என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parents"

    • உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது.
    • எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம்.

    நம் குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அவசியம். 

    அனுபவங்களின் வழியாகக் கற்றுக்கொள்பவையே குழந்தைகளின் கேரக்டரை வடிவமைக்கின்றன. பிறந்தது முதல் ஆறு வயது வரை மனதில் விதைக்கப்பட்ட விஷயங்களே வளர்ந்து, அவர்களை வாழ்க்கை முழுக்க வழிநடத்துகின்றன.

    இந்த வயதில் நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் எதிர்க் கேள்வியின்றி கேட்டுக்கொள்கிறார்கள். நாம் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

    * குழந்தைகளுக்கு முதலில் பழக்கப்பட வேண்டியது பல் துலக்குவதைப் பற்றியே. ஆரம்பத்தில் இதற்கென நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டும். நீங்கள் அவர்கள் முன் பல்லைத் தேய்த்துக் காட்டுங்கள். அதற்கு முன்பு நீங்கள் பல்தேய்க்கும் முறை சரிதானா என்பதை பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாம் சரியாகச் செய்தால்தான் குழந்தைகளுக்கும் அந்த முறை கைக்கூடும்.

    * எந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதும் அதை எதற்காகச் செய்கிறோம். செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் விளக்கமாகச் சொல்லவும். குறிப்பாக, ஏன் இரண்டு வேளை குளிக்க வேண்டும், அப்படிக் குளிப்பதால் என்ன நன்மை என்பதைச் சொல்லலாம். குளிப்பதையே ரசனையான அனுபவமாக மாற்றலாம். குளித்த பிறகு மனமும் உடலும் அடையும் உற்சாகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யலாம்.

    * மிகச் சிறு வயதிலேயே தானாகச் சாப்பிடுவது, உடுத்துவது, தூங்குவது என எல்லாவற்றையும் திணிக்காமல் அவர்களிடம் அனுமதி கேட்கலாம். எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம். அந்தக் கேள்விகளின் வழியாகவே, குழந்தைகளின் கற்றல் துவங்குகிறது. எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர் பழக்கப்படுத்தலாம்.

    * பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுவதும் பள்ளிக்குக் கிளம்புவதும் போர்க்கோலமாக இருக்கும். இது அவ்வளவு சிக்கலான விஷயமில்லை. தூங்கப்போகும் முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடுத்த நாள் வேலைகள், அதற்கான நேரத் திட்டமிடல் பற்றிப் பேச வேண்டும். பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் எனில், உங்கள் குழந்தை எந்த நேரத்தில் எழுந்து என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், எல்லோருக்குமே காலை நேரம் இனிமையாக மாறும்.

    * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்கடன் கழிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல்விடுவதே பல நோய்களுக்குக் காரணம். காலை வேளையில் இதற்கான நேரமும் அவசியம். சிறுநீர் மற்றும் காலைக்கடன் கழிப்பதை அடக்குவதால், உடல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். தினமும் குழந்தைகள் எழுந்ததும் மிதமான சூட்டில் சுடுநீர் கொடுத்து பத்து நிமிடம் கழித்துக் குளிக்க வைத்தால், காலைக் கடன் பிரச்னை என்பது இருக்கவே இருக்காது.

    * தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்து வாயை மூடிக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தைகளின் இந்தச் செயல்களைப் பார்த்து, அந்தப் பழக்கம் இல்லாத பெரியவர்களும் மாறிக் கொள்வார்கள்.

    * விடுமுறை நாள்களில் வீடு, டாய்லெட் சுத்தம் செய்வது, தேவையற்ற பொருள்களைத் தேடிப்பிடித்துக் கழிப்பது போன்றவற்றையும் அவர்களுடன் இணைந்து செய்வது அவசியம். தனது இடத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர இது வாய்ப்பாக அமையும்.

    * உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது. உணவு தயாரிக்கும்போது சின்னச் சின்ன வேலைகளிலும் குழந்தைகளின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவு டைனிங் டேபிளுக்கு வருவதற்கு முன்பு அதற்காகச் செய்த உழைப்பைக் குழந்தைகள் புரிந்துகொள்ளச் செய்தால், உணவை வீணாக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

    • நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை.
    • குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.
    • குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும்.

