என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palaverkadu"

    தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பழவேற்காடு பகுதியில் ரஜினி ரசிகர்கள் வாகனங்களில் குடிநீர் கொண்டுவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
    பொன்னேரி:

    பழவேற்காட்டில் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மெதூர் கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் வாரம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வருவாய் இன்றி தவித்து வரும் மீனவ குடும்பத்தினர் தற்போது குடிநீருக்காக மட்டும் நாளொன்றுக்கு 100 ரூபாய் வரை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசிகள் தடையில்லா குடிநீர் வழங்கக்கோரி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அறிந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பழவேற்காடு மக்களுக்கு குடிநீர் வழங்க அவரது மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து தற்போது பழவேற்காடு பகுதியில் ரஜினி ரசிகர்கள் வாகனங்களில் குடிநீர் கொண்டுவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். இதேபோன்று மற்ற பகுதிகளிலும் குடிநீர் வழங்கப்படும் என ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    ×