் தான் மக்கள் அதிகமாக வழிபடுகிறார்கள்.

    வழிபாடுகள் முடிந்ததும் ஆலயத்தின் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமரலாம். பிறகு மற்றொரு வாயில் வழியாக வெளியேறலாம். மயிலை பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.

    • சென்னை மாநகருக்கே ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்கிறாள்.
    • முண்டகக்கண்ணியம்மனை வணங்கியே எந்த நல்ல செயலையும் தொடங்குகிறார்கள்.

    சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாப்பூருக்கு எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன. மயிலை என்றதும் பெரும்பாலனவர்களுக்கு கபாலீஸ்வரர் தான் நினைவுக்கு வருவார்.

    அதனால் தான் மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்பார்கள்.

    ஈசன் சிறப்பு பெற்ற இந்த இடத்தில் அம்பிகையின் ஆட்சி இல்லாமல் இருக்குமா? மயிலையில் அம்மன் என்றதும் மறுவினாடி முண்டகக்கண்ணி அம்மன் தான் நம் மனக்கண் முன் வந்து நிற்பாள்.

    மயிலையில் கோலவிழி அம்மன், தண்டு மாரியம்மன் உள்பட பல அம்மன் தலங்கள் உள்ளன. என்றாலும் முண்டகக்கண்ணி அம்மன் முதன்மைச் சிறப்பு பெற்று திகழ்கிறாள்.

    மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    சென்னையில் உள்ள பழமையான பல ஆலயங்களுடன் ஒப்பிடுகையில் முண்டகக்கண்ணி அம்மன் அதைவிட பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டிருப்பது தெரியவரும்.

    சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளம் கபாலீஸ்வரர் கோவிலுக்குரிய குளமாகவோ அல்லது விவசாய பாசனத்துக்குரிய குளமாகவோ இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. குளத்துக்கு வரும் மக்கள் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து செல்வது வழக்கம்.

    ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி இருப்பதை கண்டனர். அவர்களில் ஒருவர் மீது அருள் வந்து அம்மன் தன்னை வெளிப்படுத்தி இருப்பதை தெரிவித்தாள்.

    உடனே அந்த கிராமத்தினர் திரண்டு வந்து அம்மன் சுயம்புவாக தோன்றி இருப்பதை கண்டனர். ஒரு தாமரை மொட்டு எப்படி இருக்குமோ, அப்படி அந்த சுயம்பு வடிவம் இருந்தது.

    கிராம மக்கள் அந்த சுயம்பு அம்மனை தங்களின் காவல் தெய்வமாக கருதினார்கள். எனவே அந்த ஆலய மரத்தடியில் குடிசை ஒன்று அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.

    அந்த அம்மனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது கிராமத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெயரை கூறினார்கள். ஊரின் எல்லையில் இருப்பதால் எல்லை அம்மன் என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தனர்.

    ஆயிரம் நாமம் கொண்ட அன்னை அவ்வளவு எளிதில் பெயரை ஏற்கவில்லை. அவள் விருப்பம் நிறைவேறும் வரை விட மாட்டாளே...!

    அப்போது தாமரைக்குளக்கரையில் தோன்றியதாலும், தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாலும் தாமரை என்ற தமிழ் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை கொண்டு தொடங்க அம்மனை சேர்த்து `முண்டகக்கண்ணி அம்மன்' என்ற பெயர் வைக்கலாம் என்ற கருத்து எழுந்தது. அம்பிகையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

    இதனால் அந்த அம்மன் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள் முண்டகக்கண்ணி என்ற சொல்லுக்கு பிறகு வந்தவர்கள் பல, பல அர்த்தங்கள் கண்டு பிடித்து கூறினாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தான் பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    ஓலைக்குடிசையில் உருவான இந்த கோவில் முதலில் கிராமக் கோவிலாக இருந்தது. அந்த அம்மன் உருவானதற்கு பிறகு அந்த ஊரின் வளர்ச்சியிலும், மக்களின் முன்னேற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதனால் முண்டகக்கண்ணி அம்மனின் புகழ் பரவியது.

    மயிலையில் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் கொண்டிருக்கிறாள் என்று நகர மக்களிடம் பேச்சு எழுந்தது. ஆங்கிலேயர்கள் சென்னை வரும் முன்பே முண்டகக்கண்ணி அம்மன் மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தாள்.

    ஆங்கிலேயர்களிடம் சென்னை நகரம் ஆளுமைக்குள் சென்றபோது, முதலில் அவர்கள் ஏதோ ஒரு சிறு கோவில் என்றே நினைத்தனர். விசேஷ நாட்களில் மக்கள் அம்மனை காண திரள்வதை கண்ட பிறகு அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டனர். அவர்களும் முண்டகக்கண்ணி அம்மனை தேடி வந்து வழிபட்டு சென்றனர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இத்தலத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. 1950 களிலேயே இந்த கோவில் கிராம கோவில் என்ற நிலையில் இருந்து மாறி, அரசு கோவிலாக மாறியது.

