search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Play Ground"

    • ராயபுரம் ராபின்சன் மைதானத்தில் பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்க்க ஏற்பாடு.
    • தீக்காயம் அடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

    ராயபுரம்:

    கத்தாரில் நேற்று நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் வகையில் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கால்பந்து இறுதி போட்டியை ரசிக்க நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் அந்த மைதானத்திற்கு வந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் கோல் அடித்த போது உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து பறந்து சென்று வெடித்தது.

    இதனால் அந்த கூட்டத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ராகேஷ் மற்றும் ரகுனேஷ் உடலில் தீப்பற்றியது. இதனால் கூட்டத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. உடனடியாக அங்கிருந்த சிலர் தீயில் கருகிய மாணவர்கள் 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் மாணவர் ரகுனேசுக்கு முகம், தாடை, தோள் பட்டை, கையிலும், ராகேசுக்கு முதுகிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெரிய திரையில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை பார்த்து ரசித்து சென்றனர்.

    ×