search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narikkuvars"

    • சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த இவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூரை சேர்ந்த நரிக்குறவர்கள் விண்ணப்பித்த போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து நரிக்குறவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது நரிக்குறவர்கள் சிலர் சூழ்ந்து பட்டாகேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து அவரது காலில் விழுந்து கதறினர். அப்போது அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×