search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Material"

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஒன்றான நெய்யப்படாத கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தியுள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. அதில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது. அதில் பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும்.

    பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர். அதே சமயத்தில் பாலிப்புரப்பிலீன் பைகள் (நெய்யப்படாத கைப்பைகள்), அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால், அதை துணிப்பை என மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே நெய்யப்படாத கைப்பைகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களே ஆகும்.

    ஆங்கில புத்தாண்டு முதல் தமிழகம் தனது பயணத்தை “பிளாஸ்டிக் மாசில்லா“ மாநிலமாக தொடங்கப்பட்டிருந்தாலும், இவ்வகை நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இது போன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    திருப்பூர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பொருட்களை யாராவது பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது பாலித்தீன் மொத்த விற்பனை கடைகளுக்கு சென்று சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிகளில் உள்ள சில கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகஅளவு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்படி அங்கு விரைந்து சென்ற அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அங்குள்ள ஒரு மளிகை கடையில் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி சுமார் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது போல பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PlasticBan
    தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராமேசுவரம்:

    தமிழக அரசு ஜனவரி 1-ந் தேதி முதல் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

    அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவுக்கடைகள், மளிகைக் கடைகள், தேனீர் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

    ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் முதல் உணவு கடைகள் என பெரிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சோதணை நடத்தினர். அப்போது 66 கடைகளில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன்னுக்கும் மேலான ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுத்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இந்த சோதனையில் ராமேசுவரம் வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவா, செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பை, உறிஞ்சுகுழல் உள்பட 14 வகையான பொருட்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. மேலும் அவற்றுக்கு பதிலாக துணிப்பை, கண்ணாடி டம்ளர், வாழை இலை, மந்தார இலை, தாமரை இலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், அவற்றுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் வேலூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் இடையே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு அறிவித்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது.

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய 400 பேர் கொண்ட குழு, கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று காலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக நிறுவன குடோன்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், 2-வது மண்டல உதவிகமிஷனர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர், சுண்ணாம்புக்கார தெரு, ரொட்டிக்கார தெரு, அண்ணா பஜார், சிட்டிங் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை பறிமுதல் செய்தனர்.

    மண்டித்தெரு, லாங்குபஜார் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கைப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோன்று 1,3,4-வது மண்டலத்திலும் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், லூர்துசாமி, சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், 2-வது மண்டலத்தில் 1 டன், 3-வது மண்டலத்தில் 55 கிலோ, 4-வது மண்டலத்தில் 200 கிலோ என 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி, சிற்றுண்டி கடைகளிலும் வாழை இலைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது. உணவுப்பொருட்கள் பார்சல் பெற்று சென்றவர்களிடம் பாத்திரம் கொண்டு வரும்படி கடைக்காரர்கள் அறிவுறுத்தினார்கள். சில ஓட்டல்களில் பார்சலில் வழங்கும் உணவுப்பொருட்களுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இறைச்சி கடைகளில் வாழை இலைகளில் சிக்கன், மட்டன் ‘பேக்கிங்’ செய்யப்பட்டது. மளிகை கடைகளில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் கடைக்கு வரும்போது கைப்பை கொண்டு வரவேண்டும் என பொதுமக்களை வியாபாரிகள் அறிவுறுத்தினர். துணிப்பைகளில் தேவை அதிகரிப்பு காரணமாக அதன் விலையும் அதிகமாகி உள்ளது.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.

    தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
    எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முத்துராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சேலம்:

    தமிழகத்தில் 14 வகையான “பிளாஸ்டிக்” பொருட்களை பயன்படுத்த நேற்று முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, கடைகளில் பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள 204 அரசு டாஸ்மாக் கடைகளிலும், அதனுடன் உரிமம் பெற்று நடத்தி வரும் பார்களிலும் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதில் தண்ணீர் பாட்டில்கள், சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பார் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட 5 குழுவினர் சேலம், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    மேலும் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார்களில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அரசின் உத்தரவுபடி டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். மீறி பயன்படுத்தப்படும் பார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் சங்ககிரி, வாழப்பாடியில் உள்ள பார்களில் பிளாஸ்டிக் டம்ளர் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
    தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. #PlasticBan
    சென்னை:

    தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரரத்னு, சந்தோஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



    பிளாஸ்டிக் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூட்டத்தில் திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. #PlasticBan
    பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக பயன்படுத்த 12 வகை மாற்று பொருட்களை கடைகளில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. #PlasticBan
    சென்னை:

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிகம் முழுவதும் நாளை (1-ந்தேதி) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    1-ந்தேதிக்கு பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்க சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை அலுவலர், போலீஸ் அதிகாரிகள் இடம் பெறுகிறார்கள்.

