search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton paya"

    • மூட்டை மூட்டையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்.
    • நோய் பாதிப்புக்குள்ளாக்கும் பாக்டீரியாக்களால் ஆபத்து.

    ஆட்டுக்கால் பாயா... அசைவ பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் இந்த உணவு ஓட்டல்களில் அதிகம் விற்பனையாகும் உணவு வகைகளிலும் முதலிடத்திலேயே உள்ளது.

    இடியாப்பத்தை பாயாவில் பிசைந்து சாப்பிடுவது தனி ருசியை தரும். பரோட்டா மற்றும் சாதத்துடனும் பலர் ஆட்டுக்கால் பாயாவை சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு.

    சென்னையில் சமீப காலமாக கெட்டுப்போன இறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடத்தி வரப்பட்ட 1,700 கிலோ கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை மூட்டை மூட்டையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    இது "ஆட்டுக்கால் பாயா" பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கெட்டுப்போன ஆட்டுக்கால்களை ஆய்வு செய்து பார்த்த போது அதில் நோய் பாதிப்புக்குள்ளாக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மாதக் கணக்கில் எந்த வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி குடோனில் மூட்டையாக போடப்பட்டிருந்த ஆட்டுக்கால்கள் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒரு வேளை இந்த கெட்டுப்போன ஆட்டுக் கால்கள் ஓட்டல்களில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டிருந்தால் அதனை சாப்பிட்டவர்கள் கடுமையான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.

    கெட்டுப் போன இறைச்சிகளை சமைக்கும் போது உணவும் கெட்டுப் போய்விடும். சில நேரங்களில் நாம் ஓட்டல்களில் சாப்பிட்டதும் வயிறு உப்பிக் கொண்டு வலி ஏற்படும். பின்னர் வாந்தி வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

    அந்த வகையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை வைத்து சமைக்கப்படும் ஆட்டுக்கால் பாயா விஷமாகும் ஆபத்தும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது போன்ற பாயாக்களை சாப்பிட்டால் அதிக அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்சத்து குறைந்து உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஓட்டல் உணவுகளில் எப்போதுமே கவனம் தேவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×