search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palladam Bus Stand"

    • தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன. இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
    • குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:-

    பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் குட்டையில் பி.ஏ. பி. பாசன தண்ணீர் நிறைந்துள்ளது. அங்குள்ள மயானத்திற்கு செல்வதற்கு வழி இல்லை .எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜசேகரன், (தி.மு.க.):- குடியரசு தின விழாவில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக இருக்கை வசதி செய்யப்படவில்லை.எனவே வரும் காலங்களில், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளித்து இருக்கை வசதி செய்யப்பட வேண்டும். பல்லடம் பஸ் நிலையம் முன்பு உள்ள சுகாதார வளாகம் அசுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதேபோல பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராததால், பொதுமக்கள் ரோட்டில் நின்று பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ்கள் உள்ளே வராததால் வியாபாரம் பாதிப்படைவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் விநாயகம் :- இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈஸ்வரமூர்த்தி,( காங்கிரஸ் ):-நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிப்பதை தனியாருக்கு விடும் திட்டத்தில், உள்ளூர் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. கரையாம்புதூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சரி செய்ய வேண்டும்.

    கனகுமணி துரைக்கண்ணன்,(அ.தி.மு.க.):- ராயர் பாளையம் பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அபிராமி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும்.மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

    ஈஸ்வரி செல்வராஜ்,( பாஜக) :எனது வார்டு பகுதியில் சப்பை தண்ணீர் சரி வர வருவதில்லை. கடந்த ஆறு மாதமாக கேட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. குழாய்கள் தரம் இல்லாமல் அமைப்பதால் அடிக்கடி உடைந்து விடுகிறது.

    நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு:- குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்டபாணி,( சுயேச்சை): வடுகபாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சப்பை தண்ணீரும் முறையாக வருவதில்லை. ஏற்கனவே ஆழ்குழாய் கிணறு அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்தேன். மேலும் வரிவசூலில் வாட்டர் மேன்களை ஈடுபடுத்துவதால், குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க தாமதம் ஆகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சசிரேகா ரமேஷ் (பாஜக):- குடிநீர் பிரச்சினை தீவிரமாக உள்ளது. முன்பு மாதம் ஒருமுறை குழாய் உடைப்பு ஏற்படும். தற்போது மாதத்திற்கு 10 லிருந்து 12 முறை ஏற்படுகிறது. அதனை உடனடியாக சரி செய்வதற்கு பணியாளர்களும் வருவதில்லை. கேட்டால் வரி வசூலில் ஈடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள். குழாய் உடைப்பு பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொறியாளர் ஜான் பிரபு:- சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. விரைவில் சரி செய்யப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட4வது வார்டு உறுப்பினர் சவுந்தரராஜன், எதுவும் பேசாமல் கூட்டத்தின் பாதியில் எழுந்து சென்றார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,நகராட்சி நிர்வாகத்தில், பலமுறை, பல கோரிக்கைகள் வைத்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த கூட்டத்தில் பேசி என்ன பயன் இருக்கப் போகிறது என கூறினார்.பின்னர் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை அமைந்துள்ள இடம், வண்டிப்பாதை,கிணறு, மயானம் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. எனவே,அதனை நில வகை மாற்றம் செய்து, பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என மாற்றம் செய்ய வருவாய்த் துறையை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது.
    • கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.இந்த நிலையில் இந்த பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ள சுகாதார வளாகம சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கட்டடத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்புத் தகடுகளிலான தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி தாட்கோ நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் நகராட்சிக்கு அந்த இடத்தை ஒப்படைத்தால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம், சுகாதார வளாகம் போன்றவை அமைக்க இடம் தேவைப்படுகிறது என பலமுறை தாட்கோ நிறுவனத்திற்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தி கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை,திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால், பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று உடுமலையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து உடுமலை செல்வதற்காக பல்லடம் பஸ் நிலையம் வந்துள்ளார். உடுமலை பஸ் ஏறுவதற்கு முயன்ற போது இவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் திருடிவிட்டார். இவர் சட்டைபையை தொட்டுப் பார்த்தபோது செல்போன் இல்லை.

    இதைத்தொடர்ந்து படிக்கட்டில் நின்றிருந்த ஒருவர் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார். உடனே இவரும் இறங்கி அவரைப் பிடித்து எனது செல்போனை கொடு என கேட்டபோது, அவர் நான் எடுக்கவில்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்-பக்கம் உள்ளவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும், இது போன்ற செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்எனஅவர்கள் தெரிவித்தனர்.

    • கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
    • போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில், நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்தும், பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் நிறுவவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 18ந்தேதி" மாலைமலர் "நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர். அதன்படி பல்லடம் பஸ் நிலையம் மற்றும் அம்மா உணவகம் பகுதியில் ரூ.1லட்சத்து15 ஆயிரம் மதிப்பில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் போலீசார்,நகராட்சி நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், திமுக. நிர்வாகிகள் ஜெகதீஷ்,நடராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.
    • நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பஸ் நிலையம். பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை, எனக்கூறி, நேற்று நகராட்சி நிர்வாகத்தினர் 17 கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.

    இதுகுறித்து பஸ்நிலைய கடை உரிமையாளர்கள் கூறியதாவது. "கொரோனா " ஊரடங்கின் போது சுமார் 6 மாதங்களுக்கு மேல், கடைகள் திறக்கப்படவில்லை மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு முழுமையாக கடைகள் செயல்படவில்லை, இந்த நிலையில், பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சரிவர வருவதில்லை, இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம், தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, உரிமம் புதுப்பிக்க கடை வாடகை உடன் 15 சதவீதம் வாடகையை உயர்த்தி கட்ட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏற்கனவே உள்ள வாடகை கட்ட முடியாமல் விழி பிதுங்கிய நிலையில் உள்ளோம். இந்த நிலையில் வாடகை உயர்த்தி கட்டுவது என்பது எங்களால் முடியாத காரியம் எனவே நகராட்சி நிர்வாகம், எங்களது வாழ்வாதாரத்தை மனதில் வைத்து கொரோனா கால ஊரடங்கின் போது வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்,மேலும் கடைகளின் வாடகையை குறைக்கவும், இரவு 7மணிக்கு மேல் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது. கடை உரிமம் 31.7.22 அன்று முடிவடைகிறது. உரிமம் புதுப்பிக்க கோரி கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கு அறிவுறுத்தியும், உரிமம் புதுப்பிக்க வில்லை, நிலுவையில் உள்ள வாடகையும் செலுத்தப்படவில்லை, அதனால் கடைகள் பூட்டப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டப்பட்டதால், பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டனர்.

    ×