search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Wildlife Board"

    • தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
    • கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.

    தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

    ×