என் மலர்
நீங்கள் தேடியது "PMK Member Murder"
- பா.ம.க. பிரமுகர் ஆதித்யன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- கொலை சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 45). விழுப்புரம் மாவட்ட பா.ம.க. துணை செயலாளராக இருந்தார்.
நேற்று இரவு இவர் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் பனையபுரம் பகுதியில் இருந்து கப்பியாம் புலியூருக்கு சென்று கொண்டு இருந்தார்.
வாதானூரான் வாய்க்கால் அருகே விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் சென்ற போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஆதித்யனை வழிமறித்தது.
அந்த கும்பல் கையில் அரிவாள் வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதித்யன் தனது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
உஷாரான அந்த கும்பல் ஆதித்யனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
இதனை பார்த்த கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கொலை நடந்த இடம் பிரதான சாலையாகும். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொலையாளிகள் தங்களது திட்டத்தை கணகச்சிதமாக நிறைவேற்றி உள்ளனர்.
பா.ம.க. பிரமுகர் ஆதித்யன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கொலை செய்யப்பட்ட ஆதித்யனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், முன்விரோதத்தில் கூலிப்படையை ஏவி பா.ம.க. பிரமுகர் ஆதித்யன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் 20 பேரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை இந்த கொலை பற்றிய தகவல் அறிந்த பா.ம.க. பிரமுகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆதித்யனின் உறவினர்கள் போலீசாரிடம் கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.