search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuns"

    ஜலந்தர் பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaNuns #bishop
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அங்குள்ள கான்வென்டில் பணிபுரிந்து வருகிறார்.

    அவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அதே கான்வென்டில் பணிபுரியும் 5 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பி‌ஷப்பை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 5 பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களை பழிவாங்கவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜலந்தர் திருச்சபை தலைவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான நீனா ரோஸ், திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், திருச்சபை மரபை மீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட 5 கன்னியாஸ்திரிகளும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரியும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaNuns  #bishop
    திருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் துறவிகளாக மாறுகிறார்கள். இவர்களை வழியனுப்பும் விழா மீனாட்சி திருமண மண்டபத்தில் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. #nuns

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபர்களான கவுதம்குமார், அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள்.

    கவுதம்குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் பிரெக்ஷா (வயது 26). அரவிந்த் குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் ஸ்வேதா (26). பிரெக்ஷாவும், ஸ்வேதாவும் ஜெயின் மதத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளனர்.

    இதுகுறித்து 2 பேரின் தந்தையும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்களது மகள்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். பிரெக்ஷா எம்.பி.ஏ. படித்துள்ளார். ஸ்வேதா சி.ஏ. படித்துள்ளார்.

    இருவரும் 22 வயது இருக்கும்போது ஜெயின் மதத்தில் துறவரம் போகப்போவதாக கூறினர். நாங்கள் அதை முதலில் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் துறவரம் செல்வதிலேயே உறுதியாக இருந்தனர். எங்களது கண்ணீர் அவர்கள் மனதை மாற்றவில்லை. அன்பாகவும், மிரட்டியும் பார்த்தோம் எனினும் அவர்கள் இருவரும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

    துறவரம் செல்வது என்பது சாதாரண வி‌ஷயம் அல்ல... அதில் முள்பாதைகள் அதிகம், கட்டுப்பாடுகள் அதிகம் என்று குடும்பத்தினர் எடுத்துக்கூறியும் அவர்கள் தங்களது முடிவை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டோம். முதலில் வேதனையாக இருந்தது. பின்னர் அதை நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். துறவரம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான எம்.ஏ.ஜெயினினாலஜி படிக்க வேண்டும். அவர்களை ராஜஸ்தானில் உள்ள மத கல்லூரியில் சேர்த்தோம். 3 ஆண்டுகள் 8 மாதம் படித்தனர். படிக்கும் போது அவர்களின் மனநிலையை மூத்த துறவிகள் ஆராய்ந்து இருவரும் துறவரத்திற்கு தகுதியானவர்கள் என்று சான்று அளித்தனர்.

    ஜெயின் மதத்தில் துறவிகள் ஆக வேண்டும் என்றால் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தங்களது துணிகளை தாமே சுமக்க வேண்டும். எங்கு சென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்ணக்கூடாது. 3 ஆடைகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

    குடும்பத்தினருடன் பாசப்பிணைப்பு இருக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒருமுறை தங்களது தலைமுடியை தாங்களாகவே எடுத்துவிட வேண்டும். வெயிலோ, மழையோ, குளிரோ வேறு உடைகளை அணியவே கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. இவை அனைத்தையுமே எங்களது மகள்கள் ஏற்றுக்கொண்டனர். சிறுவயதில் இருவரும் பெண் துறவிகளுக்கு சேவகம் செய்யும் போது, துறவி ஆக வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது.

    இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கு மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் உள்பட பலர் வருகை தர உள்ளனர். முன்னதாக ஊர்வலம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் முதன் முறையாக ஜெயின் மதத்தில் துறவரம் செல்வது இவர்கள் தான். இதையடுத்து நவம்பர் மாதம் 11-ந் தேதி சென்னை மாதவரத்தில் இவர்களின் குரு ஆச்சார்யா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மிக வாழ்க்கையில் பயணம் செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #nuns

    ×