என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New railway bridge"

    • 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார்.
    • பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    சென்னை:

    பழைய பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது.

    இதற்கிடையே, பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் 'தூக்கு பாலத்தில்' அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    பின்னர், பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி புதிய ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டது.

    இதையடுத்து, புதிய ரெயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை.

    ரெயில்வே பாலப் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறந்துவைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, பாம்பன் புதிய ரெயில்வே பாலம் மத்திய அரசின் கனவு திட்டம் என்பதால் அதை பிரதமர் மோடி மட்டுமே திறந்து வைப்பார் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். கடந்த 23-ந்தேதி தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், ரெயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

    இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
    • பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.

    ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.

    இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.

    ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.

    பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.

    இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

    அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதமே திறப்பு விழாவை நடத்த ரெயில்வே நிர்வாகம் தயாரானது. ஆனால் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா நடத்துவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

    இப்போது இந்த பாலத்தை பிரதமர் மோடி திறப்பது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) திறப்பு விழா நடக்கிறது.

    திறப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா உள் ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ராமேசுவரம் வந்தனர். இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். பின்னர் பாம்பன் பாலத்தில் நின்று புதிய, பழைய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாவது:-

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் திறப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரே ராமேசுவரம் ரெயில் நிலையப் பணிகள் முடிவடையும் என்றார்.

    மீண்டும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

    திறப்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் செய்யப்பட வேண்டிய விரிவான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் கட்டிட வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்த இடத்தில் மேடை அமைப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் மண்டபம் பொதுப் பணித்துறை ஹெலிபேட் தளம், குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷார் தலைமையிலான ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் 5-ந்தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் இலங்கை அதிபருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பயணத்தின்போது அவர் பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்க வரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பயணத்துடன் இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் பிரதமர் மோடி ராமேசுவரம் வருவதை உணர்வுப் பூர்வமாக கருதக் கூடியவர். காசியை போல் ராமேசுவரத்துக்கு செல்வதையும் புனித பயணமாக கருதுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராமேசுவரம் வந்தபோது அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்கினார். அப்போது மெத்தையில் தூங்குவதை கூட தவிர்த்து தரையில் பாயில் படுத்து உறங்கினார். மறுநாள் ராமநாதசாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார்.

    எனவே இந்த முறையும் ராமேசுவரம் வருகையை தனித்துவமாக இருப்பதையே விரும்புவார். எனவே அடுத்தமாதம் (ஏப்ரல்) 3-வது வாரத்தில் பால திறப்பு விழாவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த மாத இறுதிக்குள் தேதி உறுதியாகி விடும் என்றார்கள்.

    • புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
    • பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய ரெயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர்.

    இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் வந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் பழைய பாலத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சென்று, புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.

    ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும்" என்றார்.

    • பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.

    இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தற்போது பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 650 டன் கொண்ட தூக்கு பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தை திறந்து மூட இருபுற எடையும் சமமாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தூக்கு பாலத்தில் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களாக 600 டன் இரும்பு பட்டைகளை அதி நவீன கிரேன் மூலம் ஏற்றும் பணி கடும் சிரமத்திற்கிடையே நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    600 டன் இரும்பு பட்டை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என ரெயில்வே என்ஜீனியர்கள் தெரிவித்தனர். அதன்பின் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    ×