    நாய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு பிடித்தது, நன்கு புசு... புசு... என்று இருக்கும் நாய்கள் தான். குறிப்பாக இந்த மாதிரியான நாய்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த வகை நாய்களுக்கு ரோமமானது அதிகமாக இருக்கும். ஆகவே இவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போலவே இருப்பதால், அவற்றுடன் குழந்தைகள் நன்றாக விளையாடுவார்கள். அதேபோல கோல்டன் ரிட்ரைவர், லாப்ரடார், பூடில், சிஸ்டூ, கோமண்டர், கோம்பை... போன்ற நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை. இவற்றால் குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தைகளுடன் விளையாடக்கூடிய நாய் இனங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..!

    1. சிஸ்டூ (shiz tuz)

    இந்த வகை குட்டி நாய்கள்தான், குழந்தைகளின் செல்லப்பிராணி பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. இவை அழகானவை. துறுதுறுவென இருப்பவை. பிடித்து விளையாடும் அளவிற்கு, முடிகள் வளர்வதால் குழந்தைகளின் சிகை அலங்கார விளையாட்டிற்கு ஏற்றவை. வீட்டில் வளர்ப்பது தொடங்கி, வாக்கிங் அழைத்துச் செல்வது, கடற்கரையில் விளை யாடுவது, வெளி இடங் களுக்கு சென்றால் கையோடு தூக்கிச் செல்வது... என எல்லா வகையிலும், இது 'பெஸ்ட் சாய்ஸ்'.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

    2. பூடில் (poodle)

    இதுவும், குட்டியாக இருக்கும் நாய்தான். சிஸ்டூ அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் நிறைய வீடுகளில் பூடில் வளர்கிறது. சிஸ்டூவின் செல்ல சேட்டைகள், எல்லாமும் இந்த பூடில் நாய் இனத்திலும் எதிர்பார்க்கலாம். குழந்தை களோடு விளையாடுவது, பாசம் காட்டுவது... என உயிருள்ள விளையாட்டு பொம்மை போல இது செயல்படும்.

    விலை: ரூ.40 ஆயிரத்தில் தொடங்குகிறது

    3. கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)

    இவை வெளிநாடுகளில், பெரும்பாலான குடும்பங்களில் வளர்க்கப்படும் வகை. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரிடமும் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்த நாயின் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், இது மிகவும் அழகாக புசு... புசு.. என்று இருக்கும். இவை ரிட்ரைவர் வகையை சார்ந்தவை. அதாவது ஏதாவது ஒரு பொருளை தூக்கி எறிந்தால், அதை தேடி சென்று கவ்விக் கொண்டு வந்து நம்மிடமே சேர்த்துவிடும்.

    விலை: ரூ.15 ஆயிரத்தில் தொடங்குகிறது

    4. லாப்ரடார் (Labrador retriever)

    இது ரொம்பவும் கிளாசிக் நாய் இனம். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நாய் என்று சிந்தித்தாலே, இந்த லாப்ரடார் ரிட்ரைவர் வகைகள்தான், முதலில் நினைவில் தோன்றும். வெள்ளை, கருப்பு வண்ணங்களில் இவை பெரும்பாலான வீடுகளில் வளர்ந்து வருகிறது.

    விலை: ரூ. 7 ஆயிரத்தில் தொடங்குகிறது

    5. கோம்பை (kombai)

    இது நம் தமிழ்நாட்டின் அடையாளம். நாட்டு நாய்களில் இதுவும் ஒன்று. மற்ற எல்லா நாட்டு நாய்களை விடவும், இவை குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும். பாசமாக பழகும். குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி, விசுவாசமாக இருக்கும்.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் தொடங்குகிறது

    • காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம்.
    • விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது.

    பாரம்பரியம் என்பது தொன்றுதொட்டு வருவது ஆகும். அதனை நாம் காக்க வேண்டும். பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் பாரம்பரியத்தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. அந்த பாரம்பரிய நிகழ்வு நடத்தப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரியாத நிலையிலும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். இந்த நிலையில் பாரம்பரிய நிகழ்வின் உண்மையான காரணம் அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

    அப்படி தெரிந்து கொண்டு பாரம்பரிய நிகழ்வை கொண்டாடுவது தான் சரியானதாக இருக்கும். அதோடு எதிர்கால தலைமுறைக்கும் சரியான வழியை காட்டியதாக இருக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு காலமாற்றம் என்பது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு வருகிறது. அதில் பல நேரங்களில் நாம் பலியாகி விடுகிறோம். எந்த காரணமும் இல்லாமல் நாகரிகம் என்ற பெயரில் பல நல்லவனவற்றை நாம் தொலைத்துவிட்டோம். அந்த வகையில் நாம் முதலில் தொலைத்தது நம்முடைய பாரம்பரிய உணவுகள் தான்.