    இதற்கிடையே முண்டகக்கண்ணி அம்மனின் புகழ் சென்னை முழுவதும் பரவியது. மக்கள் சாரை சாரையாக வந்தனர்.

    இன்று சென்னையில் உள்ள பக்தர்கள் ஒவ்வொரு வரும் முண்டகக்கண்ணியம்மன் அருள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். முண்டகக்கண்ணியம்மனை வணங்கியே எந்த நல்ல செயலையும் தொடங்குகிறார்கள்.

    அந்த வகையில் இன்று சென்னை நகர மக்களின் உணர்வோடும், ஆத்ம ஞான சிந்தனையோடும் கலந்து விட்ட ஒரு அம்பிகையாக அருள்மிகு ஸ்ரீமுண்டகக்கண்ணியம்மன் திகழ்கிறாள்.

    • தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் அம்மன் கோவில்கள் உள்ளன.
    • அம்பிகையை குண்டலி சக்தியாக கருதி யோகிகள் போற்றுவார்கள்.

    இந்த கோவில் மிகமிகப் பழமையான ஒரு கோவில் ஆகும். இந்த கோவில் அமைந்திருக்கும் தெரு `முண்டகக் கண்ணி அம்மன் கோவில் தெரு' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. மிகவும் பழமையான அரசாங்க ஆவணங்களிலும், இந்த தெருவின் பெயர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு என்றே காணப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள வயது முதிர்ந்த பலர் தங்கள் தாத்தாக்கள் காலத்திலும் இந்த அம்மன் கோவில் புகழுடன் விளங்கியதாக கூறுவர். இவை இந்த கோவிலின் பழமையை காட்டுகிறது.

    முதல் பிரார்த்தனை தலம்

    இந்த கோவிலில் எல்லா இனத்தவர்களும் வந்து தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தி வருகின்றனர். தங்கள் முதல் பிரார்த்தனையை இங்கே செலுத்திய பின்பே, பிற வழிபாடுகளையும், இவர்கள் மேற்கொள்கின்றனர். இந்தப் பழக்கம் நெடுங்காலமாக இங்கே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.

    இப்படி முதல் பிரார்த்தனை செய்யும் பழக்கம் நிலவுவது, இந்த கோவில் தொடக்க காலத்தில் மயிலையின் வடக்கு எல்லையில் அமைந்த எல்லையம்மன் கோவிலாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயிலையின் காவல் தெய்வமாக, மக்களால் வழிபடப் பெற்ற அம்மனே நாளடைவில் முண்டகக்கண்ணி அம்மன் என்று மாறி இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    அடக்கமும் ஆற்றலும்

    சக்திவாய்ந்த முனிவர்களையும், மகான்களையும் தரிசிக்கப் போகும்போது, அவர்கள் காட்சி தரும் எளிமை கோலமும், அவர்கள் பேசுகின்ற கனிவான சொற்களும், நம்முடைய மன செருக்கை அடியோடு அழித்துவிடும். அவர்களிடம் அருளை பெற செல்கின்றோம். அருள் வழங்கும் வள்ளல்களான அவர்களின் எளிமை தோற்றம், நம் அகந்தையை சுட்டு எரிக்கின்றது.

    பெரும்சக்தி படைத்த முண்டகக்கண்ணி அம்பிகையின் சுயம்பு ரூபமும், ஓலைக்குடில் வாசமும், அவளைத் தொழுபவர்களிடம் இந்த மனமாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. அகந்தை அழிந்து அடியோடு மறைய உள்ளத்தில் எளிமையும் பக்தியும் பூத்து நிரம்பி வழிய வழி உண்டாகிறது. இதனால் இத்தலத்துக்கு பக்தர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்து மகிழ்கின்றனர். இந்த மனமாற்றத்தை உள்ளத்திலே பூக்கும் தெளிவை ஏற்படுத்துவதற்காகவே அம்பிகை இவ்வாறு எளிய கோலத்தில் ஓலைக் குடிசையில் தோற்றம் தருகின்றாள்.

    அகத்தில் தோன்றும் காட்சி

    உருவமற்ற முண்டகக்கண்ணி அம்மனின் சுயம்பு வடிவத்தை புறக்கண்களால் கண்டாலும், நம் மனதில் அம்மன் சோதிப் பிழம்பாக, அருளோடு பார்க்கும் அன்னையாகவே காட்சி தருகின்றாள்.

    தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் அம்மன் கோவில்கள் உள்ளன. எத்தனையோ வகையான கட்டிட அமைப்புகளும் உள்ளன. மண்ணிலே அமைந்தவை, செங்கல்லும் சுண்ணாச்சாந்தும் கலந்து கட்டியவை, கற்பணிகளால் எழுப்ப பெற்றவை என பலவகைகள் உள்ளன.

    ஓலைக் குடில்களும் உள்ளன. எனினும் ஓலைக்குடிலை விரும்பிய இந்த அம்பிகையின் உள்ளக் குறிப்பினை அனைவரும் சிந்திக்க வேண்டும். `என்னைப்பார்! எளிமையைப் போற்று! என்றும் இன்பமாக இருப்பாய்' என்று அன்னை கூறாமல் கூறுவது போல கருவறை காட்சி உள்ளது.

    நாகக்குடையும் மலர் இருக்கையும்

    அம்பிகையின் சுயம்பு வடிவத்துக்கு மேல் தாமரையில் அமர்ந்திருப்பவளாக அவளைப் புனைந்து காட்டும் ஒரு சிறிய விமான அமைப்பை காணலாம். அவள் தலைக்கு மேலாக, ஐந்து தலைநாகம் படம் விரித்து, அவளுக்கு நிழல் தரும் குடைபோல் அது விளங்குகின்றது.

    செந்தாமரையில் அமர்ந்த இவளுடைய உருவத் தோற்றமானது இவளே செல்வத்திற்கு அதிதேவதையான திருமகள் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இதனால் அவளை வழிபடுபவரின் வறுமை விலகிச் செல்வம் பெருகும். முண்டகக்கன்னித் தாயின் முன்னே நின்று வேண்டிய பலரின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது.

    குண்டலினி சக்தி

    அம்பிகையைக் குண்டலி சக்தியாகக் கருதி யோகிகள் போற்றுவார்கள். குண்டலி சக்தியானது மூலாதாரத்திலிருந்து சீறி எழுந்து சகஸ்ரநாமத்தை அடைந்து அங்கே சிவத்துடன் ஒன்றுபடும்.

    இந்த வகையில் குண்டலினி சக்தியை எழுப்பி மேலேற்றியும் இறக்கியும் யோகம் புரிபவர்கள், அளவில்லாச் சக்தியைப் பெற்றும், அழியாத உடலைப் பெற்றும் விளங்குவார்கள். இவ்வகையில் விளங்கும் குண்டலினி சக்தியாகிய மூல சக்தியே நாகப்பாம்பாக இந்த கோவிலில் உலவுகின்றது. எனவே நாகப்பாம்புக்கு முட்டையும் பாலும் வைத்துப் பூசிப்பது என்பது அன்னையை வழிபட்டதற்கு சமமாகும்.

    குண்டலினி சக்தியை மேம்படுத்திக் கொள்ள விரும்பு பவர்கள் முண்டகக்கன்னி அம்மனை பணிந்தால் நிச்சயமாக அதற்கான பலன்களை பெறுவார்கள்.

    அம்மன் கோவில்களில் நாகங்களின் நடமாட்டம் எப்போதுமே இருக்கும். `கோவில்பாம்பு' என்று இவற்றைக் குறிப்பிடுவார்கள். இந்தப் பாம்பு பக்தர்களுக்குக் கெடுதல் செய்வதும் இல்லை. தனக்கெனப் படைக்கும் பாலையும் முட்டையையும் அருந்திவிட்டுப் போய் விடுகின்றது.

    சில கோவில்களுள் பாம்பு புற்று தனியாக இருக்கும். சில இடங்களில் மூலஸ்தானத்துக்கு அருகேயே பாம்பு புற்று இருக்கும். இங்கே மூலஸ்தானத்துக்குப் பின்புறம் உள்ளது.

    இத்தலத்தில் நாகத்தையே தனக்கு உகந்ததாக ஏற்று விளங்குகிறாள் அன்னை. எத்தகைய கொடியவரையும் மாற்றித் தனக்கு அடியவராக்கிக் கொள்ளும் சக்தி பெற்றவள் அன்னை என்பது இதன்மூலம் விளங்கும் உண்மையாகும்.

    • கண் கொடுத்த தெய்வம் முண்டகக்கண்ணி அம்மன்.
    • வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் அரைத்து தடவி வர அம்மை தழும்புகள் மறையும்.

    ''பெரிய பணக்காரர்கள்தான் இவளுடைய பக்தர்கள் என்று சொல்வதைவிட, இவள் ஏழைகளுக்குத்தான் கண்கண்ட தெய்வம், என்று சொல்லலாம். நரஹரி ராவ் என்று ஒரு பக்தர். மிகமிகக் குறைந்த சம்பளம்தான் அவருக்கு.

