என் மலர்
நீங்கள் தேடியது "Nagpur Violence"
- ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
- "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மகாராஷ்டிரா அரசியலில் மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மகன் சத்ரபதி சாம்பாஜி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சாவா" என்ற திரைப்படம் வெளியானது முதல் ஓரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்து அமைப்புகளான பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகியவை மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து ஔரங்கசீப் கல்லறை அமைந்துள்ள சாம்பாஜி நகர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்படி ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மேலும், இது தொடர்பாக வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதையடுத்து இஸ்லாமியர்களை கொதிப்படைய செய்தது. இதனால் அவர்கள் மகால், கோட்வாலி, கணேஷ்பேத் மற்றும் சித்னாவிஸ் பூங்கா என பல்வேறு பகுதிளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமுற்றனர். இந்த மோதல் நாக்பூரின் ஹன்சாபூரி பகுதியிலும் பரவியது.
அடையாளம் தெரியாத நபர்கள் கடைகளை அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், இந்த பகுதியிலும் கல்வீசி தாக்குதல் நடந்தது. நாக்பூர் முழுக்க மோதல்கள் அரங்கேறி வருகிறது.
வன்முறையை தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். வன்முறையை தொடர்ந்து காவல் துறையினர் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் காரணமாக வன்முறை நடந்த பகுதிகளில் அதிகாரிகள் சிசிடிவி வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க காவல் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.