search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penstock"

    மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து கல்லணையில் மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.
    திருக்காட்டுப்பள்ளி:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பகிர்ந்தளிக்கும் அணையாக கல்லணை உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியும், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதியும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதியும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதியும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதியும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மிக தாமதமாக அக்டோபர் 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    தற்போது கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் நாளை(வியாழக்கிழமை) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். முதல்- அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதகுகளை ஏற்றி இறக்கும் எந்திரங்களை துடைத்து மசகு எண்ணெய் வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மதகுகள் அனைத்துக்கும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. கல்லணையில் உள்ள கரிகாலன், அகத்தியர், காவிரி அன்னை, ராஜராஜன் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் மேட்டுர் அணை தண்ணீரை எதிர் நோக்கி புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நாளை(வியாழக்கிழமை) திறக்கப்படும் தண்ணீர் 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×