    வேலை கிடைக்காமல் அவதிப்பட்டபோது நான் வேலைக்குப்போனால், என்னால் குறைந்த பட்சம் எவ்வளவு அனுப்ப முடியுமோ அவ்வளவு அனுப்பி வைக்கிறேன். என் சக்தி உயரும்போது உனக்கும் உயரும் என்றார்.

    முதல் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு சம்பளத்தையும் வாங்கிய உடனே உனக்கு என்னால் முடிந்ததை அனுப்பி வைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார்.

    அவருக்கு வேலை கிடைத்தது. அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன்பணம் அனுப்பி வைத்து விடுகிறார்.

    கண் கொடுத்த தெய்வம்

    ஓர் அன்பர், கண் பார்வையற்றவர் ஒருநாள் இங்கே வந்தார். ''எத்தனையோ தலங்களில் எவ்வளவோ நாளாக வேண்டினேன். ஆனால் இதுவரை கண் பார்வை எனக்குக் கிடைக்கவில்லை. டாக்டர்கள் இனிமேல் பார்வை கிடையாது என்று கைவிரித்து விட்டார்கள். கடைசியாக யாரோ ஒருவர், 'மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்திற்கு 108 நாள் வந்து சுற்றுகிறேன்' என்று வேண்டிக்கொள், பார்வை கிடைத்துவிடும் என்றார்.''

    'அதன்படியே தட்டுத்தடுமாறி இங்கே வந்து சேர்ந்து விட்டேன். கண் நிச்சயமாகக் கிடைக்குமா? என்றார்.'

    'அம்பாளை மனமுருக வேண்டிக்கொள். நிச்சயம் அவள் கண் கொடுப்பாள். அவளே தாமரைக் கண்ணாள், தன் மகனுக்குக் கண் இல்லை என்று சொல்வாளா? என்றார்.'

    அன்று முதல் அந்த அன்பர் மனமுருகி அம்பாளை வலம் வந்தார். இத்தனைதான் சுற்றுவது என்று நியதி வைத்திருக்கவில்லை. தோன்றிய எண்ணிக்கை சுற்றுவார். ஒவ்வோர் நாளும் அம்பாளின் கிணற்றில் நீராடி சுற்ற ஆரம்பிப்பார். முடிவில் தீர்த்தப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வீடு போய் சேருவார்.

    இப்படி நம்பிக்கையுடன் அவர் சுற்ற ஆரம்பித்து 108 நாட்களும் ஓடி விட்டன. ஆனால் அம்பிகை மட்டும் என்ன காரணத்தினாலோ மனம் இரங்காமல் அவரை சோதனைப்படுத்தியே வந்தாள்.

    ஒரு நாள் அம்பிகையின் சன்னதியிலே முண்டகக்கண்ணியை தாறுமாறாக, அவர் பேச தொடங்கினார். அங்கிருந்தவர்கள் அத்தனை பெரும் கலங்கினர்.

    என்ன ஆச்சரியம்?

    அன்னையை திட்டிக் கொண்டிருந்தவர் திடீரென மகிழ்ச்சியில் பெச ஆரம்பித்தார்.

    'அம்மா எனக்கு கண் கிடைத்து விட்டது. தாயே பராசக்தி! பூரணி! நாரணி! ஆனந்தி! எனக்கு கண் கொடுத்துவிட்டாய் தாயே! கண் கொடுத்துவிட்டாய்! செத்தாலும் உன்னை மறவேன் இனி.'

    என்ன நடந்தது? எப்படிக் கிடைத்தது இந்த விழிகள்? பூபதிசுவாமிகள் கேட்டார். 'நான் திட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மூலஸ்தானத்தில் இருந்து ஒரு சுடர் தோன்றுவதை கண்டேன். அது வரவர பெரிதாகி திடீர் என்று மறைந்துவிட்டது. அப்போது நான் பார்க்கும் சக்தி பெற்றேன் என்றார்.

    நடிகையின் குறை தீர்த்தாள்

    1979-ம் வருஷத்தில் ஒரு முன்னணி நடிகைக்கு நிறைய படங்கள் இருந்த நேரம். இரவும் பகலும் தொடர்ந்து நடித்ததால் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது.

    அப்புறம் உடல் முழுவதும் அம்மை போட்டு விட்டது. ஒரே நாளிலேயே கிடுகிடுவென்று அம்பிகை நிறை பாரமாகப் போட்டுத் தள்ளிவிட்டாள்.

    அந்த நடிகையிடம் ஒருவர், 'முண்டகக் கண்ணி அம்பாளை வேண்டிக் கொள்ளுங்கள். அவள் ஒருத்திதான் உடனடியாக இதை தீர்த்து வைக்க முடியும்' என்று கூறினார். அதே போல வேண்டிக் கொண்டு நேரே கோவில் வந்தார். அம்பிகையின் தீர்த்தப் பிரசாதம் கொடுத்தனர்.

