என் மலர்
நீங்கள் தேடியது "Pamban Railway Bridge"
- அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
- அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாராவதி கடல் பகுதியில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மீட்டர் கேஜ் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இரு பகுதியிலிருந்து திறந்து மூடும் வகையில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள இந்த பாதையில் ரெயிலில் செல்வதை வாழ்நாள் கனவாகவும் கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த பாலம் 106 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது மற்றும் சேதம் காரணமாக தொடர்ந்து அந்த பாதையில் ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆண்டு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் பாம்பன் ரெயில் பாலம் கட்டுமான பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர். இதன் பின்னர் பணிகள் தொடங்கியது. தற்போது மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதேபோன்று பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்கி இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம் 500 டன் எடையை கொண்டுள்ளது.
இந்த பாலம் முழுமையாக பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு கொண்டு செல்லுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.
அதன் எதிரொலியாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
- கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
- தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.
மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டி, அதன் மீது 145 கர்டர்கள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது ரெயில்கள் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட இரும்பு கர்டர்கள் லாரி மூலம் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று புதிதாக இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் பாலத்தில் தூண்களின் மீது இருந்த பழைய இரும்பு கர்டர்கள் கிரேன் மூலம் முதலாவதாக அகற்றப்பட்டது. அதன் பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக புதிய கர்டரானது பாலத்திற்கு தொழிலாளர்களால் இழுத்து கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு கிரேன் மூலமாக புதிய கர்டரானது பாலத்தில் பொருத்தப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் ரெயில் பாலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பாலத்தில் 44 கர்டர்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது மேலும் 27 கர்டர்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 10 கர்டர்கள் மட்டுமே தான் புதிதாக அமைக்கப்படவுள்ளன. நேற்று தொடங்கிய இப்பணி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புதிய கர்டர் சீரமைப்பு பணிகளையொட்டி வருகிற 30-ந்தேதி வரை திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டு, பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயிலை தவிர மற்ற அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் ராமேசுவரம் வரை வந்து செல்லும் என்றார்.