search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nani arrested"

    போலீஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து வீடியோ கருத்து வெளியிட்டு தலைமறைவாக இருந்த டி.வி. நடிகை நிலானியை குன்னூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் நிலானி. டி.வி. நடிகையான இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். ஒரு தொலைக்காட்சி தொடருக்காக போலீஸ் சீருடையில் படப்பிடிப்பில் இருந்த இவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர், “நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அமைதியான வழியில் போராடியவர்களை சுட்டுக்கொன்று உள்ளனர். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த போலீஸ் உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இந்த சீருடை அணிய உடம்பு கூசுகிறது” என பேசி இருந்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நிலானி அதிகம் பிரபலம் இல்லாததால் நிஜ போலீஸ் அதிகாரிதான் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் போலீஸ் உடையில் கருத்து தெரிவித்தவர் டி.வி. நடிகை என்பது பலருக்கும் தெரியவந்தது.

    இது குறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் தனக்கு முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு கொடுத்து இருந்தார். வளசரவாக்கத்தில் தங்கி இருந்த நிலானி, போலீசார் தேடுவதால் கரூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு கோயம்புத்தூர், குன்னூரில் உள்ள நண்பர்கள் வீட்டில் இருந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது நண்பர்களுடன் செல்போனில் பேசினார்.

    இதன் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனைதொடர்ந்து வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று குன்னூர் சென்றனர். பின்னர் அவர்கள் நிலானியை கைது செய்து குன்னூர் வெலிங்டன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    அதன்பிறகு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக நிலானியை போலீசார் சென்னைக்கு அழைத்துவந்தனர். 
    ×