    என்ன ஆனாலும் சரிதான். எல்லாமே அம்பிகையின் அருள் என்று நினைத்து, அம்பிகையின் கிணற்றில் குளித்துவிட்டு, கால் அயரும் வரை பிரகாரத்தைச் சுற்றியே வந்தார் அந்த நடிகை. போட்டிருந்த முத்துக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

    இத்தனை சுற்றுதான் என்று கணக்கு இல்லை. பக்தியால் கண்ணீர் பெருக்கெடுக்க, உடனடியாக ஷீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தலையெடுக்க, அம்பிகையே கதி என்று எண்ணி, தலை சுற்றிக் கீழே சாயும் வரை சுற்றிவிட்டு அந்த நடிகை வீட்டிற்கு போனார்.

    அந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் எல்லா முத்துகளும் கொட்டிவிட்டன. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கோவிலுக்கு வந்து முழுமையாக குணமடைந்தவுடன் ''அம்பிகையிடம் நான் கோவில் நிர்வாகம் கேட்கும் எதையும் செய்து முடிக்கிறேன் என்று பிரார்த்தனை செய்திருந்தேன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று அந்த நடிகை கேட்டார்.''

    ''கோயில் ராஜ கோபுரத்திற்கு கலசம் ஒன்று வைக்க வேண்டும். முடிந்தால் செய்யுங்கள்'' என்று கோவில் நிர்வாகிகள் கூறினார்கள். எவ்வளவு ஆகும்? என்று கேட்டார். சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகலாம் என்றனர். அதே போல ஐந்து கலசங்கள் செய்து தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார் அந்த நட்சத்திரம். அந்த ஐந்து கலசங்கள் ராஜகோபுரத்தில் இன்றும் அழகுக்கு அழகூட்டுவதாக அமைந்துள்ளன.

    வேண்டிக் கொள்வது எப்படி?

    அம்பிகையிடம் அம்மைக்காக நேர்ந்து கொள்ளுபவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    சாதாரணமாக அம்மை தோன்றியவுடனே அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. முகத்தில்தான் அம்மை முதலில் தோன்றுவாள். அவற்றை கொண்டே நாட்களைக் கணக்கிட வேண்டும். இரண்டு மூன்று தினங்களுக்குள் நிரபாரமாகிவிடும் அம்பிகை, இரண்டே நாட்களில் இறங்கிவிடுவாள்.

    மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ஏழாம் நாள் கணக்கில் அம்மை இறங்கிய பிறகு தலைக்குத் தண்ணீர் விட வேண்டும். அரிப்பு எடுத்தால் தடவிக் கொள்ள வேப்பிலையைத்தான் உபயோகிக்க வேண்டும். அம்மை கண்டவர்களிடம் வேப்பிலையைப் போட்டு வைத்தால் நோயின் கடுமை அண்டாது.

    அம்மை இறங்கி தண்ணீர் விடும்போது வேப்பிலையையும் மஞ்சளையும் ஒன்றாக்கி அரைத்துத் தடவிவிட்டு, அதன் பிறகு தலைக்கு ஊற்றினால் அம்மைத் தழும்புகள் உடனே மறைந்து போகும்.

    வேப்பிலையை நன்றாகக் கருக்கி வறுத்துக் கஷாயம் செய்து அம்மை கொப்புளங்களைக் கழுவிவந்தால் அந்த புண்கள் ஆறிவிடும்.

    அம்மை போட்டிருக்கும் போதே தாங்க முடியாத சளி கட்டியிருந்தாலோ, கபம் சேர்ந்திருந்தாலோ, அதிமதுர சூரணத்தோடு வேப்பிலைக் கொழுந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் சளி கரைந்துவிடும்.

    அம்மை நோய் வருவதற்கு முன் தும்மல், ஜலதோஷம், தொண்டைக் கட்டு ஆகிய வியாதிகள் வரும். இன்னும் சொல்லப்போனால் அம்மை நோயின் முன்னறிவிப்பே அவை. அப்போது பேயன் பழம், நீர், மோர், இளநீர் ஆகியவற்றை ஆகாரமாகக் கொள்ள வேண்டும்.

    • முண்டகக்கண்ணி அன்னையின் தீர்த்தமும் விபூதியும் அம்மை நோயை குறைத்து விடும்.
    • `கண் பார்வை அளிக்கும் கற்பகமாக' முண்டகக்கண்ணி அம்மன் காட்சி தருகின்றாள்.

    ஓரு ஏழைத்தாய், அவள் குழந்தைக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை. எங்கோ முயன்று பத்து ரூபாயைத் திரட்டிக்கொண்டு அவள் ஒரு டாக்டரிடம் குழந்தையைக் தூக்கிக்கொண்டு ஓடுகின்றாள்.