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    பிளாஸ்டிக் சீட், உணவு இருந்தும் மேஜையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் தெர்மகோல் பிளேட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய், பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் ஜாடிகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பாலி புரொப்லின் பைகள், பிளாஸ்டிக் டீ கப், தெர்மகோல் கப், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை தடை செய்யப்பட உள்ளன.

    அதற்கு பதிலாக பயன்படுத்த 12 வகை மாற்று பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாழை இலை, பனை பொருட்கள், கண்ணாடி டம்ளர்கள், பீங்கான் குவளைகள், மூங்கில் பொருட்கள், காகித பை, காகித குழல், துணி - சணல் பைகள், அலுமினிய பொருட்கள், மண்பாண்ட வகைகள், தாமரை இலை, உலோக டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதை கடைகளில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தென்மண்டல பிளாஸ்டிக் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர ரத்னு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க 6 மாத காலம் அவகாசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். அதன் பிறகே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை அமல்படுத்த உள்ளோம். இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தினோம். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் கால அவகாசம் கொடுக்கவில்லை.

    அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் முன்னுதாரணமாக இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பெரிய நகரங்கள், டவுன் பஞ்சாயத்துகள், மாவட்டங்களில் மக்கள் வந்து செல்லும் இடங்களான பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மூலமும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

    மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கும், விற்பனை செய்ய விரும்புபவர்களுக்கும், இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.

    தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வந்தால் சோதனைசாவடியில் நிறுத்தி பறிமுதல் செய்ய மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, பயன்படுத்தினாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    சிவகங்கையை அடுத்த கோட்டையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கோட்டையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கவுஸ் முகைதீன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணியின்போது, தமிழகம் முழுவதும் வருகிற 1-1-19 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என்றும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் வரும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் துணிப்பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கோட்டையூரில் உள்ள தெற்கு ஊருணியில் பேரூராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். 
    அய்யலூர் பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வடமதுரை:

    பிளாஸ்டிக் பொருட்களினால் அதிக பாதிப்பு ஏற்படுவதால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் சில வியாபாரிகள் லாப நோக்கத்துக்காக பிளாஸ்டிக் பை, கப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அய்யலூர் பேரூராட்சியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று வார ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.

    இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசூப் தலைமையில் ஊழியர்கள் சந்தை மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அபராதம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்து சென்றனர். #tamilnews
    சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
    சங்கரன்கோவில்:

    அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதுமாக தடை செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின்படி, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பிச்சையாபாஸ்கர், சக்திவேல், மாதவ ராஜ்குமார், கோவில்பட்டி முருகன், தென்காசி மாரிமுத்து, ராஜபாளையம் வேலுமணி மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், நகராட்சிப்பணியாளர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

    சுவாமி சன்னதி தெரு, ராஜபாளையம் சாலை, மெயின்ரோடு, சாந்தி காம்ப்ளக்ஸ் பகுதி, ராஜபாளையம் ரோடு, திருவேங்கடம் சாலை, வடக்கு ரத வீதி, தெற்குரதவீதி ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. இதில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டது. #tamilnews
    சுற்றுப்புற தூய்மையை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சித்தார்கோட்டை கிராமத்தில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை ஆகியவை தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசிய தாவது:-

    கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்கான நடவடிக் கைகள், படித்த வேலை வாய்ப்பற்ற 18 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி மற்றும் ஆர்வத்திற்கேற்ப பயிற்சி வழங்கி சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2019-ம்ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பிற்கு கூடுதல் வலுசேர்த்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.7.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைவரும் சுற்றுப்புறத்தூய்மைக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதை தொடர்ந்து, சித்தார் கோட்டை கிராமத்தில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டிற்கான கட்டுமானப் பணிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் சுற்றுப்புறத்தினை பாதுகாத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் மரக்கன்றுகள் நடவு திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து முடிவீரன்பட்டினம் கிராமத்தில் பொதுமக்கள் உபயோகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பயன்பாடுகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமர் ஜாமியா, சேவுகபெருமாள், ராமநாதபுரம் வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×