search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pattanapravesa festival"

    • ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழா.
    • ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.

    சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இந்த ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு, சமூக பணி, சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருநாளான நேற்று இரவு ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள், மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாக்கோலம் பூண்டது.

    திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் 1,00,008 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.

    தொடர்ந்து, பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வாணவேடிக்கை முழங்க 30 நாதஸ்வரம், தவில் வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.

    வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை வந்தடைந்தார். அங்கு அவர் அதிகாலை சிவஞான கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×