    குழந்தையை பார்த்த அந்த டாக்டர், `பல சோதனைகளை செய்து பார்த்த பின்னரே மருந்து தரவேண்டும். அதற்கு நிறையப்பணம் செலவாகும். உன்னிடமோ பணம் இருக்காது. எனவே நீ, உடனே எழும்பூரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விடு' என்று கூறிவிடுகின்றார்.

    அந்த தாய் கலங்கினாள். கதறினாள். அவள் வேறு என்ன செய்வாள்? நூற்றுக்கணக்கில் எங்கே சென்று பணத்தை புரட்டுவாள்? துவண்டுபோன தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மனின் சன்னதிக்கு வருகின்றாள். அழுகையும், ஏக்கமும், வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றமும் அவளிடம் சினத்தை எழுப்புகின்றன.

    `ஆத்தா! உன்னைத்தான் நான் எப்போதும் துணையாக நம்பினேன். உன்னைத்தானே எப்போதும் வந்து வணங்கினேன். என் குழந்தையை இப்படி செய்து விட்டாயே? நீதான் காப்பாற்ற வேண்டும். இதற்கு ஏதாவது ஆச்சு என்றால் என்னால் அதைத் தாங்கவே முடியாது' என்று கதறிப் புலம்பியபடியே, அக்குழந்தையை அம்மன் சன்னதியில் கிடத்தினாள்.

    அன்னையின் தீர்த்த பிரசாதத்தை தெளித்தவுடன் அந்த குழந்தை கண்விழித்துப் பார்த்தது. விபூதி குங்குமத்தை பூசியவுடன் நோயின் வேகம் சற்று குறைந்தது. சிறிது நேரத்தில் அதன் நோயின் வேகம் முழுமையாக தணிந்து விட்டது. பழையபடி எழுந்து அது சிரித்து விளையாடத் தொடங்கி விட்டது.

    இப்படி ஓர் அதிசயம் நடந்த இடம் இந்த முண்டகக்கண்ணி அம்மன் கோயில். இதைப் பரவசத்துடன் அன்பர்கள் கூறுவதை இன்றும் கேட்கலாம்.

    அன்னையின் இத்தகைய அதிசய சக்தியை அருளை நினைத்தபடி அவள் முன்னே வந்து நிற்கும்போது, நிற்பவர் உள்ளத்திலேயேயும் ஒரு தெய்வீகச்சுடர் தோன்றி அவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றதையும் காணலாம்.

    வேப்பிலையால் தடவும்போது, அம்மை முத்துக்கள் ஆச்சரியமான வகையில், அகலுகின்றன. வெம்மையும், எரிச்சலும் தீருகின்றன. குளிர்ச்சி உடலிலே பரவி நோயின் கடுமையைக் குறைக்கின்றது.

    இந்த அற்புதங்களை தன்னை நினைத்து வேண்டும் வீடுகளில் எல்லாம் செய்து, அனைவரையும் நலமாக்கி வருபவள் இந்த முண்டகக்கண்ணி ஆவாள்.

    அருமருந்தான அன்னை

    கண்ணிலே அம்மை முத்து வந்தால் மிகவும் கலங்குவார்கள். கண் கெட்டு விடக்கூடாதே என்று எண்ணிப் பரிதவிப்பார்கள். முண்டகக்கண்ணி அம்மையின் தீர்த்தமும் விபூதியும் அந்த கவலையைத் தீர்த்துவிடும். அம்மை நோயைக் குறைத்து விடும்.

    அம்மை நோயின் கொடுமையை தணித்து நலம் செய்வது மட்டும் அல்லாமல், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாகவும் அன்னை முண்டகக்கண்ணி அம்மன் விளங்குகின்றாள். இந்த செய்திகளை பக்தி பரவசத்துடன் பலரும் கூறுவதை கேட்கலாம்.

    வேப்பிலையால் தடவும்போது, அம்மை முத்துக்கள் ஆச்சரியமான வகையில், அகலுகின்றன. வெம்மையும், எரிச்சலும் தீருகின்றன. குளிர்ச்சி உடலிலே பரவி நோயின் கடுமையைக் குறைக்கின்றது. இந்த அற்புதங்களை தன்னை நினைத்து வேண்டும் வீடுகளில் எல்லாம் செய்து, அனைவரையும் நலமாக்கி வருபவள் இந்த முண்டகக்கண்ணி ஆவாள்.