    இதுதான் அனைத்து சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமாகி விட்டது. பாரம்பரிய உணவை விட்டதால் பல்வேறு நோய்களுக்கும், உடல் ஒவ்வாமைக்கும் ஆளாகி விட்டோம். இதனால் அந்த உணவை இழந்ததோடு, தற்போது வாங்க முடியாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது.

    அதோடு பாரம்பரிய தொழில்களில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுவித்து கொண்டோம். இதனால் இன்று சுயதொழில் என்பதே வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு வேலைக்கு கூலிக்கு செல்பவர்களாகவே இருக்கிறோம். கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. இதற்கு காரணம் அந்த கலைகளின் நுட்பங்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தராததும், அதுகுறித்து முறையாக பதிவு செய்யாததும் காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல் பாரம்பரிய ஆடைகளை விட்டு விட்டோம். அதோடு அந்த வகை ஆடை அணிபவர்களை மதிப்பு குறைந்தவர்களாக நாமே கருத தொடங்கிவிட்டோம். ஆனால் அதே ஆடைகளை பிறர் அணிந்தால் அவர்களை உயர்வாக மதிப்பிடும் முரண்பாடான மனநிலையும் நம்மிடையே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

    காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம். காரணம் அவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர மறுத்துவிட்டோம். இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெற்று வந்த மகிழ்ச்சியை கொடுக்க தவறிவிட்டோம். இதனால் அவர்கள் செல்போனில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

    சில சாதாரண பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது. தற்போது மேலும் ஒருபடி மேலே போய் வன்முறை மனநிலை நிறைந்த விளையாட்டாக மாறிவிட்டது. இளம் வயதிலேயே தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது.

    வீட்டில் பெரியவர்களுக்கு உரிய இடம் தர மறுத்து வருகிறோம். இதனால் வீட்டில் பழங்கால பொருட்களும் குப்பைக்கு போய் விட்டன. பாரம்பரிய சடங்குகளை மறந்து வருகிறோம். பெரியவர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டதன் காரணமாக பல்வேறு சுமைகளுக்கு ஆளாகி, அதை சுமக்கவும் தெரியாமல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறோம். எனவே பழையது, முடிந்துபோனது, வரவேற்பு இல்லாதது என்று ஒதுக்கி விடாமல் குழந்தைகளுக்கு பாரம்பரிய கலாசாரத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாமும் கற்று கொள்ள வேண்டும்.

    இந்தியா என்பது பாரம்பரிய, பண்பாட்டுக் கூறுகளால் தான் வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதுவே தனி மனிதர்களை மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தையும் யாரும் வீழ்த்தி விடாமல் காத்து வருகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

    • மருந்துகளை குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்ககூடாது.
    • பெற்றோர்களும், குழந்தை காப்பாளர்களும் இதனைப்பற்றி அறிவது அவசியம்.

    அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே பெற்றோர்களும், குழந்தை காப்பாளர்களும் இதனைப்பற்றி அறிவது அவசியம்.

    * குழந்தைகள் சமையலறையில் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்கவும். சூடான எண்ணெய், சூடான தண்ணீர், தீப்பட்டி போன்ற பொருட்களை கையாளுவதால் தீக்காயம் ஏற்படலாம். கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம்.

    * மிக்ஸி, அயர்ன்பாக்ஸ், சுவிட்ச்போர்டு போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம். போன்ற கருவிகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது கவனமாக இருக்கவும்.

    * மண்எண்ணெய், பெட்ரோல், பூச்சிக்கொல்லி போன்ற ஆபத்தான திரவியங்களை கை எட்டும் தூரத்திலோ, அல்லது குளிர்பானம் அருந்திவிட்டு காலியான பாட்டில்களிலோ ஊற்றி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனை குழந்தைகள் அறியாமல் குடிப்பதனால் பாதிப்பு ஏற்படலாம்.

    * நாணயங்கள், ஊசிவகைகள், பேட்டரி, ஆணி, ரசகற்பூரம், கண்ணாடி, போன்ற சிறிய அளவிலான பொருட்கள் மற்றும் குழந்தைகளின் உள்ளங்கை அளவில் அடங்கும் பொருட்களை கையாளக் கூடாது. இப்பொருட்களை விழுங்குவதால் தொண்டை மற்றும் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்.

    * கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய்யை தற்செயலாக உட்கொண்டால் வலிப்பு ஏற்படலாம்.

    * வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளும் குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்ககூடாது. தற்செயலாக உட்கொண்டால் பாதிப்பு ஏற்படலாம்.

    * செல்போன் (கைபேசி) தொலைக்காட்சி, மடிக்கணினி அளவோடு உபயோகிக்க வேண்டும். செல்போன் அதிகமாக உபயோகிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி மைல்கல்லில் பாதிப்பு ஏற்படலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக பராமரித்தால், அவற்றின் மூலம் வரும் விளைவுகளை முற்றிலும் தடுக்க முடியும்.

    டாக்டர்.என்.நரேஷ்குமார்

    • பத்து வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு தனியாக படுக்கை அமைத்துக் கொடுக்கவும்.
    • குழந்தைகளுக்காகவே வாழும் நிலைக்குப் பெற்றோர் தள்ளப்படுகின்றனர்.

    பத்து வயதுக்கு மேல் நம் குழந்தைகளைத் தனியாகப்படுக்கப் பழக்கப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இது வழக்கமாக உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. நம் ஊரில், வளர்ந்த பின்னும் குழந்தைகள், பெற்றோருடன் உறங்குவதே நடக்கிறது. குழந்தைகளுக்காகவே வாழும் நிலைக்குப் பெற்றோர் தள்ளப்படுகின்றனர். அவர்களது பிரைவசி காணாமல் போகிறது. கணவன், மனைவிக்குள் நெருக்கம், இறுக்கம் எல்லாம் தொலைந்து, சுவாரஸ்யம் அற்ற வாழ்க்கைக்குப் பழகிவிடுகிறார்கள். இது, அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்னைகள் உருவாகவும் வழிவகுக்கிறது.

    குழந்தைக்காக அடிப்படைத் தேவைகளையும் தியாகம் செய்யும் நிலை தேவையற்ற ஒன்று. கணவனும் மனைவியும் இணைந்து வாழத்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். குழந்தை என்பது அந்த வாழ்வின் ஒரு பகுதி. இதைக் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும். பத்து வயதுக்கு மேல் அவர்களுக்கு எனத் தனியாக படுக்கை அமைத்துக் கொடுக்கவும். வளர்இளம் பருவத்தை எட்டும்போது தனியறையில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். தனக்கான வாழ்வைப் பற்றித் திட்டமிடவும், கனவு காணவும், சிந்திக்கவும் இந்தத் தனிமை குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கும்.

    உடல், மனக் குழப்பங்களை நீக்குங்கள்

    பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம். பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்னையாக உணர்கின்றனர். இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.

    ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும். மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர். மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம். பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும்.

    • 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
    • பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...'' என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?

    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?

    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ

    நடக்கிறதா?

    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?

    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?

    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,

    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

    சிகிச்சைகள்...

    நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!

    • தங்கள் வேலைகளை மவுனமாக செய்யும் குழந்தைகளை நாம் பாராட்டுவது கிடையாது.
    • தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மவுனமாக இருப்பார்கள்.

    மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களை கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மவுனமாக இருப்பார்கள்.

    ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக்கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளை பேச விட்டு் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும். அதுவும் பரிவோடு பேச வேண்டும்.

    மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா? என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மவுனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மவுனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.

    அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவ கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸ் மற்றும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றை பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர். பேசாமலும் தங்கள் வேலைகளை மவுனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாசாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.

    ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையை போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது. மவுனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்கு புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மவுனமாக இருக்கிறது. புதிய சூழலுக்கு பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகுப்புக்கு போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருப்பார்கள். அந்த மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம்.

    பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்.காது கேளாமை, கரும்பலகையில் எழுதி இருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனவே குழந்தையிடமே குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

    • பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
    • மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று.

    மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று. மகிழ்ச்சி மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது மதித்தல் என்ற நற்பண்பு ஆகும். நாம் மற்றவரை மதிக்கும் போது நாமும் மதிக்கப் படுகின்றோம். யார் ஒருவர் மற்றவர்களை மதிக்கின்றார்களோ அவர்கள் ஒழுக்கமானவர்கள், பணிவானவர்கள் மற்றும் பிறரை கௌரவ படுத்துபவர். அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். இப்படி பட்டவர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுகின்றனர்.

