என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger shadowing"

    • மர்மநபர்கள், இரும்பு சேர்கள், எவர்சில்வர் பைப்புகளை ஆக்‌ஷா பிளேடு, சுத்தியல் கொண்டு உடைத்து அறுத்து திருடிச் சென்றுள்ளனர்.
    • திருடிச் சென்ற சேர் மற்றும் எவர் சில்வர் பைப்புகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் ரவிக்குமார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இந்த நிழற்குடை முழுக்க முழுக்க இரும்பு மற்றும் எவர் சில்வர் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டது. இங்கு பயணிகள் அமர்வதற்கான சேர்கள் இரும்பு மற்றும் எவர்சில்வரால் அமைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் நேற்று இரவு முதல் மடப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனை தங்களுக்கு சாதக மாக பயன்படுத்திய சில மர்மநபர்கள், பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்கள், எவர்சில்வர் பைப்புகளை ஆக்ஷா பிளேடு, சுத்தியல் கொண்டு உடைத்து அறுத்து திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல அங்கு வந்த பொதுமக்கள் பயணியர் நிழற்குடையில் சேர்கள் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மடப்பட்டு ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஊராட்சி தலைவர் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 


    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பயணியர் நிழற்குடையில் இருந்த மர்ம நபர்கள் திருடிச் சென்ற சேர் மற்றும் எவர் சில்வர் பைப்புகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், மடப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். குடியிருப்பு கள் அதிகம் உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தாலே, குற்றச் சம்பவங்களில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்யமுடியுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்குமா என பொது மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

    ×