    கண்பார்வை இழந்த ஒருவர், நாற்பது நாட்கள், ஒரு மண்டல காலம் இந்த கோயிலுக்கு வந்து வணங்கி பூசித்து மீண்டும் தம் கண்பார்வை பெற்றுள்ளார். இப்படி அன்னையின் அருளால் பார்வை பெற்றவர்கள் பலருடைய வரலாறுகளை இங்கே கேட்கலாம். `கண் பார்வை அளிக்கும் கற்பகமாக' முண்டகக்கண்ணி அம்மன் இங்கே காட்சி தருகின்றாள் என்பதை இது விளக்கும்.

    பிரசவ வேதனையால் துடிக்கும் பெண்களுக்காக அன்னையை வந்து வேண்டிக் கொண்டு செல்பவர் பலர். இவள் விபூதியை பூசிக்கொண்டதும் அப்பெண்ணின் வேதனை விலகி சுகப்பிரசவம் ஆகிவிடும். தாம் பெற்ற பிள்ளையைக் கொஞ்சி அந்த தாய்மார் மகிழ்வர்.

    எல்லா நோய்களுக்கும் அன்னையின் இத்திருக்கோயிலில் அவருடைய அருட்பிசாதமாக வேப்பிலையும், விபூதியும் நீருமே தரப்படுகின்றன.

    `அம்மா எங்களைப் போன்ற ஏழைகளின் தெய்வம் நீதான். எங்கள் பாரத்தை எல்லாம் உன்மீது போட்டு விட்டோம். நீயே எங்களைப் பார்த்துக் கொள். எங்களுக்கு நோய் நொடி வந்தால் டாக்டரிடம் போவோம். ஆனால் உன் கருணையைத்தான் முழுமையாக நம்புவோம்' என்பவர்கள் பலர் உள்ளனர்.

    • சந்திரனுக்கு அதிதேவதை மகா சக்தியே.
    • அன்னையின் சக்தியானது நெருப்பை போன்றது. தீமைகள் நெருப்பு பட்ட பஞ்சை போல பொசுங்கி போகும்.

    முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளை தாயாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் எப்போதும் இவளுடைய கோவிலில் பெண்களின் கூட்டத்தை மிகுதியாகக் காணலாம். பெற்ற தாயையும் விட மிகுந்த வாஞ்சையுடன் அவர்களுக்கு அம்மன் உதவி மகிழ்விக்கின்றாள்.

    எந்த வகையான குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் இவளிடம் வந்து முறையிட்டால் போதும், அந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடுவாள்.

    பெண்கள் சிறப்பாக புகழுடன் நலமாக வாழ்வதற்கு அன்னை எப்போதுமே அன்புடன் அருள் பாலிக்கின்றாள். அவர்களின் கவலைகளைப் போக்குகின்றாள். அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உதவுகின்றாள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் துணையாக இருந்து, நலம் சேர்க்கின்றாள்.

    பெண்கள் போற்றும் பெருமாட்டியாக விளங்குபவள் இந்த அன்னை! அவர்கள் குழந்தைகளையும் குடும்பத்தாரையும் காப்பவள் இந்த அன்னை! அவர்கள் பக்தியுடன் படைக்கும் பொங்கலையும், செய்யும் வழிபாடுகளையும் ஆசை, ஆசையாக ஏற்று முண்டக்கண்ணி அம்மன் மகிழ்கிறாள்.

    அதனால்தான் விழா நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பெண்கள் இத்தலத்துக்கு மனநிறைவுடன் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    இவளை தொழுது வழிபட்டு, இவளருளால் செல்வ வளமைகளை மிகுதியாகப் பெற்றும் மகிழலாம்.தொழில் வளர்ச்சியும், வியாபார வளர்ச்சியும் அடையலாம். வருமானப் பெருக்கமும் சொத்து சுகங்களும் பெற்று, ஆனந்தம் அடைந்தவர்கள், அடைபவர்கள் பலர்.

    செல்வத்துக்கு மட்டும் அல்ல, செல்வாக்கு பெருக்கத்துக்கும், வெற்றிகளைப் பெறுவதற்கும், வசதியான வாழ்க்கை வசதிகள் அமைவதற்கும், வீடு, வண்டி, நிலம் போன்றவைகளைப் பெறுவதற்கும், நல்ல மனைவியை அல்லது கணவனை அடைவதற்கும் முண்டக்கண்ணி அம்மன் அருள்புரிந்து வருகின்றாள்.

    தோஷங்களை அகற்றிச் சுகம் தருபவள்

    பெண்களுக்கு களத்திர தோஷம் இருந்தால், அவர்களின் திருமணம் தடைப்பட்டு வரலாம். மாங்கல்ய தோஷம் இருந்தால், கணவனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடலாம். புத்திர தோஷம் இருந்தால் குழந்தைப்பேறு இல்லாமல் போகலாம். நாகதோஷம் இருந்தால் குடும்ப வாழ்க்கையே பாதிக்கப்படலாம். இவற்றை எல்லாம் பொதுவாகக் கிரக தோஷங்கள் என்பார்கள். இப்படியே, ஆண்களுக்கும் களத்திர தோஷமும், புத்திர தோஷமும் ஏற்பட்டு குடும்ப வாழ்விலே சுகக் குறைவு ஏற்படக்கூடும்.