    நம்மை நாமே மதித்துக் கொள்வது மற்றும் மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வரையறுப்பது சுய மரியாதை ஆகும். சுயமரியாதை தான் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக இருக்கும். சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும். புகழ் மற்றும் கௌரவத்தை கொடுக்கும். சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நம் ஒப்புதல் இல்லாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். நாம் அதன் படி செயல் பட வேண்டி வரும்; நம் இயற்கைக்கு மாறாக செயல் பட நேரிடும்.

    குழந்தைகள் தவறு செய்யும் போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது; தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் "இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய்"? "மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா தவறா என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும்.

    இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும் போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறு இழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும் பொது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள்.

    மற்றவர்களோடு இனிமையாக பழகும் கலையை வளர்த்துக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.

    • குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர்.
    • மறுமணம் செய்த பெற்றோர் குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிகள் இதோ…

    சூழ்நிலையின் காரணமாக விவாகரத்து மற்றும் துணையின் இழப்பை சந்திப்பவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு புதிய வாழ்வில் ஈடுபடும்போது, இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருக்கலாம். அந்தக் குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர். இதை வெற்றிகரமாக எதிர்கொண்டு குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிகள் இதோ…

    யதார்த்தத்தை விளக்குங்கள்: உங்கள் துணையின் இழப்போ, பிரிவோ உங்களை விட குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில் இழந்த உறவின் இடத்தில் மற்றொருவரை உடனே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சமயத்தில், புதியவருடன் மறுமணம் செய்து கொள்ளும்போது, அது குழந்தைகளுக்குக் குழப்பத்தை தரும். இது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மறுமணம் செய்ய முடிவு எடுக்கும் முன்பு, அதற்கான காரணத்தை குழந்தைகளுக்கு விளக்குங்கள். குழந்தைகளின் சம்மதம் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

    வெளிப்படையாக இருங்கள்: நீங்கள் மறுமணம் செய்யப்போகும் முடிவை பிள்ளைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அதை அவர்களிடம் திணிக்க முயற்சிக்கக் கூடாது. இது பிள்ளைகளை மூர்க்கத்தனமான நட வடிக்கைகளில் ஈடுபட வைக்கும். புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். புதிய உறவைப் பற்றிய விஷயத்தில் குழந்தைகளுடன், முடிந்தவரை வெளிப்படையாக இருங்கள்.

    எதிர்பார்ப்பைக் குறையுங்கள்: நீங்கள் திருமணம் செய்துகொள்பவருக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் எப்படி அன்புடன் இருப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டால், எப்போதும்போல பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். புதிய உறவு வந்தாலும், அவர்களது முந்தைய உறவில் பாதிப்பு வராது என்று உணர்த்த வேண்டும். இது உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். நீங்கள் வாழ்க்கையில் மற்றொரு நபரை ஏற்றுக்கொள்வது, உங்கள் பிள்ளைக்குக் கடினமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    விஷயங்களை எளிதாக்குங்கள்: நீங்கள் துணையை இழந்து இருந்தால், இரண்டாவது நபருடன் வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்பு, உங்கள் பிள்ளைகள் பெற்றோருக்காக ஏங்காத வகையில், அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். குடும்பமாக ஒன்றாக அதிக நேரம் செலவிடுவது, உங்கள் குழந்தை புதிய உறவுடன் எளிதாக ஒன்றுபட உதவும். பிரிந்த பெற்றோரின் நினைவை ஏற்படுத்தும் பழைய இடங்களுக்குச் செல்வதை விட, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றாக செய்யக்கூடிய செயல்களில் அதிகமாக ஈடுபட வேண்டும்.

    • குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்
    • இயற்கையை சார்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம்.

    "குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இயற்கை மீது ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் உண்டாக்கினால், சுற்றுச்சூழலைக் காப்பது எளிதாக இருக்கும்" என்கிறார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுபாங்கி. 13 ஆண்டுகள் ஐ.டி. துறையில் பணிபுரிந்த இவர், அப்பணியில் இருந்து விலகி தற்போது குழந்தைகளுக்கு செடிகள் வளர்ப்பது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    ஊட்டச்சத்துள்ள மண், இயற்கை உரம் ஆகியவற்றை தயாரித்தும் விற்பனை செய்கிறார். அவரிடம் பேசியபோது… தாத்தா-பாட்டி காலத்தில் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே மண்ணில் விளையாட ஆரம்பிப்பார்கள். மரம், செடி, பறவை, விலங்கு போன்றவற்றுடன் பழகி இயற்கையோடு கலந்து வாழ்ந்தார்கள். அதனால் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்போது பல பெற்றோர்கள், பாதுகாப்பு என்ற பெயரில் குழந்தைகளின் இயல்புகளை மாற்றிவிட்டார்கள்.

