search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Species of Flies"

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2 டப்பாக்களில் புதிய வகை ஈக்களை பிடித்துக்கொண்டு மனு கொடுக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையை அகற்றும்படி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது கோழிப்பண்ணையில் இருந்து புதிய வகை ஈக்கள் உற்பத்தியாகி காற்றின் மூலம் பரவி வருகிறது.

    மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து உணவுகளில் விழுவதால் உணவை உண்ண முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் தூங்கும்போது காதில் ஈக்கள் புகுந்து விடுகிறது. கடிப்பதால் அரிப்பு ஏற்படுகிறது. காய்கள் மற்றும் கீரைகளை சேதம் செய்கிறது.

    கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோழிப்பண்ணையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கோழி இறகுகள் காற்றில் அதிகமாக வருகிறது.

    சின்னக்காம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் மனுக்களை கண்டு கொள்வதில்லை. எனவே இந்த கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஈக்களை பரவலை கட்டுப்படுத்த வேண்டும் .

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×