    இத்தகைய தோஷம் அமையப்பெற்றவர்கள் முண்டகக் கண்ணி அம்மனைத் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளிலோ, வெள்ளிக்கிழமைகளிலோ வந்து வழிபட்டு வந்தால் இந்த தோஷங்கள் எல்லாம் விலகி, நன்மைகள் ஏற்படும்.

    செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வந்து வழிபடுவது மிகவும் நல்லது என்பார்கள். இப்படி வழிபட்டு வந்த கன்னி பெண்களின் திருமணம் விரைவில் கைகூடியுள்ளது.

    ஜென்ம ராசி அல்லது ஜென்ம லக்கினத்தில் பாவக் கிரகங்கள் வலுத்திருந்தாலும், சப்தம் ஸ்தானத்தில் பாபங்கள் வலுத்திருந்தாலும் திருமணம் சீக்கிரம் நிகழாமல் தடைப்படலாம். நல்ல கணவன் வாய்க்காமல் போகலாம். இந்தத் தோஷத்தில் இருந்து விடுபடவும் அம்பாளைப் பூஜித்து ஏராளமானவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

    பொதுவாகச் சந்திரனை கொண்டே பெண்களின் இல்வாழ்க்கை அமைப்பை மதிப்பிடுவார்கள். சந்திரனுக்கு அதிதேவதை மகா சக்தியே. அவளே முண்டகக் கண்ணி அம்மனாக இங்கே வீற்றிருக்கிறாள். இதை அறிந்து, அனைவரும் அம்பாளைப் பணிந்து பூசித்து நலம் பெற வருகின்றனர்.

    ஏவல்கள் விலகும்

    `மந்திரவாதிகள்' என்று சிலர் இருக்கின்றனர். இவர்கள் சில ஆவிகளையும் தேவதைகளையும் தமக்கு வசப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். இவர்களுக்குப் பணம் தருபவர்களின் விருப்பப்படி இந்த ஆவிகளையும் தேவதைகளையும் அவர்களுக்கு வேண்டாதவர்கள் மீது ஏவி விடுவார்கள். ஏவல், பில்லி, சூனியம் என்று, பல வகையாக இவர்கள் இப்படி ஆவிகளை ஏவித் தீமைகளை ஏற்படுத்துவார்கள்.

    இவ்வாறு ஆவிகளாலோ, துஷ்டதேவதைகளாலோ, பில்லி சூனியங்களாலோ பாதிக்கப்பட்டவர்களை மயிலை முண்டக்கண்ணி அம்மன் சன்னிதிக்குஅழைத்து வந்தால்போதும். அம்மனின் தீர்த்தத்தை இவர்கள் மேல் தெளித்து, திருநீறு பூசினால் போதும். இந்த வகை தொல்லைகள் அனைத்தும் இந்த அம்மன் அருளால் விலகி விடுகின்றன.

    `மகா சக்தியான இந்த முண்டக் கண்ணி அம்பாளின் சினத்துக்கு ஆளாக நேரிடும்' என்று அவை மிகவும் அஞ்சுகின்றன. அன்னையின் சினத்தால் தாம் துன்புற நேரிடும் என்று அஞ்சி நடுங்குகின்றன. தாம் பற்றியவர்களை விட்டுவிட்டு விலகி ஓடி விடுகின்றன.

    இந்த அன்னையின் சக்தியானது நெருப்பை போன்றது. இவள் பார்வையில் பட்ட தீமைகள் நெருப்புப்பட்ட பஞ்சைப் போலப் பொசுங்கிப் போகும். இவள் பார்வையின் எல்லைக்குள் எந்த தீய சக்தியும் நுழைய முடியாது. அவள் அனுக்கிரகம் உள்ளவர்களிடம் தீய சக்திகள் நெருங்கவே நெருங்காது.

    எனவே, இந்த அன்னையின் அருளை நினைப்பவர்களை எந்தப் பாதிப்பும் அணுகாது. முன்னர் அணுகியவையும் இவள் திருநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க விலகி விடும்.

    ஆவிகளைக் கண்ணால் காண முடியாது. அவற்றின் பாதிப்பை அகற்றவும், கண்ணுக்குப் புலனாகாத ஒரு மகா சக்தியின் துணையை பெற வேண்டும். இப்படித் துணை செய்யும் சக்தி கனலாக அன்னை முண்டகக்கண்ணி திகழ்கிறாள்.

    ×