    ஒருமுறை தடுப்பூசி போடுவதற்காக என்னுடைய குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அப்போது மற்றொருவர் தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார். அவர் குழந்தையைத் தரையில் விடாமல் மெத்தையிலேயே வளர்த்திருக்கிறார். எனவே அந்தக் குழந்தைக்கு தரையில் நடக்கவே தெரியவில்லை. மெத்தையில் தான் இயல்பாக இருக்கிறது. இவ்வாறு பெற்றோர் அளவுக்கு மீறி பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

    எனது குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பினேன். அதனால் அவர்களை செடிகள் நடுவது, மண்ணில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தினேன். பள்ளியில் செய்முறை பயிற்சிகள் ஏதாவது கொடுத்தால் அதற்கான பொருட்களைக் கடைகளில் வாங்காமல் இயற்கையாகவும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயாரிப்பு எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

    பின்பு இதை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். தாவரங்களையும் குழந்தையாகப் பாவித்ததால், அவையும் ஊட்டச்சத்துள்ள மண், உரம் ஆகியவை இருந்தால் தான் ஆரோக்கியமாக வளர முடியும் என்று தோன்றியது. இதற்காக ரசாயனங்கள் கலந்த மண் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை.

    எனவே தீமை செய்யும் கிருமிகளை அழிக்கும் வகையில், ரசாயனங்கள் இல்லாமல் வேப்பிலையில் உரம் மற்றும் மண் கலவை தயாரிக்க ஆரம்பித்தேன். அவற்றை ஒன்றரை வயதுக் குழந்தைகள்கூட கையாண்டு செடி வளர்க்க முடியும். தாவரங்களை வளர்ப்பதற்குத் தேவையானப் பொருட்களை சுத்தமாகவும், உயர்தரத்திலும் தயாரித்து வருகிறேன். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிந்தது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இயற்கையை சார்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமானது" என்றார் சுபாங்கி.

    • இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம்.
    • குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை.

    இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம்.

    பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம்.

    முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல் குழந்தையைப் பற்றிய பேச்சும் வருமாறு பார்த்துக் கொள்ளலாம்.

    இரண்டு குழந்தைகளுக்கும் ஏதேனும் வாங்கி வந்தால் அதை முதல் குழந்தையிடமே கொடுத்து நீ எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கும் கொடுத்து விடு எனக்கூறி முதல் குழந்தையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம்.

    இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சணை பெரிதாகும் போது எப்போதும் சிறிய குழந்தைக்கு மட்டும் பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு இருவருக்கும் பொதுவாகப் பேசலாம் அல்லது நடுநிலைமை வகித்து ஒருவரையும் திட்டாமல் இருக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் முதல் குழந்தையின் மீதான கவனம் குறையவில்லை என்பதை பெற்றோர் உணர்த்தி விடலாம்.

    இவ்வாறு பெற்றோர்களால் சமமாக நடத்தப்படும் குழந்தைகளிடையே சகோதரப் பாசம் அதிகரித்து நல்லுறவு நீடிக்கும். உடன் பிறந்தோரிடம் நிலவும் இந்நல்லுறவு இரு குழந்தைகளின் மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணைநிற்கும். அன்பு, பாசம் ஆகியவற்றின் ஆதாரமாக அமையும். விளையாட்டு, நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவும்.

    • மனதில் பல குழப்பங்களும் தோன்றும்
    • ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும்.

    குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு. 

    ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும்.

    மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர்.

    மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம்.

    பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும்.

    10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பையின் செயல்பாடுகள், விந்து வெளியேற்றம் பற்றி சொல்லிக்கொடுங்கள். 'பிறப்புறுப்பை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?', 'ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?' என்பது குறித்தும் அப்பாக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவயதில், ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னாளில் குழந்தை அப்பாக்களுடன் பேசுவதை சௌகரியமாக உணரும். 

    ஆண் குழந்தையின் வித்தியாசமான செய்கைகள் பெற்றோருக்குத் தெரிந்த பிறகு குழந்தையால் இயல்பாக மற்ற வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றால், தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள்.

    ×