என் மலர்
நீங்கள் தேடியது "namperumal festival"
- நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
- இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.
திருச்சி:
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.
விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.
இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவர் வெண்ணிற பட்டு புடவை அணிந்து, வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு, கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
மேலும் சவுரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி, காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து, மூக்குத்தி அணிந்து காட்சி தந்தார். மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.
மேலும் நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்களுடன் கம்பீரமாக் காட்சி அளித்தார்.
வடியில் தங்க சதங்கை, தண்டைகளும், பின்புறம் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை, ராக்கொடி அணிந்து, திருக்கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூர்ய பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தார்.
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மோகின் அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.
2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
அதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ரங்காரங்கா கோஷம் முழங்க அரங்கனை பிந்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள்.
பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
ராப்பத்து பெருவிழாவின் 7ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா நிறைவு பெறும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரிவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடிசேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கிருந்து புறப்பட்டு சாத்தாரவீதி வழியாக வலம் வந்து இரவு 9.30 மணியளவில் சந்தனுமண்டபம் சேர்ந்தார். பின்னர் 10 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுதுபாறையில் திருமஞ்சனம் கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 10-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. அன்று முதல் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார். விஜயதசமியான நேற்று இரவு 7.30 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இதேபோல இனாம் சமயபுரத்தில் உள்ள அய்யாளம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளிய அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு கோவில் பூசாரி சுரேஷ்குமார் தலைமையில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் விஜயதசமியையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கோவிலின் கிழக்கு வாசல் அருகே எழுந்தருளினார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன், சப்தகன்னிமார், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும். பொன்னர், குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா முக்கிய திருவிழாவாக கருதப்படும்.
இதற்கு அடுத்தபடியாக மகாநோன்பு திருவிழா நடைபெறும். இந்த திருவிழா நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை அன்று தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் வழக்கப்படி வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து முரசு கொட்டும் சாம்புவன் காளை முன்னே செல்ல அதைத்தொடர்ந்து ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் செல்ல, குதிரை வாகனத்தில் குதிரை பூசாரி மாரியப்பன் பொன்னர் தெய்வத்துடன் நின்று வர, அதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் பெரிய பூசாரி முத்து மகன் செல்வம் பெரியகாண்டியம்மன் அருகில் கரகப்பூசாரி மணி என்ற வீரமலை தங்காள் கரகம் சுமந்து செல்ல வேடபரி புறப்பட்டு பெரியகாண்டியம்மன் கோவில் எதிர் திசையில் உள்ள தேவரடிக்காடு என்ற இடம் சென்றது.
அங்கு யானை வாகனத்தில் இருந்து பெரியகாண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை மரத்தில் அம்பு எய்ததும் தரையில் தண்ணீர் விழுந்த மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர். திருவிழாவில் வீ.பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் புறப்பட்டு நாகநாதர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.