search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Podhuavaudiyar Temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.
    • கார்த்திகை சோமவாரம் விசேஷமானது.

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரக் கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. தவத்தில் சிறந்து விளங்கிய வான்கோபர் மற்றும் மகாகோபர் என்ற இரு முனிவர்களும், 'இறைவனைச் சென்றடைய சிறந்த வழி இல்லறமா? துறவறமா?' என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இறைவன் இத்தலத்தில் உள்ள வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளினார்.


    பின்னர் அந்த முனிவர்களிடம் 'இல்லறமோ, துறவறமோ எதுவாயினும் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றினால் ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை' என பொதுவாகத் தீர்ப்பு கூறினார்.

    அதன்காரணமாகவே இத்தல இறைவன், 'பொது ஆவுடையார்' என்றும், மத்தியஸ்தம் செய்தவர் என்பதால் 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலில் கார்த்திகை சோமவாரம் விசேஷமானது. அன்று இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. மற்ற நாட்களில் நடை திறக்கப்படுவதில்லை.

    இறைவன் சிதம்பரத்தில் நள்ளிரவு பூஜை முடித்த பிறகு, தனது பரிவாரங்களுடன் இத்தலத்து வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளி, அந்த மரத்திலேயே ஐக்கியமானார் என்கிறது தல வரலாறு. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம்.

    இங்குள்ள தல மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது. பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும்.


    மேற்கு நோக்கி வீரசக்தி விநாயகர் சன்னிதியும், அருகில் திருக்குளமும் உள்ளன. அம்பாளுக்கென்று தனி சன்னிதி இல்லை. விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள புளிய மரத்தின் அடியில் அலங்கார உடையில் வான்கோபரும், துறவற உடையில் மகாகோபரும் வடக்கு நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    இந்த ஆலமரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. எனவே பக்தர்களுக்கு இலையும், திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

    இக்கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றால் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய் கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

    பட்டுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ. தூரத்தில், முத்துப்பேட்டை செல்லும் பேருந்து வழித்தடத்தில் இருக்கும், பரக் கலக்கோட்டையில் உள்ளது, இந்த பொதுஆவுடையார் திருக்கோவில்.

    ×