search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panturi"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காலனிசுடுகாடு அருகே கெடிலம் ஆற்றங்கரையோரம் 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில், அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடந்தார். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசுக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் குமரய்யா, தாசில்தார் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

    பிணமாக கிடந்த வாலிபரின் தலை நசுக்கப்பட்டிருந்தது. கையில் அரிவாள் வெட்டு இருந்தது. வலது கையில் ஸ்வஸ் த்திக் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது உடல் முழுவதும் என்ஜீன் ஆயில் ஊற்றப்பட்டிருந்தது. பிணமாக கிடந்தவர் யார்? எந்தஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    போலீஸ்சூப்பிரண்டு விஜயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். முதற்கட்ட விசாரணையில் வாலிபர் தலையில் கல்லைபோட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கொலையை மறைப்பதற்காக உடலில் என்ஜின் ஆயில் ஊற்றி எரிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.

    செம்மேடு சுடுகாடு அருகே இதற்கு முன் ஏற்கனவே வெளியூரை சேர்ந்த ஒருவரை கொலை செய்து இங்கு வந்து போட்டுவிட்டு தப்பிய சம்பவம் நடந்தது. அதேபோல் தற்போதும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த நபரை யாரேனும் கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவரா? அல்லது உள்ளூரை சேர்ந்தவரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செம்மேடு பகுதியில் மணல் திருட்டு அடிக்கடி நடைபெறுகிறது. எனவே மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் யாரேனும் வாலிபரை கொலை செய்தனரா? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    இந்த கொலை தொடர்பாக செம்மேடு மற்றும் ஏரிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களில் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களின் விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×